பொன்னியின் செல்வன்
'பொன்னியின் செல்வன்' தமிழகத்தில் ஒரு வரலாறாகவே அணுகப்படுகிறது.வரலாற்று மாந்தர்களும்,வரலாற்று சம்பவங்களும் அதில் இல்லாமல் இல்லை.ஆனால் சம்பவங்களின் புள்ளிகளை அழகான கற்பனை கோடுகளால் இணைக்கப்பட்ட கோலம் அது..
இப்போது அது சினிமாவாக வரும் போது அதன் வீச்சு பெரிதாகும்.அதை வரலாறாகவே கருத எல்லா வாய்ப்பும் இன்னும் அதிகமாகியுள்ளது.எனவே சில விஷயங்களை நமதளவில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
முதலில் பொன்னியின் செல்வன் உருவாக காரணமே உடையார்குடியில் அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுதான்.அந்த கல்வெட்டு சோழ தேசத்தின் இணை ஆட்சியாளனாக இருந்த ஆதித்த கரிகாலனின் கொலையையும்,அதில் சம்பந்தப்பட்ட துரோகிகளின் பெயரையும் பட்டியலிடுகிறது.அந்த துரோகிகள் எளிய மனிதர்கள் அல்ல சோழநாட்டின் பெருந்தரத்து அதிகாரிகளாக மிகப்பெரிய அதிகாரத்தில் இருந்தவர்கள்.
இவ்வளவு இளைய வயதில்,அதுவும் அடுத்ததாக பட்டம் ஏற்க தயாராக இருந்த ஆதித்த கரிகாலனை குறி வைத்து கொலை செய்யும் அவசியம் யாருக்கு இருந்தது? அந்த சதியில் ஏன் சோழநாட்டு உயரதிகாரிகள் ஈடுபட்டார்கள் என்கிற கேள்வியில்தான் பொன்னியில் செல்வன் என்கிற கதையே முளைக்கிறது.
முதலாம் பராந்தகனுக்கு பின்,சரியாக பொயு 953 - 985 வரை சோழநாட்டின் அரசியல் மிகப்பெரிய அரசியல் சதிகளும்,மர்மங்களும் உள்ள பகுதியாகவே உள்ளது.அதில் மர்மம் என்று நினைக்க காரணம் போதுமான தரவுகள் கிடைக்காததே ஆகும்.ஆனால் ஒரு புனைவெழுத்தாளனுக்கு தேவையான எல்லா தடையங்களும்,யூகங்களின் உற்பத்தி காலமாகவும் அது உள்ளது.
ராஜாதித்தன் - கண்டராதித்தர் - அரிஞ்சயன் - உத்தமசீலி இந்த நால்வரும் முதலாம் பராந்தகனின் வாரிசாவார்கள்.பராந்தகனுக்கு பின் அவனுடைய மகனான கண்டராதித்த சோழர் அரியணைக்கு வருகிறார்.இவர் ராஜாதித்யனின் சகோதரராவார்.சைவத்திருமுறையில் ஒன்றான திருவிசைப்பா பாடியவர்.இவருடைய மனைவியே சேரகிளைக்குடியான மழவர் மகள் செம்பியன் மாதேவியாவார்.
இராஜகேசரியான 'சிவஞான' கண்டராதித்த சோழர் மேற்கெழுந்து அருளிய பின்[பொயு 907],அவருடைய மகனான மதுராந்தகன் உத்தமசோழன் குழந்தையாக இருப்பதாலும் மிக இக்கட்டான கட்டத்தில் சோழதேசம் இருந்ததால்,உத்தமசோழனின் சித்தப்பாவும்,கண்டராதித்தரின் தம்பியுமான பரகேசரி அரிஞ்சய சோழன் அரியணை ஏறுகிறான்..
சேர கிளைகுடியினரான பழுவேட்டரையரின் மகளுக்கும் பராந்தகனுக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன்.கோப்பரகேஸரி அரிஞ்சய சோழனின் ஆட்சிகாலம் பொயு 956 - 957 என இதற்குள் குறைவானதே என்கிறார்கள்.அரிஞ்சய சோழனின் மரணம் எப்படி நடந்தது என தெரியாது உடனே அவரது மகன் சுந்தரசோழன் அதிகாரத்துக்கு வருகிறார்.
கோராஜகேஸரி சுந்தரசோழனின் ஆட்சியாண்டு பொயு 957 - 970 என்று கணிக்கப்பட்டுள்ளது.இவருடைய மகள் குந்தவை,மகன்களே ஆதித்த கரிகாலனும்,அருண்மொழி வர்மனுமாவார்கள்.சுந்தரசோழன் மாவீரனாக திகழ்ந்தார்.
