விருப்பாட்சி பாளையம் விருப்பாச்சி கோபால் நாயக்கர்
ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் வழியில் இருக்கிறது அந்த கிராமம்.
மிகப் பெரும் வீரம் செறிந்த ஒரு பெரும் வீர வரலாற்றை தன்னுள் அடக்கியபடி,அலைகள் இல்லாத நடுக்கடலின் நிசப்தம் போல் இன்றைக்கு இருக்கிறது அந்த கிராமம்.அதிகம் போனால் ஒரு ஆயிரம் வீடுகள் இந்த ஊரில் இன்றைய நிலையில் இருக்கலாம்.
ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சின்னஞ்சிறு கிராமம் தான்,சூரியன் எங்கள் நாட்டில் மறைவதே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பிரிட்டீஷ் சாம்ராஜ்யித்தின் கண்ணில் விழுந்த நெருப்புப் பொறியாக உறுத்திக் கொண்டிருந்தது.
அடேங்கப்பா...என்று வியக்கிறீர்களா?
அந்த கிராமத்தின் பெயர் "விருப்பாச்சி"
அப்படி என்ன நடந்தது அந்த சின்னஞ்சிறு கிராமத்தில்?
அவ்வளவு பலமான பிரிட்டிஷ் படைகளை எதிர்த்தவன் யார்?
25-6-1772 ல் காளையார் கோவிலில் நடந்த உக்கிரமான போரில்,தன் சிவகங்கைச் சீமையையும்,அரசனும் சிவகங்கைச் சீமையின் மன்னனான தன் கணவன் முத்து வடுக நாதனையும் ஒரு சேர இழந்த பின்,வாய்விட்டுக் கதறி அழக் கூட வழியின்றி,தன் அமைச்சர் தாண்டவராய பிள்ளையுடனும்,தளபதிகள் மருதுபாண்டியர்களுடனும்,தன் ஒரே மகள் வெள்ளச்சியை அழைத்துக் கொண்டு,சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் சென்ற இடம் இந்த விருப்பாச்சி கிராமம் தான்.
நிர்கதியாக வந்து நின்ற அவர்களை வாரியணைத்து அரவணைத்து தான் பெற்ற மகளைப் போல பராமரித்ததோடு,ஒராண்டு-ஈராண்டல்ல,எட்டு ஆண்டுகள் வேலுநாச்சியாருக்கும்,அவரது தளபதிகளான மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் அனைத்துமாக இருந்ததுடன்,அவர்கள் படை திரட்டி மீண்டும் பிரிட்டீஷ் படைகளை எதிர்க்க உறுதுணையாக இருந்ததும் இந்த விருப்பாச்சி கிராமம் தான்.
இன்றைக்கு சின்னஞ்சிறு கிராமமாக இருக்கும் இந்த விருப்பாச்சி,முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் விருப்பாச்சி பாளையம்.
வீரமங்கை வேலு நாச்சியாரையும்,மருது பாண்டியர்களையும்,எவன் வந்தாலும்,அது எமனாக இருந்தாலும்-அவனையும் எதிர்த்து நிற்பேன்,என் இறுதி மூச்சு வரையில் உங்களைக் காப்பேன் என்று நின்றவர் தான் அந்த விருப்பாச்சி பாளைய மன்னர்...
யார் அவர்?
ஆஹா....நாம் எளிதாக நினைத்தது போல இவன் சாதாரணமானவன்
அல்ல,பெரும்
"கலகக்காரன்"
என்று பிரிட்டீஷ் ஏகாதிபத்திய
அரசின் வாயாலேயே சொல்ல வைத்த,
"The Rebel" விருப்பாச்சி கோபால் நாயக்கர்....
இவர் தான்,அந்த விருப்பாச்சி பாளையத்தின் மன்னர்.....
அடேங்கப்பா!!!!
" The Rebel" என்று சொல்லும்படி அப்படி என்னதான் அவர் செய்தார்?
