தாம்பத்யம்
இன்றுடன் லட்சுமி போய் 16 நாள் ஆகிறது நேற்றுடன் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் ஊருக்கு போயாச்சு. முருகேசனுக்கு காலை 5 மணிக்கு முழிப்பு வந்து விட்டது இது அவருடைய 78 வருஷ பழக்கம். மெதுவாய் எழுந்திருந்து வாசல் கதவைத் திறந்து வெளி வாசல் வந்தார் .
பக்கத்து வீடுகளில் எல்லாம் பெருக்கி தெளிச்சு கொண்டு இருந்தார்கள்.லட்சுமி பக்கத்தில் நின்று ஏனுங்க ஒரு பக்கெட் தண்ணீர் கொண்டு வந்து தருவீர்களா.. என்று கேட்கிற மாதிரியே இருந்தது . அவள் போடும் புள்ளி வைத்த கலர் கோலம்... அவர் மனத்தில் வந்து மறைந்தது. துக்கம் குடலை புரட்டியது.... ஆண்கள் அழக் கூடாது என்று எல்லோரும் சொல்வார்கள்...
ஆணும் அழத்தான் செய்கிறான் வாழ்வில் இரண்டு முறை. ஒன்று தாயை இழக்கும் போது.... இரண்டு தாரத்தை இழக்கும் போது. மணி 6 ஆயிடுது. மகனும் மருமகளும் தூங்குகிறார்கள்
போல. பெட் ரூம் கதவு இன்னும் திறந்த பாடில்லை ஓரு நிமிடம் அவர் மனக்குதிரை பின் நோக்கியது
லட்சுமி 5 .25 ஆச்சு இன்னும் காப்பி ரெடியாகலியா?
கொஞ்சம் பொறுங்கள்...
5 நிமிஷம் என்று சொல்லி முடிக்கும் போதே ஆவி பறக்கும் காபி டம்பளருடன்... ஆஜராகி விடுவாள் மணி ஏழை தொட்டது வயிற்று பசி வாயின் எல்லை வரை வந்து நின்றது . அப்பாடா ஒரு வழியா பெட் ரூம் கதவு திறந்து பையனும் மருமகளும் வெளியில் வர இன்னும் ஒரு 5 நிமிடத்தில் காப்பி வந்துடும்னு இவர் நினைக்க.,. மருமகள் தந்தி பேப்பரை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு பத்து நிமிடத்தில்
அவள் இடத்தை விட்டு எழுந்திருக்க... அவர் காப்பி குடிக்க தயாரானார்..
அவருக்கு இந்த காலை காப்பி குடிப்பது என்பது அப்படி ஒரு சந்தோஷமானவிஷயம் . பொண்டாட்டி போனா அவ கூட பசி ,விருப்பம், ருசி, எல்லாம் போய் விடுகிறதா என்ன? சற்று நேரத்தில் மருமகள் ஒரு கப்ல பிரவுனும் இல்லாம காப்பி கலரும் இல்லாம ஒரு திரவத்தை கொண்டு வர... அம்மா எனக்கு காப்பி, டவரா டம்பளர்ல குடிச்சு பழக்கம் என்று சொல்ல... அதற்குஅவள் இன்றிலிருந்து நம் வீட்டில் நோ காப்பி... டீ தான் மாமா என்று சொல்ல அவர் மனம் மிகவும் வலித்தது . மணக்க மணக்க கும்பகோணம் டிகிரி காப்பி யுடன் லட்சுமி கண்ணெதிரே வந்து மறைந்தாள் பையன் அப்பா முகத்தைப் பார்த்தான்
எட்டு மணியானா லட்சுமி டைனிங் டேபிள்ல டிஃபன் வச்சிடுவா.... ஓன்பது மணி ஆச்சு இன்னும் எதுவும் டேபிளு க்கு வரவில்லை .சிறிது நேரத்தில் மருமகள் வந்து மாமா இனிமே பிரேக்ஃபாஸ்ட் , லஞ்ச் எல்லாம் தனித் தனியா பண்ணப் போவதில்லை brunch அதாவது ஒரு 11 30 மணிக்கு லஞ்ச் சாப்பிடலாம் என்றாள்.
