பிரம்மாண்ட சினிமாவின் ஊற்று ‘சந்திரலேகா’!
தலைசிறந்த கமர்ஷியல் படத்தின் கதையை குறைந்தபட்சம் ஒரு பக்கத்தில் எழுதிவிடலாம் என்பதே உலகம் முழுவதும் நடைமுறையில் இருந்துவரும் இலக்கணம்.
அதேநேரத்தில், அதனைத் திரைக்கதையாக்கி ரசிகர்களிடம் கொண்டுசெல்லும்போது ஒரு நொடி கூட அலுப்பை ஏற்படுத்தக்கூடாது.
இந்த பாலபாடத்தை இந்திய சினிமாவுக்குக் கற்றுத் தந்த திரைப்படம் 1948இல் ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பில்
வெளியான ‘சந்திரலேகா’.
கடந்த சில ஆண்டுகளாக ‘டங்கல்’, ‘அந்தா துன்’,
‘பாகுபலி’ உள்ளிட்ட சில இந்தியத் திரைப்படங்கள்
சீனாவில் ஆங்கில சப்டைட்டில்
உடன் வெளியாகி பல நூறு கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து வருகின்றன.
வெளிநாட்டில் தமிழர்கள் வாழாத பகுதிகளில் கூட தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி பெறுகின்றன.
இதற்கெல்லாம் தொடக்கம் ஏற்படுத்தித் தந்தது சந்திரலேகா தான். இப்படத்தைத் தயாரித்து இயக்கிய எஸ்.எஸ்.வாசன், பிரமாண்ட சினிமா எனும் பதத்தைப் பொறுத்தவரை ரமேஷ் சிப்பி, ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி போன்றோருக்கெல்லாம் முன்னோடி.
ஜெமினி பார்முலாவின் தொடக்கம்!
எளிய கதை, அதனைப் பல முடிச்சுகளுடன் வெளிப்படுத்தும் திரைக்கதை, இனிய பாடல்கள், வசீகரமான நாயகன், நாயகி, கொடூர வில்லன், அழகியலை வெளிப்படுத்தும் காட்சிகள் போன்றவை ஜெமினி ஸ்டூடியோ தயாரிக்கும் படங்களில் நிறைந்திருக்கும்.
சந்திரலேகாவைத் தொடர்ந்து பல படங்களில் இந்த அம்சங்கள் நிறைந்திருந்தன.
இப்படத்தின் கதையில் இடம்பெறும் நாடு எது, எந்த காலகட்டத்தில் நடைபெறுகிறது போன்றவற்றில் படக்குழுவினர் கவனம் செலுத்தவில்லை. டைட்டில் காட்சியிலேயே இது வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக எளிமையான கதை!
நாட்டின் அடுத்த மன்னராக வேண்டுமென்று இரண்டு இளவரசர்கள் முட்டி மோதுவதுதான் படத்தின் மையக்கதை.
வீரசிம்மன், சஷாங்கன் என்று இரண்டு இளவரசர்கள். இருவரில் மூத்த மகன் வீரசிம்மனை அடுத்த வாரிசாக அறிவிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் மன்னரும் ராணியும்.
இதனை உணரும் சஷாங்கன், ஒரு கொள்ளைக்கூட்டத்தை உருவாக்கி நாட்டைச் சூறையாடுகிறார்.
சந்திரலேகா என்ற நாட்டியப் பெண்மணி தன் தந்தையுடன் வசித்து வருகிறார். ஒருநாள் சஷாங்கனின் கொள்ளைக் கூட்டத்தினர் தாக்கியதில் சந்திரலேகாவின் தந்தை மரணமடைகிறார்.
அதன்பின், வேறு ஊருக்குச் செல்கிறார் சந்திரலேகா. அப்போது, அவரைக் கடத்திச் செல்கின்றனர் சஷாங்கனின் ஆட்கள்.
அந்த நேரத்தில் இளவரசன் வீரசிம்மன் முகாம் அமைத்துத் தங்கியிருக்கும் இடத்தையும் முற்றுகையிடுகின்றனர்.
