இந்திய குடியுரிமை சட்டம்
சி.ஏ.ஏ
Vs என்.ஆர்.சி நடைமுறை: உங்கள் சந்தேகங்களுக்கான அனைத்து பதில்கள்
இந்திய குடியுரிமை சட்டமும் தேசிய குடியுரிமை பதிவேடும் ஒன்றுதானா, அவற்றை அடிப்படையாக வைத்து இந்திய அரசு ஒருவரை நாடு கடத்த முடியுமா? இந்தியாவில் பல தலைமுறையாக வாழும் ஒருவர் தன்னை இந்தியராக நிரூபிக்க வேண்டியது அவசியமா போன்ற கேள்விகள் எல்லாம் இயல்பாகவே கேட்கப்படுகின்றன.
அந்த சந்தேகங்களை களைவதை நோக்கமாகக் கொண்டு இந்த தொகுப்பை வழங்குகிறோம்.
இந்திய குடியுரிமை சட்டம் என்றால் என்ன?
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தலால் தப்பி வந்த ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், சமணர்கள், பெளத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க, புதிய சட்டம் வகை செய்கிறது.
இந்த மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியாவில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால், அவர் தனது பிறப்புத்தேதியை நிரூபணம் செய்யாமல் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைக்கு ஆளாகாதவாறு, அவர்களுக்கு இந்த சட்டம் பாதுகாப்பு வழங்கும்.
முக்கியமானதாக, 2014, டிசம்பர் 31-ஆம் தேதி அன்றோ அதற்கு முன்பாகவோ, இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள். சட்டத்திருத்தத்துக்கு முன்புவரை, குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம் இந்தியாவில் 11 ஆண்டுகள் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
1955-இல் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த தகுதி வரம்பு, தற்போதைய சட்டத்திருத்தத்தின் மூலம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு எவ்வாறு நியாயப்படுத்துகிறது?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத்தின்பெயரால் அவற்றில் சிறுபான்மையினராக கருதப்படும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பாரசீகர்கள் துன்புறுத்தப்படுவதால் அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு தஞ்சம் அடைய வருவதாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வெகு குறைவு என்றும் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை அறிமுகப்படுத்திப் பேசியபோது குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஏன் சர்ச்சையானது?
இந்திய அரசியலமைப்பின் 14-ஆவது விதியின்படி, சமத்துவம் வலியுறுத்தப்படுகிறது. அந்த விதியை தற்போதைய அரசின் நடவடிக்கை மீறுவதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
மேலும், மதத்தின் பெயரால் குடியுரிமை பெற சட்டவிரோத குடியேறிகள் தகுதி பெற வைக்கப்படுவதாக அதை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியென்றால் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை அஸ்ஸாமில் வாழும் பலர் ஏன் எதிர்க்கிறார்கள்?
இந்தியாவிலேயே குடியுரிமை சட்டத்திருத்தத்தை அதிகமாக எதிர்க்கும் மாநிலங்களில் அஸ்ஸாமும், மேகாலயாவும் குறிப்பிடத்தக்கவை. பல தசாப்தங்களாகவே, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்த மாநிலங்களுக்குள் ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளதாக சர்ச்சை உள்ளது.
இதனால் அங்கு பூர்விமகமாக வாழும் பூர்வகுடி பழங்குடியினர், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரீதியில் பல பாதிப்புகளை எதிர்கொள்வதாக நம்புகிறார்கள். முஸ்லிம்களை தவிர மற்ற மதங்களை சேர்ந்த குடியேறிகளுக்கு, தற்போதைய சட்டத்திருத்தம் சட்டப்பூர்வ குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி அளிப்பதாக அங்கு வாழும் மக்கள் கருதுகிறார்கள்.
துன்புறுத்தலுக்கு ஆளான மத ரீதியிலான சிறுபான்மையினருக்கு மட்டும்தான் இந்த சட்டத்திருத்தம் உதவுமா?
மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகும் அண்டை நாடுகளின் சிறுபான்மையினரை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
இந்திய அரசு வரையறுத்துள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பாரசீகர்கள், கிறிஸ்துவர்கள் நீங்கலாக மற்றவர்களுக்கோ, மத துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவது குறித்தோ நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
No comments:
Post a Comment