Saturday, July 29, 2023

ரவா தோசை பார்சல் வேண்டாம்

 ரவா தோசை பார்சல் வேண்டாம்



ஒரு ரவா தோசை பார்சல் என்றேன், அந்த ஓட்டல் பார்சல் ஸ்டால் முன் நின்று பில்லை நீட்டியபடி

அந்த சப்தம் கேட்ட அதே நொடி

பொங்கல் பார்சல் கட்டிக்கொண்டு இருந்த பார்சல் ஊழியர் மற்றும் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த அனைவரும் ஒரு கணம் என்னை தலை நிமிர்த்தி பார்த்து விட்டு மீண்டும் தத்தமது பணிகளில் ஈடுபட்டனர்.

நான் என்ன கேட்டு விட்டேன் எதற்கு இந்த ரியாக்ஷன் என்று தெரியாது புரியாது நின்றேன்

சற்று நேரத்தில் எனது ஆர்டர் ரெடியாக பெற்றுக்கொண்டு வீட்டிற்க்கு புறப்பட்டேன் எனது சைக்கிளில்,

இங்கே சற்றே ரவா தோசை பற்றிய எனது ஆராய்ச்சிகளில் ஒரு சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்

ரவா தோசையில் என்ன ஆராய்ச்சி..? முந்திரி எதேனும் தென்படுகிறதா என்றா.? என்ற உங்களின் நியாயமான நக்கல் கேள்வி எனது மன செவிகளில் கேட்கிறது சற்று படித்து பாருங்கள் பின்பு உங்களுக்கு புரியும்,

ஓட்டல்களில் உள்ள சமையல் மாஸ்டர்கள் இட்லி தோசை மாவு இன்சார்ஜ் கிடையாது அதற்கென்று அரவை மாஸ்டர்கள் உள்ளார்கள், அவர்கள் கைகளில் தான் உள்ளது இட்லி தோசைகளின் வெற்றி.

அதே போல தோசை போடும் தோசை மாஸ்டர் என்று ஒருவர் இருப்பார் அவரே உருவாக்குவார் ரவா தோசை மாவினை,

அடை போடும் போது அது சில சமையம் தோசை மாஸ்டரால் சில சமையம் அரவை மாஸ்டரால் என்று மாறுபடும்

ஒரு சில இடங்களில் சமையல் மாஸ்டர் கூட அடையின் மகத்துவம் அறிந்து அதன் அரவையை கையாள்வார்.

பொதுவாக ரவா தோசை என்பது பரிட்சை அன்று படித்த விட்டு எழுதுவது போல அன்றன்று தேவைக்கேற்ப கலந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று

ரவா தோசை அரவையில் வராது

ரவை மைதா கோதுமை அரிசி மாவு மிளகு சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி என பலமான கூட்டணியில் உருவாகும் ஒரு பலமான ஐட்டம் ஆகும்

சிலர் அதில் தயிரை சேர்ப்பார்கள் அத்தயிர் சற்றே புளித்து இருப்பின் இன்னும் வசப்படும் மாவு என்பார்கள்.

ஒரு ஓவியம் வரையும் ஓவியர் தமது ஓவியதிற்கு வண்ணம் கூட்ட எவ்வாறு பல முறை ஒவ்வொரு நிறமாக ஒன்றோடு ஒன்று கலந்து சரியான நிறத்தை தேர்ந்து எடுப்பாரோ அது போல

தோசை மாஸ்டர்கள் ரவா தோசையை பக்குவத்திற்கு கொண்டு வர அதன் கலவையில் சிறிது சிறிதாக மாவு / ரவை உப்பு இத்யாதிகள் சிறிது சிறிதாக சேர்த்து செக் செய்து மெருகேற்றி தயார் செய்வார்கள்

பின்னர் அதனை தோசைக்கல்லில் ஊற்றி அதன் தன்மையை பார்ப்பார்கள்.

இறுதியாக அதன் சிறந்த மொறு மொறு வடிவமும் மணமும் நிறமும் கைவந்த உடன் அதனை உபயோகிப்பார்கள்.