கொள்ளையர்கள் பிடியிலிருந்து தப்பிக்கும் சந்திரலேகா, தனக்கு ஏற்கனவே அறிமுகமான வீரசிம்மனைக் கொல்ல அக்கும்பல் முயல்வதைக் காண்கிறார். சர்க்கஸ் பணியாளர்கள் சிலரது உதவியுடன் அவரை மீட்கிறார்.
சர்க்கஸில் பணியாற்றும் சந்திரலேகாவைக் கடத்த, சஷாங்கனின் ஆட்கள் மீண்டும் முயற்சிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, நாட்டை அபகரித்த சஷாங்கனை வீழ்த்தும் முயற்சியில் இறங்குகிறார் வீரசிம்மன்.
அவருக்கு சந்திரலேகா உதவ, இறுதியில் வீரசிம்மன் வாகை சூடுவதுடன் திரைப்படம் முடிவடைகிறது.
1948ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி தமிழிலும், அதே ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்தியிலும்
இப்படம் வெளியானது. சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான திரைப்படம் என்பதால், படத்தின் கதைக்கரு ரசிகர்களிடையே பெரிதும் ஈர்ப்பைத் தோற்றுவித்தது
நீண்ட காலத் தயாரிப்பு!
பாலநாகம்மா, நந்தனார், மங்கம்மா சபதம் படங்களுக்குப் பின்னர் கண்ணம்மா என் காதலி, மிஸ் மாலினி, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களைத் தயாரித்தார் எஸ்.எஸ்.வாசன்.
இவற்றுக்கு நடுவே சந்திரலேகா, அவ்வையார் என்ற இரண்டு பிரமாண்டமான திரைப்படங்களை உருவாக்க விரும்பினார்.
1943ஆம் ஆண்டே இந்த எண்ணம் வாசன் மனதில் தோன்றியது. அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து சந்திரலேகாவும்,
சுமார்
10 ஆண்டுகள் கழித்து அவ்வையார் திரைப்படமும்
வெளியாகின.
இப்படங்கள் காலத்தை வென்றவையாக இருக்க வேண்டுமென்பதே வாசனின் விருப்பமாக இருந்தது.
சந்திரலேகா படத்தைப் பொறுத்தவரை ஹீரோயின், நாயகன், நாயகி, வில்லன் மட்டுமல்ல கதை கூட பல மாற்றங்களைச் சந்தித்தது.
1944ஆம் ஆண்டு தாசி அபரஞ்சி என்ற திரைப்படப் பாடல் புத்தகத்தின் அட்டையில் சந்திரலேகா, அவ்வையார் பட விளம்பரங்களை வெளியிட்டார் வாசன்.
அதில் சந்திரலேகா படத்தின் நாயகி கே.எல்.வி.வசந்தா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு வசந்தா சென்றதால், அவருக்குப் பதிலாக டி.ஆர்.ராஜகுமாரி நாயகி ஆனார்.
பின்னாளில் வசந்தா டி.ஆர்.சுந்தரத்தின் மணந்துகொண்டு திரையுலகை விட்டே விலகினார் என்பது தனிக்கதை.
வாய்ப்பைத் தவறவிட்ட எம்.கே.ராதா
சந்திரலேகாவில் சஷாங்கன் பாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் எம்.கே.ராதா. ஆனால், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் விருப்பப்படவில்லை.
அதன்பிறகு, ஜெமினியில் பணியாற்றிய உதவி இயக்குனர் கே.ஜே.மகாதேவனை அப்பாத்திரத்தில் நடிக்கவைத்துச் சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
அவற்றில் வாசனுக்குத் தெரியவில்லை. இதன்பிறகே, அப்பாத்திரத்தில் ரஞ்சன் நடிக்க வைக்கப்பட்டார்.
எதிர்மறை பாத்திரமாக இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஈடாக ரஞ்சனின் நடிப்பும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
இதன் விளைவாக, தமிழ் படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு பாலிவுட்டில் பிஸியானார் ரஞ்சன்.
ஆனாலும், சந்திரலேகா படத்தை முழுதாகப் பார்க்கிறபோது சஷாங்கன் பாத்திரத்துக்கு ராதாவே பொருத்தமானவர் என்று தோன்றும். காரணம், அவரது கண்களும் உடல்மொழியும் அவ்வளவு ஸ்டைலாக இருக்கும்.
