Tuesday, May 14, 2019

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை...


நினைத்தாலே முக்தி தரும்
திருவண்ணாமலை...



படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக ( பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க, தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்று கூற, பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.
திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் தனி ஆலயம் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அது மகா சிவராத்திரி நாளாகும்.
மலை வலம்
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது.
மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கிபி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.
இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.
மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்......) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ , வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டு செல்ல கூடாது.


No comments:

Post a Comment