முதலாம் பராந்தகன் காலத்தில் உச்சத்துக்கு சென்ற சோழநாடு,அவருடைய இறுதிக்காலத்தில் ராஜாதித்தன் மரணத்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.அதை மீண்டும் உயரிய இடத்தை நோக்கி நகர்த்தும் பணியை கோராஜகேஸரி சுந்தரசோழனும் அவருடைய மகனான சோழநாட்டின் இணையாட்சியாளனான ஆதித்த கரிகாலனும் செய்தார்கள்.
பொயு 913 ல் பாண்டிய நாட்டை வெள்ளூர் போரில் முதலாம் பராந்தகன் வீழ்த்தியது போல அல்லது அதைவிட மூர்க்கமாக பொயு 962 ல் சேவூரில் இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழன் வீழ்த்தினார்.அந்த சேவூர் போரில் வீரசாகசம் புரிந்து வீரபாண்டியனின் தலையை கொய்து தஞ்சாவூர் கோட்டையில் தொங்கவிட்டான் ஆதித்த கரிகாலன் என்று செப்பேடுகள் சொல்கிறது.வீரபாண்டியன் தலைகொய்த கோப்பரகேஸரி என்றே ஆதித்தகரிகாலனின் கல்வெட்டுகள் கிடைக்கிறது.
பட்டத்தரசனாக தந்தை சுந்தரசோழன் இருக்கும் போது இணையாட்சியாளனாக ஆதித்த கரிகாலன் சோழநாட்டின் வடபகுதியில் படையை நிலைநிறுத்தி ஆண்டது தெரிகிறது.மூன்றாம் கிருஷ்ணனிடம் இழந்த பகுதிகளை மீட்டெடுத்து தன்னை சோழநாடு மீண்டும் நிலைநிறுத்த தன் வாளால் வழி செய்தான் ஆதித்தகரிகாலன் என்று புரிகிறது.
இப்படிப்பட்ட கீர்த்திவாய்ந்த ஆதித்த கரிகாலனை கொலை செய்யும் ஒரு உட்சதியில் சோழநாட்டு உச்சபட்ச அதிகாரிகளே பங்கு பெற காரணமென்ன? என்ற கற்பனையே பொன்னியின் செல்வன் கதை எழுத காரணமான கருப்பொருள்.
அதே போல தன் சிற்றப்பனும்,சிவஞான கண்டராதித்தசோழர் - செம்பியன் மாதேவியாரின் திருமகனுமான மதுராந்தக உத்தமசோழனுக்காக அரசு அதிகாரத்தை விட்டுத்தந்து,தியாகமேகமாக நடந்து ஷத்திரிய தர்மத்தை காத்தான் அருண்மொழிவர்மன் என ராஜராஜசோழனை குறிப்பிடும் திருவாலங்காட்டு செப்பேடும் அதற்கொரு முக்கிய காரணமாகிறது.
அரிஞ்சயனுக்கு பிறகு சுந்தரசோழன் சுந்தரசோழனுக்கு பிறகு இளவரசு பட்டம் சூடிய ஆதித்தகரிகாலன் வரவேண்டும்.அவன் இறந்ததால் அவன் சகோதரன் அருண்மொழிவர்மன் வர வேண்டும்.ஆனால் உத்தமசோழனுக்கு பதவியை விட்டுத்தர வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
கண்டராதித்தருக்கு பிறகு குழந்தையாக இருந்ததால் உத்தமசோழனுக்கு முடிசூட்டமுடியாமல் அரிஞ்சயனும் அவன் வாரிசுகளும் அதிகாரத்தை அடைந்தார்கள்.அதனால் இப்போது திரும்பத் தரவேண்டுமென்றால் அதை ஏன் சுந்தரசோழன் செய்யவில்லை? என்கிற கேள்வி வருகிறது.
இதனால்,தனக்கு பிறகு ஆதித்த கரிகாலனுக்கு முடிசூட்ட வழிவகை செய்துவிட்டார் சுந்தரசோழன் என்ற வெறுப்பில்,அதிகாரத்துக்கு வரவேண்டிய ஆதித்த கரிகாலனை உத்தமசோழனே கொன்றுவிட்டார் சதி செய்து,என்கிற கருதுகோளை நீலகண்ட சாஸ்த்திரியே உண்டு செய்கிறார்.
இதற்கு தகுந்தாற் போல சில குழப்பங்கள் இருந்தது.சேரக் கிளைக்குடியினரான மழவர் மகளே செம்பியன் மாதேவியார் அவருடைய புதல்வன் உத்தமசோழர்.அது போல,இன்னொரு சேர கிளைக்குடியினரான பழுவேட்டரையரின் மகளான அருள்மொழிவேங்கையின் மகனே அரிஞ்சயன்.ஆனால் சுந்தரசோழன் அரிஞ்சயனுகும் வைதும்பராய இளவரசியான கல்யாணிக்கு பிறந்தவர்.