இன்றிருக்கும் சில ஹீரோக்கள் போலவே, தவறான சில கணக்குகளால் தனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ராதா இழந்திருக்கிறார்.
கலைஞர்களுக்கு மாதச்சம்பளம்!
இப்படத்தின் நடிகர், நடிகைகள் பட்டியலில் முதலாவதாக டி.ஆர்.ராஜகுமாரி பெயர் இடம்பெற்றது. அவரது பெயர் பெரிதாகவும், அதனைத் தொடர்ந்து எம்.கே.ராதா, ரஞ்சன், சுந்தரிபாய், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எல்.நாராயணராவ் பெயர்கள் இடம்பெற்றன.
இப்பட்டியலின் இறுதியில் 100 ஜெமினி யுவர்கள்,
500 ஜெமினி யுவதிகள் என்று குறிப்பிடப்பட்டது. அக்காலத்தில் ஜெமினி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள், நடிகைகள், நடனம் மற்றும் சண்டைக் கலைஞர்கள் மாதச் சம்பளத்தில் பணிபுரிந்தனர்.
படத்தின் நாயகன், நாயகியும் கூட இதில் விதிவிலக்கல்ல.
வழக்கொன்றில் கைதாகிச் சிறை சென்ற என்.எஸ்.கிருஷ்ணன் 1947இல் வெளியே வந்தார்.
அவரும் டி.ஏ.மதுரமும் பங்குபெறும் வகையில் சந்திரலேகா படத்தின் காட்சிகள் சிலவற்றை மாற்றியமைத்தார் வாசன்.
சந்திரலேகா உருவான கதை!
ஜெமினி ஸ்டூடியோ கதை இலாகாவில் பணியாற்றிய வேப்பத்தூர் கிட்டு, 1943ஆம் ஆண்டுவாக்கில்
ஜி.டபிள்யு.எம்.ரெய்னால்ஸ் எழுதிய ‘ராபர்ட் மெக்கெர், தி பிரெஞ்ச் மேல் பண்டிட் இன் இங்கிலாண்ட்’
என்ற நாவலைப் படித்தார்.
குதிரைகளில் கும்பலாக வலம் வந்து, இருள் நேரத்தில் நகரைக் கொள்ளையடிக்கும் திகில் திருடர்கள் பற்றி அதில் விவரிக்கப்பட்டிருந்தது.
அக்கதையின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு சந்திரலேகா கதையை அமைக்கலாம் என்று வாசனிடம் தெரிவித்தார் கிட்டு.
ஏனென்றால், சந்திரலேகா என்ற பெயரைத்தான் வாசன் அறிவித்தாரேயொழிய, அதுவரை அப்படத்தின் கதை என்னவென்பது முடிவாகவில்லை.
பாலநாகம்மா, மங்கம்மா சபதம் போன்ற படத்தின் திரைக்கதைகள் நாயகியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்ததால் சந்திரலேகாவின் திரைக்கதையும் அப்படியே அமைப்பதென்று முடிவானது.
இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை கே.ஜே.மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியம், வேப்பத்தூர் கிட்டு, நைனா என்ற கிரா ஆகியோர் இணைந்து எழுதினர்.
இவர்கள் எழுதிக் குவிப்பவற்றை கேமிராவில் மொழிபெயர்த்துத் தந்தார் இயக்குனர் டி.ஜி.ராகவாச்சாரி என்ற ஆச்சார்யா.
கிட்டத்தட்ட பாதி படத்துக்கும் மேலே முடிந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் நடந்த படப்பிடிப்பின்போது வாசனுக்கும் ஆச்சார்யாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சந்திரலேகாவில் இருந்து விலகினார் ஆச்சார்யா.
அதன்பிறகு வாசன் அப்படத்தின் இயக்குனர் நாற்காலியில் அமர்ந்தார். பலமுறை சந்திரலேகாவின் திரைக்கதை வசனம் மாற்றியமைக்கப்பட்டன. திரும்பத் திரும்ப படமாக்கப்பட்டன.