யார் இந்த The Rebel விருப்பாச்சி
கோபால் நாயக்கர்!!!!
25-06-1772 ல் காளையார்கோவிலில் நடந்த போரில் சிவகங்கைச் சீமையின் மன்னரான முத்து வடுக நாதர் கொல்லப்பட்டதுடன் கதை முடிந்தது என்ற நிம்மதியில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனியின் நிம்மதி வெகு நாட்கள் நீடிக்கவில்லை.இறந்த கணவனது உடலைப் பார்த்து அழக்கூட வழியற்ற நிலையில்,அமைச்சர் தாண்டவராய பிள்ளையுடனும்,தளபதிகள் மருதுபாண்டியர்களுடனும்,தன் மகள் வெள்ளச்சியுடனும் எங்கோ தப்பியோடிய சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் கழித்து பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வருவார் என பிரிட்டீஷ் கிழக்கத்திய கம்பனியும்,அவர்களுக்கு அடிமை சேவகம் செய்த ஆற்காடு நவாபும் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.அங்கே நடந்த கடுமையான சண்டையில் பிரிட்டீஷ் படைகள் தோற்று உயிர் பிழைத்தால் போதுமென தெறித்து ஓடினார்கள்.சிவகங்கை கோட்டையில் மீண்டும் ராணி வேலுநாச்சியாரின் அனுமன் கொடி பறக்கத் தொடங்கியது.பிரிட்டீஷ் படைகளிடம் இருந்து தன் நாட்டை மீட்ட ஒரே ஒருவர் ராணி வீரமங்கை வேலுநாச்சியார் மட்டுந்தான்.
இதற்கெல்லாம் யார் காரணம்?எல்லாவற்றையும் இழந்து தப்பியோடிய வேலுநாச்சியாருக்கு படைபலம் திரட்ட உதவியது யார்?எங்கிருந்து வந்தது இவ்வளவு போர் தந்திரம்? யார் பயிற்சி அளித்து இருப்பார்கள்?
இந்தக் கேள்விகளுக்கே விடை தெரியாமல்,பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பனி தங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில்,
1790 ஆம் ஆண்டு வாக்கில்,ஆற்காடு நவாப் விதித்திருந்த 5/6 பங்கு வரியைக் கட்ட முடியாது என பாளையக்காரர்கள்
திமிறி எழுந்து பிரிட்டீஷ் படைகளை துவம்சம் செய்யத் தொடங்கியிருந்தார்கள்.
"என் வாளுக்கும் வேலுக்கும் பதிலைச் சொல்லிவிட்டு வரியை வாங்கிக் கொள்" என்று ஆற்காடு நவாபின் அடிமையான கம்மந்தான் கான்சாகிப் என்ற மருதநாயகத்தை,போரில் வென்று, அவனை குற்றுயிரும்
குலைஉயிருமாக
அனுப்பிய மாமன்னர் பூலித்தேவரும்,
"உயிரே போனாலும்,ஆற்காடு நவாபின் அநியாய வரியைக் கட்ட மாட்டேன்.எதுவானாலும் சந்திக்கத் தயார்.." என்று பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மனும்,பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பனியின் நிம்மதியை மேலும் மேலும் குலைத்துக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் தன் வாழ்நாளில் தோல்வி என்றால் என்னவென்றே தெரியாத மருதநாயகம், மாமன்னர் பூலித்தேவரிடம் தோற்று ஓடியதை பிரிட்டீஷ் படைகளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.அரும்பாடுபட்டு பீரங்கிகளைக் கொண்டு வந்து குவித்து,பெரும் உயிர்ச் சேதத்தைச் சந்தித்து பூலித்தேவரை போரில் வென்றிருந்தார்கள்.
அடுத்த குறியை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வைத்தார்கள்.
