Wednesday, January 17, 2024

பெண்களே... வீட்டின் கண்களே

 


பெண்களே... வீட்டின் கண்களே இது உங்களுக்காக

1. ஒரே மூச்சில் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து விட எண்ணாதீர்கள். அப்படி செய்த பாதி உயிர்கள் மருத்துவமனையில். மீதி உயிர்கள் அவரவர் மத நம்பிக்கைப்படி சொர்கத்திலோ நரகத்திலோ.

 

2. சிறிது நேரம் 'அக்கடா' என்று உட்கார்ந்து பழகுங்கள். சிறிது நேரம் அமர்வதிலோ அல்லது சோபா நாற்காலியில் காலை நீட்டிப்போட்டு படுத்தபடி ஒரு கையில் பாலகுமாரன் நாவலும் மறுகையில் சோளப்பொரியுமாக இருப்பது ஒன்றும் தெய்வகுற்றமில்லை.

 

3. உறக்கம் வருகிறதா? படுத்து விடுங்கள். சதா நொச்சு நொச்சு என்று நச்சு பண்ணும் தலைவலிக்கு இதுதான் மருந்து.

குடும்பமே ஊர் சுற்ற கிளம்ப, நீங்கள் மாத்திரம் பூதம் புதையல் காத்தது போல வீட்டை காத்துக் கொண்டு இருக்காதீர்கள். இப்படி செய்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நீண்ட நாளைக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நடமாட மாட்டீர்கள், இது எச்சரிக்கை. பேசாமல் கூடவே சென்று ஜோதியில் ஐக்கியமாகி ஊரை சுற்றி விட்டு வாருங்கள். வீடு? அது இருந்த இடத்தில் பத்திரமாக இருக்கும்.

 

4. தூக்கம் வரவில்லையென மாத்திரை போடுவதை தவிருங்கள். இருப்பதோ கையளவு மூளை. அதை ஏன் குழப்பி விட்டு கஷ்டப்படுத்தி அல்லலை அதிகப்படுத்துவானேன். ஆறிலும் சாவு நூறிலும் சாவு. எதற்கு இத்தனை கவலை? எல்லாவற்றையும் ப்ரீயா விடுங்கள். கொஞ்சமாவது நடங்க. சிரிக்க மறந்துடாதீங்க. காலம் எல்லாவற்றுக்கும் அருமருந்து. முயற்சி செய்து பாருங்க தூக்கம் கட்டாயம் வரும், மாத்திரை இல்லாமலேயே.

5. சும்மா அமர்ந்திருங்கள். போகும் வரும் மனிதர்களை வேடிக்கைப் பாருங்கள், காத்து வாங்கும் சாக்கில். மேலே இருக்கும் கலைஞன் எத்தனை தினுசில் அல்லது எத்தனை தினுசாக ஒவ்வொன்றையும் படைத்திருக்கிறான் என்பதை ரசித்துப் பாருங்கள்.

 

6. அவ்வப்போது கண்ணாடி முன் நின்று, உங்களை நீங்களே ரசிக்க பழகுங்கள். கொஞ்சம் ஆடி பார்க்கலாம். வேண்டாமா... பாடலாமே. உங்களைச் சுற்றி நல்ல ஈர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்துக் கொண்டால் போதும்.

 

7. சூப்பர்மார்கெட் சென்றால், வீட்டுக்கும், வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் தேவையானவற்றை மட்டும்தான் வாங்க வேண்டுமா? உங்களுக்கே உங்களுக்கென பிடித்த திண்பண்டம், கூல்ட்ரிங்க்ஸ், சாப்ட் ட்ரிங்க்ஸ் என்றும் இருக்கும் இல்லையா. அதிலும் ஓரிரண்டு வாங்கிக் கொள்ளுங்கள். மனசும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆத்மாவும் சந்தோஷப்பட வேண்டும்.

 

8. வீட்டு வேலைகளை எளிதில் முடிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையோ அவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இன்னமுமா மாங்கு மாங்கு என்று கையால் துணி துவைப்பது? Stress தான் ஆளை கொல்லும் பெரும் வியாதி. இந்த விஷயத்தில் கவனம்.

 

9. உடல் நலமில்லையா? வாயைத் திறந்து சொல்லுங்கள். நோய் அதிகமாகி மருத்துவமனையில் தனியே கிடக்கும் போது, என்னை யாரும் பார்க்கல... என்னை யாரும் கேக்கலை... எனக்குன்னு யாருமே இல்லை... என்று சுயபச்சாதாபத்தில் புலம்பக்கூடாது. உயிர் முக்கியம்.

 

10. இருக்கிறதோ இல்லையோ... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றுக்கான பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ளவும். "நான் போன மாசம்தானே செய்தேன்...." என இழுக்காதீர்கள். நேற்று சாப்பிட்டால் இன்று சாப்பிடுவதில்லையா...? அது போலத்தான். உயிர் முக்கியம்.


No comments:

Post a Comment