புகுத்தப்பட்ட சர்க்கஸ் காட்சிகள்!
எடிட்டிங் டேபிளில் காட்சிகளைப் பார்த்தவுடன் வாசனுக்குப் பிடித்தால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் மீண்டும் படப்பிடிப்புக்கு உத்தரவு என்பது வாடிக்கையானது.
கிட்டத்தட்ட முக்கால்வாசி படம் முடிந்த நிலையில், சர்க்கஸ் காட்சி படத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார் வாசன்.
இதையடுத்து, வீரசிம்மனை சர்க்கஸ் குழுவினர் காப்பாற்றுவதாகக் கதையில் மாற்றம் செய்யப்பட்டது.
சர்க்கஸ் காட்சிகள் பிரம்மாண்டமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகப் பல மாதங்கள் அலைந்து திரிந்தனர் ஜெமினி நிர்வாகத்தினர்.
இறுதியில் ஒரு சர்க்கஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு சர்க்கஸ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.
அக்காட்சிகளில் நூற்றுக்கணக்கில் துணை நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டியிருந்ததால் ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்தினருடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சர்க்கஸ் எனும் கலையின் பிரமாண்டம் கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும் வகையில் அக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் கே.ராம்நாத். ஆனால், அவரது பெயர் டைட்டிலில் இடம்பெறவில்லை.
சிங்கம், புலி, யானை, குரங்கு உட்படப் பல மிருகங்கள் பங்கேற்கும் அத்தகைய சர்க்கஸ் காட்சிகளை இன்று எங்கேயும் காண முடியாது.
விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டால் ஆடு, மாடு பங்கேற்கும் காட்சிகள் கூட திரையில் வரமுடியாது என்பதே இன்றைய யதார்த்தம். ஆனால், இப்படத்தில் சில காட்சிகள் மயிர்க் கூச்செரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
சந்திரலேகா வெற்றியைத் தொடர்ந்து, அந்த சர்க்கஸ் குழு தங்களது நிறுவனத்தின் பெயரை ஜெமினி என்று மாற்றிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
டிரம்ஸ் நடனமும் சந்திரலேகாவும்!
சந்திரலேகா என்றவுடனே இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் வந்து போவது படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம்தான். இந்த நடனக் காட்சியை வடிவமைத்த பெருமைக்குரியவர் ஜெயா சங்கர்.
இப்பாடலின் தொடக்கத்தில் ஒரு பெண் மட்டுமே திரையில் தோன்ற, கேமிரா நகரும்போது அவரது பின்னால் பல பெண்கள் தெரிய வருவது இப்போதும் மனதுக்குள் உத்வேகத்தை ஊட்டுவதாக உள்ளது.
இப்பாடலுக்காக மட்டும் அந்த காலத்தில் 5 லட்சம் ரூபாய் செலவு செய்தாராம் வாசன்.
இப்படத்தின் வேறு சில பாடல்களுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ரெயின்பேர்ட், இலங்கையைச் சேர்ந்த நிரஞ்சலா தேவி மற்றும் நடனம் நடராஜ் ஆகியோர் நடன வடிவமைப்பு மேற்கொண்டனர்.
சந்திரலேகா படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில் ஜெமினி ஸ்டூடியோவின் உள்ளே நடனக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் நடனமாடி ஒத்திகை பார்க்க,
இன்னொரு பக்கம் பிரம்மாண்ட செட்களை உருவாக்கும் முயற்சியில் கலைஞர்கள் ஈடுபட, மற்றொரு பக்கம் யானை, குதிரை உட்பட விலங்குகள் பயிற்றுவிக்கப்பட,
கேமிராவுக்குப் பின்னே பணியாற்றும் பல்துறைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஆங்காங்கே தங்கள் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு பேரரசு போல ஜெமினி ஸ்டூடியோ இருக்கும்.
படத்தின் கதை இலாகாவில் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு சொன்ன தகவல் இது.
ஏ.கே.சேகர் எனும் மேதை!