78 வருஷ breakfast பழக்கம் இரண்டாவது முறையாக மனது வலித்தது பையன் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தான். இரவு டின்னர் லட்சுமி இருக்கும் போது வித விதமா பண்ணுவாள் வேலைக்கு போகும் மகனும் மருமகளும் இரவுதான் ரசிச்சு சாப்பிடுவார்கள்
என்று , சரி ராத்திரிக்கு என்ன பண்றா பார்க்கலாம் என்று நினைக்க என்னங்க.. நீங்க கடைத் தெருவுக்கு போகும் போது அந்த நார்த் இந்தியன் கடை ல 12 சப்பாத்தி வாங்கிக்குங்க ,
தால் தருவான் தொட்டுக் கொள்ள. நைட்டுக்கு சாப்பிடலாம் என சொல்ல..
மகன் மூன்றாவது முறையாக அப்பாவை நிமிர்ந்து பார்த்தான்.
அப்பாவின் கோபம், இயலாமை எல்லாம் புரிந்தது. அப்பா நான் கடைத்தெரு போறேன்... நீங்க வரீங்களா என கூற... இவருக்கு பையன் தன்னுடன் ஏதோ பேச விரும்புவது தெரிந்தது இருவரும் கடைத் தெரு கிளம்பினார்கள்
கோவில் அருகே வந்ததும் அப்பா இங்க உட்காருங்க உங்ககிட்ட பேசணும்
சொல்லப்பா. காலையிலிருந்து
உங்கள் முகத்தைப் பார்க்கிறேன் அதில் உள்ள வலி எனக்கு புரிகிறது .
அம்மா போய் பதினாறு.. நாளைக்குள் உங்கள் வாய்க்கு ருசியானதெல்லாம் அவளுடன் போய் விட்டது.அப்பா.... நீங்க அம்மாவை கல்யாணம் பண்ணி கூட்டி வரும்போது அம்மாக்கு பதினெட்டு வயசு உங்களுக்கு இருபத்து மூன்று வயசு என்று சொல்லுவீங்க...
திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூட இல்லை.. இருந்தும் உங்கள் இருவருக்கும்
இடையே அருமையான
புரிதல் இருந்தது. அதனால் அம்மா ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விட்டாள் . ஒவ்வொரு நிமிடமும்உங்கள் முகம் பார்த்து உங்கள் தேவையை பூர்த்தி செய்தாள் அப்படி பண்ணின அம்மாவை கூட நீங்க நான் உன் கணவன். எப்போதும் நான் சொல்லுவது தான் செய்யனும்கிற மாதிரி விரட்டுவீங்க. அப்படி நீங்க விரட்டினா கூட அம்மா உங்க வார்த்தைக்கு
மதிப்பு குடுத்து உங்க சந்தோஷம்தான் அவ சந்தோஷம்னு வாழ்ந்தாப்பா . நீங்கள் அம்மாவை திட்டியது போல....
இத்தனை வருஷ தாம்பத்தியத்தில் நான் ஓரு முறை திட்டியிருந்தேன் என்றால்... என் திருமண உறவு அன்றுடன் முடிந்து இருக்கும்
உங்களுடையது ஓரு இனிமையான தாம்பத்யம். ஈகோ ,அலட்டல் ,எதிர்ப்பு எதிர்ப்பார்ப்பு
எதுவும் இல்லாத ஓரு அருமையான தாம்பத்யம்.
இப்போது நானும் உங்கள் மருமகளும் கல்யாணம்கிற பந்தத்துல இணைந்து இருக்கிறோம்.
என்னை பொருத்த வரை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நான் உன்னை கடைசி வரை காப்பாற்றுவேன்
என்று சொல்லும் ஆணாக நானும்,
உன்னை விட்டு எந்த ஜென்மத்திலும் பிரிய மாட்டேன் என்று சொல்லும் பெண்ணாக அவளும் இருக்க வேண்டும். அதுதான் ஒரு திருமணத்தின் புரிதல். ஆனால் எங்கள் திருமணம் அப்படி பட்டது இல்லை... விடிந்து எழுந்தால் எங்களுக்குள்
ஒரு ஈகோ clash. ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அவள் இவனுக்கு என்ன நான் அடிமையா என்று நினைப்பதும்...