மேஜர் பானர்மேன் தலைமையில் பெரும் பலம் கொண்ட படைகளும்,ஆற்காடு நவாபின் படைகளும் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைகளுடன் மோதின.அந்தப் போரில் தோற்கடிக்கப்பட்ட கட்டபொம்மன்,பல்வேறு துரோக சூழ்ச்சிகளுக்குப் பின்னர் கயத்தாறில்,ஒற்றைப் புளியமரத்தில் 16-10-1799 அன்று தூக்கிலப்பட்டுக்
கொல்லப்பட்டார்.கட்டபொம்மன்
தம்பி ஊமைத்துரையை
கைது செய்து பாளையங்கோட்டை
சிறையில் அடைத்தனர்.இனி எந்த பாளையக்காரரும்
பிரிட்டீஷ் கிழிக்கிந்தியக்
கம்பனியை எதிர்த்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்,
"இனிமேல் எவரேனும் எங்களுடன் மோதினால் கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட நிலை தான் உங்களுக்கும்...எச்சரிக்கை.."
என்று ஒரு செப்புப் பட்டயத்தில்
எழுதி அதை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வாசலில் தொங்க விட்டனர்.
எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்த நேரத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
ஒரு இரவு நேரத்தில்,
"கந்தனுக்கு அரோகரா...முருகனுக்கு
அரோகரா..."
என்று பக்திப் பரவசத்துடன்
திருச்செந்தூர்
முருகன் கோவிலை நோக்கி பாதையாத்திரையாக
ஒரு பக்தர்கள் கூட்டம்,பாளையங்கோட்டை
சிறை அருகே சென்று கொண்டிருந்தது.
பக்தர்கள் கூட்டம் தானே,என்று பிரிட்டீஷ் படைகள் எளிதாக எண்ணிய நேரத்தில்,கண்ணிமைக்கும் நேரத்தில் பக்தர்கள் கூட்டத்தில் இருந்து இரண்டு நபர்கள் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி பாய்ந்தனர்.நொடிப் பொழுதில் பூட்டிய கொட்டடியின் கதவுகள் நொறுக்கப்பட்டு ஊமைத்துரை வெளியே வந்தார்.
யார் இவர்கள் என்று தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்தவர்கள் அலறினர்..
பெரிய மருதுபாண்டியன்...
பெரிய மருதுபாண்டியனை எதிர்த்து நிற்பதா,அது நடக்கக் கூடிய விசயம் தானா!? மதம் கொண்ட மத்த கஜம் எதிரில் பிளிறிக் கொண்டு வந்தாலும் துளி அசராத பெரிய மருதுவை எதிர்த்து நிற்க நம்மால் முடியாதே...
என்று அலறியவர்கள்,
பெரிய மருது உடன் வந்த அந்த இரண்டாவது நபர் யார் என்பதை அந்த தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்ததும் அலறியவர்கள்,மரண பயத்தில் மயங்கிச் சரிந்தனர்.
அதையும் மீறி,அவர்களை தடுக்க வந்தவர்களை அந்த மூவர் கூட்டனியின் வாள்கள் விண்ணுக்கு சுற்றுலா அனுப்பி வைத்தன...
மறுநாளே பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில்,மன்னராக ஊமைத்துரைக்குப் பட்டம் சூட்டி வைக்கப்பட்டு,துணையாக 6000 வீரர்களையும்
அவர்கள் இருத்தி வைத்தனர்....
கடுங்காவல் கொண்ட பிரிட்டீஷ் பேரரசின் பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்து ஊமைத்துரையை மீட்டது யார்?
எங்களை எதிர்த்தால் கட்டபொம்மனுக்கு நிகழ்ந்த கதி தான் உங்களுக்கும்..என்ற நம் பிரிட்டீஷ் பேரரசின் எச்சரிக்கையை துளியும் மதிக்காமல்,காலில் போட்டு மிதித்தது யார்?
எல்லாவற்றையும் விட பெரிய மருது பாண்டியருடன் வந்தது யார்?
பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பனி தலையைப் பிய்த்துக் கொண்டது.
அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதிலாக இருந்தது,
The Rebel விருப்பாச்சி கோபால் நாயக்கர் என்ற பெயர் தான்.
1799 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டு கொன்றதற்கு அடுத்த மாதம்.
அன்றைய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பி.ஹார்டியின் முன்னர் இருந்த அகலமான சுவற்றில் சில பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
பெரிய மருதுபாண்டியன்-வாளுக்குவேலி அம்பலம்-ஊமைத்துரை...
"இவர்களுள் எவரை முதலில் பிடித்துக் கொல்வது" என்ற ஆராய்ச்சி மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
"கலெக்டர் அவர்களே வாளுக்குவேலி மகாவீரன்.வாளுக்குவேலிக்கு இணையானவன் பெரிய மருது.ஊமைத்துரை படைகளை ஒன்றிணைப்பதில் வல்லவன்...இவர்களை எப்படியாவது
நம் பீரங்கிகளைக்
கொண்டு வென்று விடலாம்.ஆனால் இவர்களை விட முதலில் கொல்லப்பட வேண்டியன் ஒருவன் இருக்கிறான்.அவனை விட்டால் ஆயிரம் வாளுக்குவேலிகளை,மருதுபாண்டியனை,ஊமைத்துரைகளை
உருவாக்கி விடுவான்...முடிந்தது,இத்தோடு ஒழிந்தாள் என்று நாம் நினைத்த வேலுநாச்சியாரை,மீண்டும் பலம் கொள்ள வைத்து,பயிற்சி தந்து,நம்மையே எதிர்க்க வைத்தவன் அவன்...ஏதேதோ செய்தும் அவனை மட்டும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை..."
என்று ஒரு பிரிட்டீஷ் அதிகாரி தயங்கித் தயங்கி சொன்னான்.
"எத்தனை நாட்களாக அவனை நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை." என்று புதிராக ஹார்டி கேட்க,
"முப்பது வருடங்களாக" என்று பல குரல்கள் வந்தன.
"என்ன...முப்பது வருடங்களாகவா?மாபெரும் பிரிட்டீஷ் சாம்ராஜ்ய படைகளை எதிர்த்து ஒருவன் முப்பது வருடங்களாக நிற்கிறானா? யார் அவன்?"
ஆவலும்,கோபமும் ஒருசேர கலெக்டர் ஹார்டி கேட்டான்.
அதே நேரம்,தெற்கே திருநெல்வேலியில் இருந்து ஒரு தகவல் வந்தது.
"சில நாட்களுக்கு முன்னர் பாளையங்கோட்டை சிறைச்சாலையை உடைத்து,பிரிட்டீஷ் காவலை அடித்து நொறுக்கி,கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை மீட்டுக் கொண்டு போய் விட்டார்கள்" என்ற அந்த தகவல் ஹார்டியை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"இது அவன் வேலை தான்.."
"அவனே தான்..." என்று பல குரல்கள் எழுந்தன..
"யார் அவன்" பதட்டம் நிறைந்த குரலில் ஹார்டி கேட்க,
"கோபால் நாயக்கன்..." என்று ஒரே குரலில் பதில்கள் வந்தன.
"என்ன?"
"விருப்பாச்சி கோபால் நாயக்கன்"
அந்த பெயரைக் கேட்டதும் திண்டுக்கல் கோட்டையே அதிர்ந்தது.