இதே ரவா தோசை வகையை நமது வீட்டில் செய்யும் போது தான் சிக்கல் உருவாகும்

சிலருக்கு அதன் கலவை கைவரும் பலருக்கு செட் ஆகாது

கல்லில் ஊற்றினால் பிரிந்து நிற்கும் தோசை கல்லையும் பாழாக்கும்

இந்த பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்பு இருப்பதால் பலரும் ரவா தோசையை வீட்டில் செய்ய முயல மாட்டார்கள்,

சில instant ரவா தோசை மிக்ஸ் உண்டு அது போடவும் வரும் ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை நாமே நமது கைகளால் எடுத்து போட்டு பிசைந்து பக்குவம் கொண்டு வந்து அதனை கொண்டு ரவா தோசை போடுவதில் தான் பெருமையும் நிறைவும் உண்டாகும்

ஒரு ரவா தோசை போட சற்றே நேரம் பிடிக்கும் ஆனால் அதனை உண்ண அவ்வளவு நேரம் ஆகாது தட்டில் சட்டென தீர்ந்து விடும்

நமது வீட்டில் ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்து உண்ணும் சூழலில் ரவா தோசையை போட்டு எடுக்கும் நேரம் அதிகம் என்பதால் காலி தட்டுடன் காத்து இருக்கும் சூழல் இருக்கும்

அவ்வேளையில் இடையே இட்லி அல்லது உப்புமாவை நுழைப்பார்கள் எனது அம்மா அதற்குள் ரவா தோசை ரெடி ஆகிவிடும்

அதிலும் ஆனியன் ரவா தோசை எனில் இன்னும் நேரம் பிடிக்கும்

ஓட்டலில் போல ரவா தோசையை போட்டு அதன் மேல் பொடியாக வெட்டிய வெங்காயத்தை தூவ மாட்டார்கள் வீட்டில்

வெங்காய ரவா என்று தீர்மானம் ஆனதும் ஒரே தினுசாக தான் வார்ப்பார்கள்

வெட்டிய ஆனியன் அனைத்தையும் ரவா தோசை மாவில் போட்டு மேலும் சிறிது நீர் சேர்த்து தயார்படுத்தி வைத்துக்கொள்வார்கள்

ஆனியன் ரவாவில் கேரட் சேர்ப்பது எனக்கு பிடிப்பதில்லை பொதுவாக ரவா தோசை கேரட் இணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை,

முந்திரி டபுள் ஓகே

ரவா தோசை மாவை கரைத்ததும் சற்றே அதற்கு ஒரு பத்து நிமிடங்கள் ரவை மாவின் கூட்டணி சேர நேரம் கொடுத்தால் இன்னும் நன்றாக வரும் ரவா தோசை

இப்போது முடிவுறைக்கு வருகிறேன்

ரவா தோசை ஆர்டர் செய்து ஓட்டலில் அங்கேயே அமர்ந்து உண்ணுதல் தான் உசிதம்

அதன் மணமும் நிறமும் மொறு மொறு தன்மையும் அப்போது தான் நமக்கு முழுவதும் கிட்டும்

பார்சலில் ரவா தோசை என்பது பாவத்திலும் பெரிய பாவம் என்று கூறுவார்கள்

ரவா தோசை வம்சத்திற்கு இழுக்கு உண்டாக்க விஷமிகள் செய்யும் விரோத செயலே பார்சலில் ரவா தோசை என்பதாகும்

ரவா தோசை அதன் தன்மையை கம்பீரத்தை குணத்தை கொல்லும் வேலைகளை கச்சிதமாக செய்யும் பார்சல்

மிக கொடும் மனதுடைய சிலரே ரவா தோசையை பார்சல் செய்ய சொல்வார்கள்

மிக அழகாக கம்பீரமாக மொறு மொறு என்று தங்க நிறத்தில் மிளகும் முந்திரியும் அலங்கரிக்க பெரிய பிளேட்டில் ஸ்டாலுக்கு வரும் மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய ரவா தோசையை பார்சல் செய்யும் அந்த கொடூர காட்சியை காண விரும்புகிறீர்களா உங்கள் மனம் திறந்து நீங்களே சொல்லுங்கள்  வேண்டாமே பார்சலில் ரவா தோசை

No comments:

Post a Comment