சம்பாதிக்கிற திமிருடன் இவ பேசுறா பார்த்தியானு
என்னோட நினைப்பும்...
கல்யாணம் ஆன இந்த 25 வருஷத்தில் துளி கூட மாறவில்லை. .
நாங்கள் எங்கள் வாழ்க்கையில்
டெய்லி கத்தி மேல் தான் நடந்து கொண்டு இருக்கிறோம் .
எனக்கு வயசு 55 அவளுக்கு... 50 வயசு . இதற்கு அப்புறம் பிரிவு என்பதெல்லாம் அசிங்கம். atleast உங்கள் பேரன் வருணுக்காகவாவது
நாங்கள் அட்ஜஸ்ட் செய்து தான் போக வேண்டும் . அவளிடம் நீங்கள் போய் கேட்டாலும் அவளும் இதையேதான் சொல்லுவாள். எங்கள் தாம்பத்தியம் என்பது உங்களது போல் இல்லை. எனக்கு 29 வயசில் திருமணம் அவளுக்கு அப்போது 24வயசு நாங்கள்
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின் தான் திருமணம் என்று சொல்லி எட்டு மாசம் பழகினோம்...
அந்த எட்டு மாசத்தில் எல்லாமே made for each other ஆகத்தான் தெரிந்தது.
தாலி என்ற மஞ்சள் கயிறை அவள் கழுத்தில் கட்டியவுடன்... இவள் என்னவள் இனி எந்த முடிவும் அவ்வளவு ஈசி ஆக அவளால் தனியாக எடுக்க முடியாது,
நாம தான் அவள் வாழ்க்கையின் முக்கியமான ஒருவன் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற ஆண் திமிரு எனக்கும்..
ஐயோ இத்தனை difference of opinion ஆ என்ன செய்ய . தாலி கட்டிக் கொண்டேன் எதாவது தவறான முடிவு எடுத்தால் தன் பெற்றார்க்கும் சுற்றி உள்ள உறவினருக்கும் பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம் அவளுக்கும். இப்போது சொல்லப் போனால் ஒற்றுமையான தாம்பத்தியம்
என்னும் ஒரு அழகான நாடகத்தை நாங்கள் இருவரும் ஊரார் மெச்ச நடித்துக் கொண்டு இருக்கிறோம்.
இதைதான் கத்தி மேல நடக்கிற மாதிரின்னு சொன்னேன். இதுதான்பா இன்றைய தாம்பத்தியம்.
அப்பா உங்களுடைய பசி , ருசி எல்லாம் என் அம்மாவுடன் போச்சு.
அதனால் நீங்களும் என்னை மாதிரி கிடைக்கும் நேரத்தில் கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு வாழ பழக்கிக் கோங்க . ஆனால் கடவுள் குடுத்த வரமான உங்கள் தாம்பத்யத்தை அசை போட்டு மிச்ச நாள்களை கழியுங்கள் அப்பா. வாங்க நேரம் ஆகுது போலாம் என்றான்.
அவன் கையை இறுகப் பற்றி உண்மையிலே எங்கள் ஜெனரேஷன் குடுத்து வைத்தவர்கள். அருமையான மனைவி , மகன், தாத்தா ,பாட்டி ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்ட அழகான குடும்பம்.....கடவுள் குடுத்த வரம் .
நான் நீ வாழும் வாழ்க்கையை புரிந்து கொண்டேன்.. உங்களை எல்லாம் பார்த்தால்உண்மையிலேயே ரொம்ப பாவமா இருக்கு .நான் இனி என்னை மாற்றிக் கொள்கிறேன். கவலைப் படாதே . என்னால உன் குடும்பத்தில் பிரச்சினை வராது நிம்மதியாக இரு என்றார். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம்.. *வாழ்க்கை..வாழத்தானே....*
No comments:
Post a Comment