"ஆம்...கலெக்டர் அவர்களே,25-6-1772
ல் சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுக நாதனை நாம் வஞ்சகமாகக் கொன்று சிவகங்கையைக்
கைப்பற்றினோம்.முத்துவடுக நாதனின் மனைவி வேலுநாச்சியார்,தளபதிகள் மருதுபாண்டியர்கள் தப்பி விட்டனர்.இனி அவர்கள் அவ்வளவு தான் என்று நாம் எண்ணி இறுமாந்திருந்தோம்.ஆனால் எல்லாம் சிலகாலம் தான்.எட்டு வருடங்களுக்கு உள்ளாகவே மீண்டும் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்து சிவகங்கைச் சீமையை வேலுநாச்சியார் மீட்டு விட்டாள்.அந்தச் சண்டையில் நம் பக்கம் பலத்த உயிர்ச் சேதம்.வேலு நாச்சியாருக்கு சகலமுமாக இருந்து,பயிற்சி தந்து,அந்தப் போரை வழி நடத்தியதே கோபால் நாயக்கன் தான்.இதோ பாளையங்கோட்டை சிறைச்சாலையையும் உடைத்து-பெரிய மருதுபாண்டியனுடன் சேர்ந்து கொண்டு ஊமைத்துரையை மீட்டுக் கொண்டு போய் விட்டான்.அங்கும் நமக்கு பலத்த உயிர்ச் சேதம்...கொங்கு மண்டலத்தில்
இருந்து கல்ஹன்,மலபாரில் இருந்து கேரளவர்மன்,கன்னடத்தில்
இருந்து துண்டாஜவிக்
ஆகியோரைக் கொண்டு தீபகற்ப கூட்டணியை வேறு உருவாக்கி வைத்துள்ளான்
கோபால் நாயக்கன்....இது போக கள்ளர் நாட்டு தலைவர்களும்
கோபால் நாயக்கன் பக்கம் தான்...அதிலும் வாளுக்குவேலி
அம்பலத்தை நினைத்தால் பதறுகிறது..."
என்று ஒரு பிரிட்டீஷ் அதிகாரி சொல்லிக் கொண்டே போக,ஹார்டியின் கண்கள் பயத்திலும்-கோபத்திலும்
சிவந்தன.
"கோபால் நாயக்கன் மீது அரச விரோத குற்றங்களைச் சுமத்தி உடனடியாக அவனுக்கு ஒரு ஓலை எழுதி அனுப்பு.அவனை திண்டுக்கல் கோட்டைக்கு வரச் சொல்.." என்று ஹார்டி உத்திரவுகளைப்
பிறப்பித்தான்.
ஹார்டி சொன்னபடியே ஒரு ஓலை எழுதப்பட்டு,சேவகனிடம் தரப்பட்டு விருப்பாச்சி கோபால் நாயக்கனிடம் சேர்ப்பிக்கச் சொல்லப்பட்டது.
சேவகன் கிளம்பிச் செல்ல தயாரான போதே...திண்டுக்கல்
கோட்டையின் அபாய மணி அலறியது....
கலெக்டர் ஹார்டி உட்பட அனைவரும் பதறியபடி கோட்டை வாயிலை நோக்கி ஓடினார்கள்.
அங்கே....
ஒரு பிரிட்டீஷ் வீரன் கதறியபடி ஓடி வந்தான்...
அவர்கள் வந்துவிட்டார்கள்...
ஒட்டு மொத்த கோட்டையையும் கைப்பற்றி விட்டார்கள்....
"யார்?" என்று நடுங்கியபடி
ஹார்டி கேட்க,
"மை லார்ட் கலெக்டர் சார்...நீங்கள் யார் மீது அரச விரோத குற்றங்களைச்
சுமத்தி...யாரை உங்களை வந்து சந்திக்கச் சொன்னீர்களோ...
அவன் தான்...
அவனே தான்... வந்துவிட்டான்...
இங்கேயே வந்துவிட்டான்...
நம் இடத்திற்கே வந்துவிட்டான்...
திப்புசுல்தானின் படைகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டு விருப்பாச்சி கோபால் நாயக்கன் இதோ இந்த திண்டுக்கல் கோட்டையில் இறங்கி விட்டான்...."
-- என்று வியர்க்க விறுவிறுக்க நடுங்கிப் பதறியபடி சொல்லி விட்டு அந்த பிரிட்டீஷ் படை வீரன் மயங்கி விழுந்தான்.
