Wednesday, July 2, 2025

சிறுநீரக கற்கள்

 சிறுநீரக கற்கள் 

பொதுவாக, சிறுநீரக கற்கள் நமது சிறுநீரகங்களுக்குள் உருவாகும் தாதுக்கள் மற்றும் உப்பு படிமங்களால் ஏற்படுகின்றன. சிறுநீரக கற்களை ரீனல் கால்குலி, நெஃப்ரோலிதியாசிஸ் அல்லது யூரோலிதியாசிஸ் என்றும் அழைக்கின்றனர்.

அதிக உடல் எடை, ஆரோக்கியமற்ற உணவு, ஒரு சில சப்ளிமென்ட் தயாரிப்புக்கள் மற்றும் மருந்துகள் ஆகியன சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

உங்கள் சிறுநீர் பாதையின் எந்தப் பகுதியிலும் இந்த சிறுநீரக கற்கள் உருவாகலாம். பெரும்பாலும் சிறுநீர் அடர்த்தியாகும் போது, சிறுநீரக கற்கள் உருவாகின்றன தாதுக்கள் (மினரல்படிகமாவதால் சிறிய படிகங்கள் அல்லது கற்களாக அவை உருவாகின்றன.

சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியே கடத்துவது அதிக வலியை ஏற்படுத்தும். ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் எந்தவித நிரந்தர பாதிப்பினையும் ஏற்படுத்தாது.

சிறுநீரக கற்களுக்கான சிகிச்சை முறை அதன் தீவிரத்தன்மையைப்  பொறுத்தே தீர்மானிக்கப்படும். வலியைக் குறைக்க மருந்துகளை உட்கொள்ள கோருவது, அல்லது சிறுநீரக கற்களை சிறுநீர் வழியே வெளியேற்ற நிறைய தண்ணீர் அருந்த சொல்வது போன்றவையும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகளில் உள்ளடங்கும்.  பாதிப்பு தீவிரமாக இருக்கும் பட்சத்தில், சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் (யூரினரி பிலாடர்) தங்கி தொற்றுக்களை ஏற்படுத்துகின்றன; அப்படி நேர்ந்தால் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

சிறுநீரக கற்கள் உருவாக எந்தவொரு வரையறுக்கப்பட்ட காரணியோ அல்லது காரணங்களோ கிடையாது. பின்வரும் பல காரணிகளுள் ஒன்றுசிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கலாம்:

  • குறைவாக தண்ணீர் குடிப்பது.
  • அளவுக்கு அதிகமாக அல்லது மிகக் குறைவாக உடற்பயிற்சி செய்வது
  • உடற்பருமன்
  • எடை குறைப்பு அறுவை சிகிச்சை
  • அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரையை உட்கொள்தல்
  • ஃப்ரக்டோஸ் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவது
  • நோய்த்தொற்றுகள் மற்றும் பரம்பரை ரீதியாக இதே பிரச்சினை இருத்தல்
  • கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தும் உணவுப் பழக்கம்
  • குடல் அழற்சி (இன்ஃப்ளமேஷன்)நோய்
  • ஹைப்பர்பாராதைராய்டிசம்
  • டைப் 2 நீரிழிவு நோய்
  • சோடியம் நிறைந்த உணவு.

சிறுநீரக கற்கள் ஏற்படுவதன் அறிகுறிகள்

சிறுநீரக கற்களின் அளவுகள் வேறுபடலாம் - அவை மணலைப் போல சிறியதாகவோ, கல்லைப் போல அல்லது ஒரு பந்தின் அளவிற்கு  பெரியதாகவோ இருக்கலாம். கற்கள் பெரியதாக இருக்கும்போது அதன் அறிகுறிகளும் அதிகம் தென்படுவதாக இருக்கும். சிறுநீரக கற்களின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • முதுகின் கீழ்பகுதியில் இருபுறமும் கடுமையான வலி ஏற்படுதல்
  • தொடர்ச்சியான வயிற்று வலி
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுத்தல்
  • வாந்தி அல்லது குமட்டல்
  • குளிருடன் கூடிய காய்ச்சல்
  • சிறுநீரில் மோசமான துர்நாற்றம் வீசுதல்
  • மங்கலான அல்லது மஞ்சள் நிற சிறுநீர்

சிறுநீரக கற்களால் அடைப்பு அல்லது எரிச்சல் ஏற்படும்போது வலிக்கத் தொடங்கும். அது கடுமையான வலியாக மாறும். ஆயினும், பெரும்பாலான நேரங்களில், சிறுநீரக கற்கள்  எந்தவிதமான சேதம் அல்லது கடுமையான வலியை ஏற்படுத்தாமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகின்றன.