Saturday, December 6, 2025

ஹம்பி- துரோகத்தால் வீழ்ந்த சாம்ராஜ்யம்

 ஹம்பி- துரோகத்தால் வீழ்ந்த சாம்ராஜ்யம்

 துரோகத்தால் வீழ்ந்த சாம்ராஜ்யம்: விஜயநகரத்தின் இறுதி நாட்கள்

இன்று நீங்கள் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹம்பிக்குச் சென்றால், அங்கே மொட்டையான பாறைகளையும், சிதைந்த மண்டபங்களையும், உடைக்கப்பட்ட சிலைகளையும்தான் காண முடியும். அவற்றைப் பார்க்கும்போது, "ச்சே... இப்படி பண்ணிட்டாய்ங்களே, பாவிங்க!" என்று வியந்து, பெருமூச்சு விட்டு நாம் கடந்து செல்கிறோம்.

ஆனால், வரலாற்றை உற்று நோக்கினால், அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும் ஒரு சோகக் கதையைச் சொல்வதைக் கேட்கலாம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹம்பி அத்தகைய நிலையில் இல்லை; அது பூலோகச் சொர்க்கமாகத் திகழ்ந்தது.

 அக்கால ரோம் நகரத்தை விடப் பெரியதாக விளங்கியது ஹம்பி. கடைவீதிகளில் காய்கறிகள் விற்பதைப் போல, வைரங்களையும், வைடூரியங்களையும், முத்துக்களையும் படியில் அளந்து விற்ற செல்வச் செழிப்பு மிக்க நகரமாக அது இருந்தது. பஞ்சம் என்பதே அறியாத, கலை, இலக்கியம் மற்றும் செல்வம் கொழித்த பொற்காலம் அது.

இத்தகு பெருமைமிக்க விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசர் சதாசிவராயர். பெயரளவுக்குத் தான். ஆனால், உண்மையில், எண்பது வயதான 'அலிய ராம ராயர்' என்ற முதியவர் ஆட்சி செய்து வந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ராமராயர் விஜயநகரத்தின் பேரமைச்சர். வயது முதிர்ந்தாலும், அவரது உடல் இரும்பை ஒத்த வலிமை கொண்டது. சிங்கத்தைப் போன்ற வீரம் அவரிடம் இருந்தது. தென்னிந்தியாவின் பெரும்பகுதி அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. யாராலும் அவரை அசைக்கக் கூட முடியவில்லை.

 ஆனால், அந்த வீரத்தையே தோற்கடிக்கும் வகையில் அவரிடம் ஒரு பெரும் பலவீனம் இருந்தது. அதுதான், 'அளவுக்கு அதிகமான நம்பிக்கை'. "நாம் நல்லது செய்தால், நமக்கும் நல்லதே நடக்கும்" என்ற அந்த நம்பிக்கைதான், ஒரு சாம்ராஜ்யத்தையே மண்ணோடு மண்ணாக்கிய துரோகத்திற்கு வழிவகுத்தது.

 ராம ராயர் தீவிர இந்து மதப் பற்றாளராக இருந்தாலும், மதங்களைக் கடந்து திறமையை மதிக்கும் குணம் கொண்டவர். "திறமை இருந்தால் போதும், நீ யாராக இருந்தாலும் என் படையில் சேரலாம்; உன் மதம் எனக்குத் தடையல்ல" என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். அது தனிப்பட்ட முறையில் ஒரு உன்னதமான குணமாக இருக்கலாம்; ஆனால், அரசியல் என்று வரும்போது அதுவே ஆபத்தாக முடிந்தது.

 தக்காண சுல்தான்களிடம் பணியாற்றி, அங்கிருந்து விரட்டப்பட்ட 'ஜிலானி சகோதரர்கள்' (Gilani Brothers) எனும் இரு முஸ்லிம் தளபதிகள், தங்கள் படைகளோடு ராம ராயரிடம் தஞ்சம் புகுந்தனர்.