மயங்கி சரிந்து விழுந்தது பிரிட்டிஷ் படையின் சிப்பாய் அல்ல.
ஒட்டு மொத்த பிரிட்டிஷ் அரசும் தான்.
அடுத்த சில மணி நேரங்களில் திண்டுக்கல் கோட்டையில் கடுமையான சண்டை நடந்தது.முடிவில் ஆங்கிலேய கலெக்டர் ஹார்டின் தலையுடன் சேர்த்து அவர்களது கொடியும் கீழே இறங்கி மண்ணைத் தொட்டது.
விருப்பாச்சி கோபால் நாயக்கர் தன் கூட்டமைப்பின் கொடியை ஏற்றி வைத்து விட்டு சிட்டாகப் பறந்தார்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு விருப்பாச்சி என்ற பெயரைக் கேட்டாலே பிரிட்டிஷ்காரர்களுக்கு வயிற்றோட்டம் போனது.அதன் சத்தம் இங்கிலாந்து வரையிலும் கேட்டது.
வஞ்சகத்தால் தன் கணவர் முத்துவடுகநாதரை இழந்து நாடு இழந்து வீட்டையும் இழந்து நிர்க்கதியாக நின்ற வீர மங்கை வேலு நாச்சியாரை சிவகங்கை சீமையில் இருந்து பத்திரமாக மீட்டு தன் விருப்பாச்சி அரண்மனையில் தங்க வைத்தார் கோபால் நாயக்கர்.வேலு நாச்சியாரை தன் மகள் போல பார்த்துக் கொண்டார்.9 ஆண்டுகள் விருப்பாச்சி
அரண்மனையில்
வேலு நாச்சியார் தங்கி இருந்தார்.
கோபால் நாயக்கர் பயிற்சியிலும்,முயற்சியிலும், வீரமங்கை வேலு நாச்சியார் தலைமையிலும் ஒரு பெரும் படை திரண்டது.அந்த படைக்கு மருதுபாண்டியர்கள் வழி நடத்தினர்.
"சிவகங்கை சீமை மீண்டது என்ற செய்தி வரும்...அல்லது என் பிணம் வரும்..."
என்று இரத்தத்தில்
எழுதி வைத்துவிட்டு
போருக்கு சென்றார் வீர மங்கை வேலு நாச்சியார்.
இந்திய துணை கண்டத்தின் வரலாற்றில் முதன் முறையாக இங்கிலாந்து படைகளிடம் இருந்து தன் நாட்டை மீட்ட ஒரு வீர வரலாறு தமிழ்நாட்டின் சிவகங்கை சீமையில் எழுதப்பட்டது.
பிரிட்டிஷ் அரசின் யூனியன் ஜாக் கொடி கிழித்து எறியப்பட்டு சிவகங்கை கோட்டையில் வீர மங்கை வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
மீசையைத் தடவியபடி விருப்பாச்சி கோபால நாயக்கர் இடி முழக்கமாக சிரித்தார்.
ராணி வேலுநாச்சியாருக்கும்,ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள்,கோபால நாயக்கர் மீது அடக்க முடியாத ஆத்திரம் அடைந்தனர்.
இந்த செய்தி கோபால் நாயக்கரை எட்டியது.அவன் என்ன என் மேல் கோபம் கொள்வது.அவன் மீது நான் கடுங் கோபத்தில் இருக்கிறேன்...என்று சூளுரைத்தார்
கோபால் நாயக்கர்.
கி.பி.1800ல் வெள்ளையர்களை
எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச்
சென்றார்.
கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர்
தலைமையில் இறுதிக்கட்டப்
போருக்கு திட்டமிட்டனர்.
இக்கூட்டத்தில்
கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா,சின்னமருது, கோவை ஹாஜிஹான்,இராமநாதபுரம்
கல்யாணித்தேவர்,
மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள
ஆங்கிலேயரின்
ராணுவ முகாமை நாலாபுறமும்
இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர்.
அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான்,
ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர்.