சந்திரலேகாவின் பிரம்மாண்டத்துக்கு முழுமுதல் காரணம் அதன் கலை இயக்குனர் அப்பாகுணம் குலசேகர் என்ற ஏ.கே.சேகர். சுமார் 70க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களில்
பணியாற்றியவர்
இவர்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் மட்டுமல்லாமல் அவர்களது முந்தைய தலைமுறை நடித்த படங்களிலும் பணியாற்றியவர்.
செட் டிசைனிங், ஆர்ட் டைரக்ஷன், சவுண்ட் ரிக்கார்டிங், டைரக்ஷன் என்று பல துறைகளிலும் இவருக்கு அனுபவம் உண்டு.
சந்திரலேகா போலவே, அதே காலகட்டத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட ‘கல்பனா’ படத்திலும் இவரே கலை இயக்கத்தைக் கையாண்டார்.
நடனக் கலைஞர் உதயசங்கர் இயக்கிய கல்பனா, இந்தியத் திரையுலகில் நாட்டியம் குறித்த திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்பாகும்.
ஆயிரத்தில் ஒருவன், அதே கண்கள் உட்படத் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற படைப்புகளில் இவரது பங்கு உண்டு.
ஜெமினி செய்த புதுமைகள்!
பிரம்மாண்டமான செட், கலர்புல் ஆடைகள், விதவிதமான லொகேஷன்கள், சில நிமிட இடைவெளியில் பல நூறு நடனக் கலைஞர்கள் தோன்றும் பாடல் காட்சிகள், நீண்ட நேர சண்டைக் காட்சிகள், இவை எல்லாவற்றுக்கும் மேலே திரையரங்கினுள் குதூகலம் ததும்ப வைக்கும் மேக்கிங் போன்றவை ஒரு கமர்ஷியல் படத்துக்கு அவசியம் என்று உணர்த்தியது சந்திரலேகா.
உள்ளாடை அணிந்த இரண்டு சிறுவர்கள் குழலூதும் வகையில் அமைந்த ஜெமினி லோகோ திரையில் தோன்றியதுமே தியேட்டரில் மக்கள் ஆர்ப்பரித்த காலமொன்று உண்டு. அதற்கு விதை போட்டது இப்படம் தான்.
நந்தனார் உட்பட சில படங்களை எஸ்.எஸ்.வாசன் தயாரித்திருந்தாலும் சந்திரலேகா என்பது ஜெமினியின் கனவுப்படைப்பாக இருந்தது.
ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் அந்நிறுவனத்தையே பாதிக்கும் அளவுக்கு பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டது.
இப்படைப்பு எந்த காலகட்டத்தையும் எந்த நபரையும் குறித்துப் படமாக்கப்பட்டதல்ல என்ற வரிகள் சந்திரலேகா ஆங்கில டைட்டிலின் கீழே குறிப்பிடப்பட்டது.
இது அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்திலும் புதுமையான ஒன்றுதான்.
இப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையை எம்.டி.பார்த்தசாரதி, ஆர்.வைத்தியநாதன், பி.தாஸ்குப்தா ஆகியோர் அமைத்திருந்தனர்.
தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு முன்னதாகப் படத்தொகுப்பு, ப்ராஸஸிங் போன்றவற்றை டைட்டிலில் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது.
இதுவே இரண்டு துறைகளும் அக்கால சினிமாவில் எந்த அளவுக்கு முக்கியமாய் பார்க்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இப்படத்தில் சுமார் 3,381 பேர் பணியாற்றியுள்ளனர். படப்பிடிப்பில் கலைஞர்கள் உடல்நலனுக்காக அமர்த்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களும் இதில் அடக்கம்.
மார்க்கெட்டிங் உத்திகளில் கிங்!
முதன்முதலாக 609 பிரதிகள் எடுக்கப்பட்ட
சிறப்புடையது
சந்திரலேகா. தமிழில் வெளியானதும்
இப்படத்தின்
இந்தி உரிமையைக் கேட்டு தாராசந்த் என்பவர் வாசனை அணுகினாராம்.
ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை.
இத்திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கில சப்டைட்டில் இணைக்கப்பட்டு வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
பின்னாட்களில் ஆங்கிலம், ஜப்பானிஷ், டேனிஷ் உள்ளிட்ட சில மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.
இந்தியா முழுவதும் 1,081 தியேட்டர்களில்
இப்படம் வெளியானது. அப்போதைய சென்னை மாகாணத்தில்
40 தியேட்டர்களில்
வெளியிடப்பட்டது
பெரிய சாதனையாக விளம்பரப்படுத்தப்பட்டது.
சந்திரலேகா படத்தின் பிரதிகள் எடுக்கப்பட்டது வரையிலான செலவு ரூ.30 லட்சத்து
83 ஆயிரத்து
200.
1948, 1949 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இப்படத்தின் விளம்பரங்கள் தினசரிகள் இதழ்களில் வெளியாக 5 லட்சத்து
74 ஆயிரத்து
500 ரூபாய் செலவழிக்கப்பட்டது.
முழுப்பக்க திரைப்பட விளம்பரம் என்பதனை அறிமுகப்படுத்திய பெருமை வாசனுக்கே உண்டு.
மிகப்பெரிய அளவில் பேனர்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள் வெளியிட்டது போன்றவற்றுக்காக 6 லட்சத்து
42 ஆயிரத்து
300 ரூபாய் செலவழிக்கப்பட்டது.
அப்பர்ஸ்டால் எனும் இணையத்தில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளியான ஒன்றரை ஆண்டுகளுக்குள் சுமார் 1 கோடியே
55 லட்சத்து 5
ஆயிரத்து
817 ரூபாய் வசூல் செய்தது சந்திரலேகா திரைப்படம்.
அதன்பிறகு பலமுறை தியேட்டர்களில் திரையிடப்பட்டதற்கான தொகை, படத்தின் இதர விஷயங்கள் மூலமாகக் கிடைத்த வருமானம் அனைத்தும் தனி.
அந்த வகையில், இந்திய சினிமாவில் பிரம்மாண்டத் திரைப்பட உருவாக்கத்துக்கான இலக்கணத்தை வகுத்தவர் வாசன்.
தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இந்தித் திரையுலகில் வெற்றிகரமாக வலம்வருவதற்குத் தொடக்கம் ஏற்படுத்தியவர்.
ஏவிஎம். மெய்யப்பச் செட்டியாரே இதனை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1950களுக்கு பிறகு ஏவிஎம், விஜயா வாஹினி, வீனஸ், சித்ராலயா, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தித் திரையுலகில் வெற்றிகளைச் சுவைத்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்கள் மட்டுமே சென்னையில் தயாராகும் என்ற நிலை மாறி இந்தித் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன.
இன்று தமிழ் திரைப்பட இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் இந்திப் படங்களில் பணியாற்றுவது அவ்வப்போது நிகழ்கிறது.
ஆனாலும், தமிழ் தயாரிப்பாளர்கள் எவரும் இந்தித் திரைப்படங்களைத் தயாரிக்க முடியாத அளவுக்கு அவற்றின் உருவாக்கமும் வெளியீடும் பல நூறு கோடி ரூபாய் வணிகத்துக்கு மாறியுள்ளன.
தவறாகிப்போன வாசன் கணக்கு!
திட்டமிடல், நேர்த்தி, படைப்பை மக்களிடம் சேர்க்கும் நுட்பம் மற்றும் திரைக்கலையின் அடிப்படையில் தெளிவு போன்றவற்றினால் இன்றும் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது வாசனின் புகழ்.
ஆனால், சந்திரலேகாவைப் பொறுத்தமட்டில் அவரே ஒரு தவறான கணிப்பைக் கையிலெடுத்தார்.
இப்படத்தில் எம்.கே.ராதாவின் பாதுகாவலராக முதலில் நடிக்கவிருந்தவர் வி.சி.கணேசன் எனும் சிவாஜி கணேசன்.
ஒல்லியாக, இடுங்கிப்போன கண்களுடன் இருந்த அவரது தோற்றமும், நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்த அனுபவமும் கண்டு, அந்த பாத்திரத்துக்கு அவர் பொருத்தமானவர் அல்ல என்று எஸ்.எஸ்.வாசனின் மனதில் தோன்றியது.