 

ஒரு அமைச்சர் இயல்பாக என்ன செய்திருக்க வேண்டும்?  "எதிரி நாட்டிலிருந்து வந்தவர்கள், உளவாளிகளாக இருப்பார்களோ?" என்று சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், ராம ராயர் அவர்களைச் சந்தேகிக்கவில்லை. அவர்களது திறமையை மட்டுமே பார்த்தார்.

"இனி நீங்கள் என் பிள்ளைகளைப் போன்றவர்கள்" என்று கூறியவர், அவர்களுக்குச் சாதாரண பதவிகளை வழங்கவில்லை. விஜயநகரப் படையின் மிக முக்கியமான உபதலைவர் பொறுப்பில் அவர்களை நியமித்தார். விஜயநகரில் இருந்த முஸ்லிம் படை வீரர்களை அவர்களுக்குக் கீழே நியமித்தார். அவர்களைத் தன் சொந்த உறவைப் போல ராம ராயர் கவனித்துக் கொண்டார்.

 காலம் உருண்டோடியது. 1565-ம் ஆண்டு பிறந்ததுவிஜயநகரத்தின் அசுர வளர்ச்சி தக்காண சுல்தான்களின் கண்களை உறுத்தியது. தங்களுக்குள் எப்போதும் போரிட்டுக் கொள்ளும் பிஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீதர் சுல்தான்கள் நால்வரும், "நமது பொது எதிரி விஜயநகரம் தான்" என்று ஓரணியில் இணைந்தனர். அவர்கள் தங்களுக்குள் பெண் கொடுத்து, பெண் எடுத்து உறவுகளை மேம்படுத்திக் கொண்டனர்.

ஜனவரி 23-ம் தேதி, 'தலைக்கோட்டை' என்னுமிடத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் இரு மாபெரும் படைகளும் மோதின. ஒருபுறம் 80 வயது முதியவர் ராம ராயர், மறுபுறம் நான்கு இளம் சுல்தான்கள்.போர் தொடங்கியது.

 விஜயநகரப் படை ஆக்ரோஷமாகப் போரிட்டது. ராம ராயர் தளர்ந்த வயதிலும் பல்லக்கில் அமர்ந்து, வீரர்களை உற்சாகப்படுத்திப் போரை வழிநடத்தினார். அவரது வியூகத்தைக் கண்டு சுல்தான்களே திகைத்துப் போயினர். சுல்தான்களின் படைகள் சிதறி ஓடத் தொடங்கின.

விஜயநகரத்தில் வெற்றி முழக்கம் கேட்கத் தொடங்கியது. "வெற்றி பெற்றுவிட்டோம்... சுல்தான்கள் பின்வாங்குகிறார்கள்!" என்று விஜயநகர வீரர்கள் ஆரவாரம் செய்தனர்.

சரியாக அந்தத் தருணத்தில்தான் விதி விளையாடியதுஎதிரிகள் ஓடுவதைக் கண்ட ராம ராயர், "இறுதித் தாக்குதலை நடத்தி, அவர்களை விரட்டியடியுங்கள்" என்று ஆணையிட்டு, தான் உயிராக நம்பி வைத்திருந்த அந்த ஜிலானி சகோதரர்களுக்குச் சிக்னல் கொடுத்தார்.

அங்கே நிகழ்ந்ததுதான் வரலாற்றின் உச்சக்கட்டத் துரோகம்!

ஜிலானி சகோதர்கள் விஜயநகரப் பேரரசுக்காக சண்டையிட்டாலும், அவர்களின் இனப் பாசம் அவர்களை உறுத்தியது. கடைசி கட்டத்தில் ஜிலானி சகோதர்கள் சுல்தான்கள் பக்கம் தாவினர். விஜயநகரப் படைக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார்கள் என்று நம்பப்பட்ட ஜிலானி சகோதரர்களின் படைப்பிரிவு, அப்படியே திரும்பித் தங்கள் சொந்த விஜயநகர வீரர்களைப் பின்புறமிருந்து தாக்கத் தொடங்கியது.

சற்று முன் வரை தோளோடு தோள் நின்ற நண்பன், திடீரெனக் கழுத்தை அறுத்தால் ஏற்படும் அதிர்ச்சியைப் போன்றதே அது.