இச்செய்தி ஆங்கிலேயருக்கு
எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும்
பீரங்கிப்படையை
நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவர்கள் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு செய்த சித்ரவதையினால் கூட்டணி இரகசியம் போய்விடக்கூடாது என எண்ணித் தனது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டார்.
கோவை தாக்குதலுக்குப் பின் கி.பி.1800 அக்டோபரில், ஆங்கிலப்படை
லெப்டினட் கர்னல் இன்னஸ் பெரும் படையுடன் விருப்பாச்சியை
முற்றுகையிட்டான்.
விருப்பாச்சி,
இடையகோட்டை, வேலுர், பாளையத்தைச்சேர்ந்த மக்களும் ஏனைய பாளையத்தின் போர் வீரர்களும் சத்திரபட்டி பாளையத்தின் அரண்மனை முன்பு போர் புரிந்தனர். போரில் கோபால் நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கர் கொல்லப்பட்டார். கோபால் நாயக்கர் தப்பிவிட்டார். கர்நாடக, மராட்டிய படைத் தளபதி தூந்தாசிவாக்கை கைது செய்து பீரங்கியின் வாயில் கட்டிவைத்தனர். தொடர்ந்து கோபால் நாயக்கரின் மனைவி பாப்பம்மாள், இளைய மகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல்லில்
கி.பி.1816
வரை சிறைவைத்தனர்.
கோபால்நாயக்கர்
தலைக்கு அந்த காலத்திலேயே
20,000 ரூபாய் என அறிவித்தனர்.
பணத்திற்காக துரோகிகள் காட்டிக் கொடுத்தனர்.
கி.பி.1801செப்டம்பர் மாதத்தில் திண்டுக்கல்
ஊருக்கு வெளியே இருந்த ஒரு குளக்கரையில்
தனி புளிய மரத்தில் விருப்பாச்சி
கோபால நாயக்கரை தூக்கிலிட்டனர்.
அந்தக் குளம் கோபாலநாயக்கர் சமுத்திரம் என நகரின் மத்தியில் இன்றும் உள்ளது...
இந்திய விடுதலை வரலாறு என்பது,
மாவீன் மாமன்னர் பூலித்தேவர் துவக்கி வைக்க,
பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையில் வீறு கொண்டது.
அந்த அடங்கா பெரு நெருப்பை,
பீரங்கி வாயில் கட்டிவைக்கப்பட்ட நிலையிலும்,என்னை நன்றாக இறுகக் கட்டு.நீ வெடி வைத்து பிளக்கையில் என் உடலின் ஒரு துண்டு தப்பித்தாலும்,அது உங்கள் கூட்டத்தின் பத்து தலையை வாங்கிவிடும் என்று செறுக்காக சிரித்த கட்டாலங்குளத்து மாவீரன் அழகுமுத்து கோன்,
இந்திய வரலாற்றில் முதல் மனித வெடிகுண்டு வீரன் சுந்தரலிங்கம்,
பெரும் தியாகி குயிலி,
வீர மங்கை வேலு நாச்சியார்,மருது சகோதரர்கள்,
தன் மண்ணில்,தன் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி வசூல் செய்த வரிப் பணத்தை,
சிவன்மலைக்கும்-சென்னிமலைக்கும் இடையில் இந்த சின்னமலை பறித்துக் கொண்டான் என்று உன் ஆங்கிலேய முதலாளியிடம் சொல்... என்று வீரத்துடன் எச்சரித்து அனுப்பிய தீரன் சின்னமலை...
- என எண்ணற்ற தமிழ் மன்னர்களின் வீரத்தில் இருந்தே இந்திய விடுதலைப் போராட்டம் துவங்கிறது.
இங்கே நம் தமிழ் மண்ணில் எழுந்த ஒரு நெருப்பு தான் விடுதலை வேட்கையாக இந்தியா எங்கும் பரவியது.
No comments:
Post a Comment