சிவாஜியை பரிந்துரை செய்தவர் ஜெமினி கதை இலாகாவைச் சேர்ந்த வேப்பத்தூர் கிட்டு. அவரிடம் இதனை நேரடியாகச் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன்.
இதையடுத்து அந்த வேடத்தில் ஜாவர் சீதாராமன் நடித்தார். நாவல்கள் பலவற்றை எழுதிய அவர், பட்டணத்தில் பூதம் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்.
அதே நேரத்தில், எந்த நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே நிறுவனத்தின் தயாரிப்பில் பின்னாளில் நாயகனாக நடித்தார் சிவாஜி.
வாசனின் இயக்கத்தில் இரும்புத்திரையிலும், அவரது மகன் பாலசுப்பிரமணியம் என்ற எஸ்.எஸ்.பாலனின் இயக்கத்தில் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திலும் அவரது நடிப்பு ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் மைல்கல்!
1960களில், 1970களில் வெளியான சில திரைப்படங்களை
இன்று பார்க்கும்போது
அயர்வாக இருக்கும்.
அலுப்பூட்டும் திரைக்கதை, அரதப்பழசான வசனம், வேறுபாடற்ற கேமிரா கோணங்கள், எரிச்சலூட்டும் நடிப்பு என்று ரசிகர்களை பாடாய்படுத்தும் விஷயங்களே நிறைந்திருக்கும்.
ஆனால், அவற்றுக்கு முன்னதாக வெளியான சில படங்கள் திரை இலக்கணத்துடன் அமைந்திருப்பது நிச்சயம் ஆச்சர்யம்தான்.
அந்த வகையில் சந்திரலேகாவை இப்போது பார்த்தாலு பிரமிப்பு நிச்சயம்.
நூற்றுக்கணக்கான மனிதர்களும் குதிரைகளும் பிரமாண்ட அரங்குகளும் மட்டுமே இதற்குக் காரணமல்ல.
படத்தின் இடையே வீரசிம்மனும் சந்திரலேகாவும் தப்பியோட முயற்சிக்கும்போது, அவர்கள் செல்லும் குதிரை வண்டியை நிறுத்துவார் ஒரு வீரர். இருவரும் பதைபதைப்பில் இருக்கும்போது, ‘இருங்க என் பொடி டப்பியை எடுத்துக்கறேன்’
என்பார்.
இதுபோன்ற திரைக்கதைத் திருப்பங்கள்தான் இன்றும் ரசிகர்களைக் குதூகலப்படுத்துகிறது.
கடலில் தொலைத்த பொருளைத் தேடும்போது வேறொன்று கிடைப்பது போல, சந்திரலேகாவைப் பற்றி அறிய முற்படும்போது பல தகவல்கள் தெரிய வருகின்றன.
சந்திரலேகாவை இன்று மீண்டும் படமாக்குவது முடியாத காரியம். ஆனால், அதனைச் செய்துவிட வேண்டுமென்ற துடிப்பு இன்று பல படைப்பாளிகளிடம் இருக்கிறது.
அதுவே சந்திரலேகா மூலமாக எஸ்.எஸ்.வாசன் படைத்த ஆகச்சிறந்த சாதனை!
படத்தின் பெயர்: சந்திரலேகா, தயாரிப்பு, இயக்கம்: எஸ்.எஸ்.வாசன், படத்தொகுப்பு: சந்துரு, கலை இயக்கம்: ஏ.கே.சேகர், கதை, திரைக்கதை, வசனம்: ஜெமினி கதை இலாகா, பாடல்கள்: பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, இசை: எஸ்.ராஜேஸ்வரராவ், ஒளிப்பதிவு: கமால் கோஷ், ஒலிப்பதிவு: சி.இ.பிக்ஸ், சண்டைக்காட்சி: ஸ்டண்ட் சோமு, நடனம்: ஜெயா சங்கர், நிரஞ்சலா தேவி, ரெய்ன்பேர்ட், நடனம் நடராஜ்
நடிப்பு: டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.ராதா, ரஞ்சன், சுந்தரிபாய், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், ஜாவர் சீதாராமன் மற்றும் பலர்.
No comments:
Post a Comment