சுந்தரசோழனுக்கும் மலையன் மகளான வானவன் மாதேவிக்கும் பிறந்தவர்களே ஆதித்த கரிகாலன்,அருண்மொழி வர்மன்,குந்தவை என அனைவரும்.எனவே,இது சோழ பேராட்சியை தூண்களாக தாங்கிய சிற்றரசு குலங்களுக்குள் ஏதேனும் பனிப்போரை உண்டு செய்திருக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பியது.
இந்த சந்தேகமே நீலகண்டசாஸ்த்திரியின் கருதுகோளை வலுப்படுத்தியது.ராஜராஜன் அரியணை ஏறிய பின் படிப்படியாக பழுவேட்டரையர்களின் அரசியல் வீழ்ச்சி எல்லோருக்குமே அந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது.அதே சந்தேகம் கல்கியின்,'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு கற்பனையை வளர்த்தது.
ஆனால்,தனது பெரிய பாட்டியான செம்பியன் மாதேவியார் மீது ராஜராஜன் வைத்திருந்த மரியாதையும்,உத்தமசோழனுக்காக பதவியை தியாகம் செய்த அவனுடைய தர்மத்திற்கும் பின்னால் ஒரு கொடூரமான அரசியல் கொலை இருக்க முடியாது என கல்கி நம்பினார்.
"ஸ்ரீமதுராந்தக தேவரான உத்தமசோழரை திருவயிறு வாய்த்த பிராட்டியார்" என்று செம்பியன் மாதேவியை ராஜராஜன் அழைக்கிற போது,தன் மகனுக்கே மதுராந்தகன் என அவருடைய பெயரை சூட்டியிருக்கும் போது,உத்தமசோழன் எப்படி அப்பேற்பட்ட கொலையை செய்திருக்க முடியும்? என்று கல்கி கருதினார்.
உத்தமசோழன் வேடத்தில் இருப்பவன் பாண்டியன் அமரபுஜங்கன் என்றும்,வீரபாண்டியனின் தலையை கொய்தற்காக நடந்த பழிவாங்கும் படலம்தான் ஆதித்தகரிகாலன் கொலை என்றும்,அதற்கு காரணம் அனந்தீஸ்வரம் கோவில் கல்வெட்டில் உள்ள சோமன் - ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராயன் - பரமேஸ்வரன் இருமுடிசோழ பிரம்மாதிராஜன் ஆகிய அதிகாரிகளே.இவர்கள் சோழநாட்டிற்குள் புகுந்து அதிகாரத்தை அடைந்த தென்னவன் ஆபத்துதவிகள் என்றும் கதையை எழுதினார்.
உண்மையில் இவர்கள் தென்னவன் ஆபத்துதவிகள் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது.'பஞ்சவன் பிரம்மாதிராஜன்' என்று பட்டமிருப்பதால் இவர்கள் பாண்டியன் என்றால்? 'பஞ்சவன் மாராயன்' என்று பட்டம் வழங்கப்பட்டிருந்த ராஜேந்திரசோழனும் பாண்டியனா? அல்லது 'பஞ்சவன் மாதேவியார்" பாண்டிய பட்டத்து ராணியா?
முதலில் 'பஞ்சவன்' என்கிற பெயர் சோழர்களுக்கே இருந்துள்ளது.அதை கன்னியாகுமரி கல்வெட்டும் குறிப்பிட்டுள்ளது.சோழர்களின் சூர்யகுல முன்னோன் ஐந்து இயக்கர்களுக்கு தன் குருதியை கொடுத்தான் என்று புராணத்திலிருந்து காட்டப்படும் ஒருவனே 'பஞ்சவன்' என்கிறது.சிபி - மனு போல பஞ்சவனும் ஒரு புராண சோழன்.
ஆனால் இதை பரவலாக அவர்கள் குறிப்பிடவில்லை என்பதால் இதை எடுக்க வேண்டிய அவசியமில்லை.பாண்டிய தேசத்தை வென்ற தண்டநாயகர்களாகவே இவர்களை பார்க்க வேண்டுமே அல்லாமல் பாண்டியன் ஆபத்துதவிகள் சோழப்படைக்குள் புகுந்திருந்தார்கள் என்பது கதைக்கு உதவுமே தவிர அது வரலாறல்ல.
ஆனால்,உயர்தரத்து அதிகாரிகள் அடுத்தது பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசனை,இணை ஆட்சியாளனை கொல்லக் காரணமென்ன என்பது புரியாத புதிரே.இந்த புதிர் தரும் சுவாரஸ்யம் இன்னும் லட்சம் கதைகளை உண்டு செய்யும் ஆனால் அவை வரலாறல்ல என்ற புரிதல் மட்டுமே நமக்கு இருக்க வேண்டியது..
No comments:
Post a Comment