Monday, February 22, 2021

கே. ஆர். விஜயா தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் கொண்ட கே. ஆர். விஜயா -

தெய்வநாயகிஎன்னும் இயற்பெயர் கொண்ட 

கே. ஆர். விஜயா அவர்கள், இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் 19-02-1947 ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த அன்று "மகா சிவராத்திரி" புனிதமான நாள். இவருக்கு மூத்த சகோதரர் ஒருவரும் வத்சலா, சாவித்திரி ராதா, சசிகலா ஆகிய நான்கு இளைய சகோதரிகளும் உண்டு.

அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், இவருடைய தாயார் கேரளா என்பதால் திருமணத்திற்குப் பிறகு கேரளாவில் வசித்து வந்தனர். பின்னர், தமிழ்நாட்டிலுள்ள பழனிக்குக் குடிபெயர்ந்தனர். தன்னுடைய குழந்தைப் பருவத்தை பழனியில் கழித்த அவர், பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதிலும், நடனம் ஆடுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவரது நாட்டிய நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்த ஜெமினி கணேசன் அவர்கள் "இந்தப் பெண் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுரா. பின்னாளில் மிகச்சிறந்த நடிகையாக புகழ் பெறுவார்" என்று வாழ்த்தினார்.



ஜெமினி கணேசன் அவர்களின் வாழ்த்து பலிதமாகியது. ஆம்! அவர் வாழ்த்திய அடுத்த ஒரு வருடத்தில் விஜயா சென்னைக்கு வந்து "இயக்குனர் திலகம்" கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய "கற்பகம்" திரைப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்துப் புகழ் பெற்றார். அதுமட்டுமல்ல, அவரை வாழ்த்திய ஜெமினி கணேசன் அவர்களுடனே நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது தெய்வனுக்கிரகம் என்றே சொல்லலாம்.

1963 ஆம் ஆண்டு வெளிவந்த "கற்பகம்" திரைப்படத்தில் முதலில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன்பின் கைவிடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கே.எஸ்.ஜி அவர்கள் "தூண்டாமணி விளக்கு" என்ற தலைப்பில் சொன்னது இந்தக்கதை தான். என்ன காரணத்தாலோ இருவரும் நடிக்க இயலாமல் ஆனதால் தானே அந்தக்கதையை திரைப்படமாக எடுக்கும் முடிவுக்கு வந்தார் கே.எஸ்.ஜி.

இந்தப்படம் வெளிவந்த அதே தினத்தில் எம்.ஜி.ஆர் நடித்த "பரிசு" மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "அன்னை இல்லம்" ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகியிருந்தது. அந்த இரண்டு படங்களுக்கும் ஈடு கொடுத்து கே.எஸ்.ஜியின் "கற்பகம்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்ல, அதுவரை திரைக்கதாசிரியராகவும், இயக்குனராகவும் மட்டுமே இருந்து வந்த கே.எஸ்.ஜி அவர்களை ஸ்டுடியோ அதிபராக உயர்த்தியது இந்தப்படம். ஆம்! கற்பகம் ஸ்டுடியோ இந்தப்படத்தின் வெற்றியால் வாங்கப்பட்டது.

கற்பகம் திரைப்படத்தின் வெற்றி கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிக்க வைத்தது. நடிகர் திலகத்துடன் "சரஸ்வதி சபதம்", "திருமால் பெருமை", "திருவருட்செல்வர்", "கந்தன் கருணை", "இரு மலர்கள்", "ஊட்டி வரை உறவு", "ராமன் எத்தனை ராமனடி", "தங்கப்பதக்கம்", "திரிசூலம்", "நான் வாழவைப்பேன்", "ரிஷிமூலம்", "கல்தூண்", "சத்திய சுந்தரம்", "ஜெனரல் சக்கரவர்த்தி", "மிருதங்க சக்கரவர்த்தி", "தராசு", என பல திரைப்படங்களில் நடித்தார் விஜயா.

எம்.ஜி.ஆருடன் இணைந்து "தொழிலாளி", "தாழம்பூ", "விவசாயி", "நான் ஏன் பிறந்தேன்", "நல்லநேரம்" போன்ற படங்களில் நடித்திருந்தார் விஜயா.

மீண்டும் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் "செல்வம்", "கை கொடுத்த தெய்வம்", "சின்னஞ்சிறு உலகம்" போன்ற படங்களில் நடித்தார் விஜயா. அவரது நூறாவது திரைப்படமான "நத்தையில் முத்து" 200 வது திரைப்படமான "படிக்காத பண்ணையார்" திரைப்படங்களும் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசீகரமான முகம், அழகுப் புன்னகை, கட்டான உடலழகு, இனிமையான குரல் கே.ஆர்.விஜயாவுக்கு அதிக அளவில் ரசிகர்களை ஏற்படுத்தி தந்தது. திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற தருணத்தில் சுதர்சன் சிட் பண்ட்ஸ் அதிபர் திரு.வேலாயுதம் என்பவரை 1966 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கே.ஆர்.விஜயாவுக்கு ஹேமலதா என்ற பெண் இருக்கிறார். இவர் இயக்குனர் பி.மாதவன் அவர்கள் தயாரிப்பில் கே.ஆர்.விஜயா நடித்த "முகூர்த்த நாள்"(1967) திரைப்படத்துக்கு நிதி உதவி வழங்கினார். அவர் நிதி உதவி வழங்கிய முகூர்த்த நாள் கே.ஆர்.விஜயா, வேலாயுதம் இருவருக்கும் நிஜமாகவே "முகூர்த்த நாளாக" அமைந்தது. அதுமட்டுமல்ல, திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று இருந்த விஜயாவை வீடு தேடி வந்து சின்னப்பா தேவர் அவர்கள் தனது அடுத்த தயாரிப்பான "அக்கா தங்கை" படத்துக்கு சௌகார் ஜானகியின் தங்கையாக நடிக்க வைத்தார். வேலாயுதம் மிகச்சிறந்த மனிதர். பல திரைப்படங்களுக்கு நிதி உதவி செய்தவர். பிறருக்கு வழங்கி மகிழ்வதில் வேலாயுதம்,விஜயா இருவருமே சிறந்தவர்கள். சிவாஜி, கே.ஆர்.விஜயா, ரஜினி நடித்திருந்த "நான் வாழவைப்பேன்" மற்றும் விஜயா, மோகன் சர்மா இருவரும் நடித்த "நாடகமே உலகம்" படங்களையும் தயாரித்தவர் வேலாயுதம் தான். கடந்த நான்கு வருடங்கள் முன் வேலாயுதம் அவர்கள் காலமானார். திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக விஜயா சென்றிருந்தபோது ரசிகர் கூட்டம் அலைமோதியது. அந்த ரசிகர்களின் அன்பினால் அவருக்கு வழங்கப்பட்டது தான் "புன்னகை அரசி" என்ற பட்டம். அதிக படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர் கே.ஆர்.விஜயா அவர்கள் தான். 

No comments:

Post a Comment