"நம் படையினர் ஏன் நம்மையே தாக்குகிறார்கள்? என்ன நடக்கிறது இங்கே?" என்று மற்ற வீரர்கள் சுதாரிப்பதற்குள், விஜயநகரப் படையின் முதுகில் பீரங்கிகள் முழங்கின. முன்புறம் எதிரிகள், பின்புறம் கூடவே இருந்த துரோகிகள்! நடுவில் சிக்கிக் கொண்ட விஜயநகரப் படை நிலைகுலைந்தது. வீரர்கள் என்ன செய்வதென்று அறியாமல் மடிந்து விழுந்தனர்.

 

குழப்பத்தில் இருந்த ராம ராயரின் பல்லக்கை நோக்கி எதிரிகள் வேகமாக முன்னேறினர். ராம ராயரைப் பாதுகாக்க வேண்டிய அந்த ஜிலானி சகோதரர்கள், எதிரிகளுக்கு சல்யூட் அடித்து வழிவிட்டு ஒதுங்கினர். எதிரிகளின் யானைப் படையினர் அதிவேகத்தில் வந்து தாக்கினார்கள். பள்ளக்கு தூக்கிகள் அப்படியே ராமராயரைக் கீழே போட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவிட்டார்கள்.

இறுதியில்... அந்த 80 வயது மன்னர் சிறைபிடிக்கப்பட்டார்அந்தப் போர்க்களத்திலேயே, சுல்தான் உசேன் நிஜாம் ஷா, ராம ராயரின் தலையைத் துண்டித்தான். வெட்டப்பட்ட தலையை ஒரு நீளமான ஈட்டியில குத்தி உயரத் தூக்கிக் காட்டினர்.

அதுவரை ஆவேசமாகப் போரிட்டுக் கொண்டிருந்த விஜயநகரப் படை, தங்கள் மன்னரின் தலையைப் பார்த்ததும் மனதளவில் உடைந்து போனது. லட்சம் பேரைக் கொண்ட அந்தப் படை சிதறி ஓடியதுஅதன்பிறகு நடந்தது போர் அல்ல... மாபெரும் படுகொலைவெற்றியாளர்கள் ஹம்பி நகருக்குள் நுழைந்தனர். தொடர்ந்து ஆறு மாதங்கள்... ஒரு நாள் அல்லது இரு நாட்கள் அல்ல... ஆறு மாதங்கள் அந்நகரைச் சூறையாடினர்.

 வைரம் விற்ற வீதிகளில் பிணங்கள் குவிந்து கிடந்தன. அழகான கோயில்கள் இடிக்கப்பட்டுச் சிலைகள் உடைக்கப்பட்டன. அரண்மனைகள் தீக்கிரையாக்கப்பட்டுச் சாம்பலாயின. நேற்று வரை உலகின் பணக்கார நகரமாகவும், கலையின் உச்சமாகவும் இருந்த ஹம்பி, வெறும் சாம்பல் மேடாகவும், பிணங்களின் காடாகவும் மாறியது.

ராம ராயர் மத நல்லிணக்கத்தோடு இருந்தது தவறில்லை. ஆனால் போர்க்களம் என்றும், அரசியல் என்றும் வரும்போது, எதிரியின் கூடாரத்திலிருந்து வந்தவர்களை, எவ்விதக் கேள்வியுமின்றி நம்பி, உப தலைவர்கள் பதவி கொடுத்து அமர வைத்தது எத்துணை பெரிய தவறு என்பதை வரலாறு ரத்தத்தால் எழுதி வைத்துள்ளது.

 "கூடவே இருந்து குழி பறிப்பது" என்ற பழமொழிக்கு, இதைவிடச் சிறந்த, இதைவிடக் கொடூரமான உதாரணம் உலக வரலாற்றில் வேறொன்றும் இருக்க முடியாது.

 அந்த ஒற்றைத் துரோகம், விஜயநகரப் பேரரசு எனும் சூரியனை நிரந்தரமாக அஸ்தமனமாக்கியது. இன்றும் ஹம்பியில் இருக்கும் அந்தச் சிதைந்த கற்கள், அரசியலில் யாரையும் முழுமையாக நம்பாதீர்கள் என்ற பாடத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன