Saturday, December 10, 2022

கணவன் மனைவி

 கணவன் மனைவி

கணவன் மனைவி என்றாள் இப்படியல்லவா இருக்கனும்

ஒரு பெண்ணின் குடும்பத்தின் பழக்கம் இது.

காலையில் யார் எழுந்தாலும் காஃபி அல்லது தேநீர் தயாரித்து ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்து விடுவார்கள். யார் எழுந்து வந்ததும் அவர்களாகவே அந்த காஃபி அல்லது தேநீரை ஊற்றி பருகுவார்கள்.

ஒரு ஆணின் குடும்பத்தின் பழக்கம் இது. ஒவ்வொருவர் எழுந்து வரும் போதும் அந்த வீட்டுத் தலைவி "உனக்கு காஃபி வேண்டுமா டீ வேண்டுமா?" என்று கேட்டு அவர் தேவைக்கு ஏற்ப தயாரித்து வழங்குவார்.

இப்படி சூழ்நிலையில் வளர்ந்த இந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கொள்வோம். அந்த ஆண்கணவன் முன்னரே எழுந்திருந்தாலும் , மனைவி வந்து இவனிடம் கேட்டு காஃபி தயார் செய்து தரட்டும் என்று காத்திருப்பார்.

மனைவி எழுந்து வரும் போதே "அவர் முன்பே எழுந்து விட்டாரோ! அப்போ காஃபி தயாராக இருக்கும்" என்று ஃபிளாஸ்கை தேடுவார்.

இப்போது என்ன நடக்கும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

மனைவி: ஏங்க நீங்கதான் நேரத்திலேயே எழுந்து விட்டீர்களே ஏன் காஃபி போட்டு வைக்கவில்லை?"

கணவன்: காஃபி போடறது பொண்டாட்டி வேலை, லேட்டா எந்திரிச்சதும் இல்லாமல் என்னை காஃபி போடச் சொல்கிறாயா?

மனைவி: இப்ப என்ன கேட்டுவிட்டேன். எந்திரிச்சு இவ்வளவு நேரம் சும்மா தானே இருந்தீங்க, ஒரு காஃபி போட்டு நீங்களும் குடித்து விட்டு எனக்கும் வைத்திருக்கலாமே?

கணவன்: நீயெல்லாம் ஒரு குடும்ப பெண்ணா? ஒரு ஆம்பளைய சமையல் செய்ய சொல்றஉன்ன பெத்தவங்கள சொல்லனும்.

மனைவி: எதுக்கு எங்க அம்மா அப்பாவ இழுக்கறீங்க? ஆணாதிக்க மனோபாவம் உங்களுக்கு கூடாது.

ஒரு காஃபிக்காக ஒரு விவாகரத்து வரைகூட போகலாம்.

சரி இதனையே வேறு மாதிரி கற்பனை செய்து பாருங்கள்.

மனைவி வளர்ந்த குடும்ப சூழ்நிலை அறிந்த கணவன். கணவன் வளர்ந்த விதம் புரிந்து கொண்ட மனைவி.

காலையில் முன்பே எழுந்த கணவன் "அவள் நேற்று நிறைய வேலைகளை முடித்து இரவு தூங்க நேரம் ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். நான் சும்மா தானே இருக்கிறேன். காஃபி தயாரித்து நானும் பருகி விட்டு அவளுக்கும் ஃபிளாஸ்கில் வைத்து விடுவோம்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே காஃபியை பிளாஸ்கில் வைத்து விடுகிறான்.

சற்று தாமதமாக எழுந்த மனைவி கணவன் எழுந்து சோஃபாவில் அமர்ந்து இருப்பதை கண்டு பதறிக்கொண்டு

" ஏங்க என்னை எழுப்பி விட்டிருக்கலாமல்ல. இருங்க ஒரே நிமிடத்தில் காஃபி போட்டு தருகிறேன்" என்று சொல்ல கணவனோ

"இந்தா மொதல்ல இந்த காஃபியை குடி. எனக்கு ஒன்றும் அவசரம் இல்லை. உனக்கு நேத்து எவ்வளவு வேலை. லேட்டா வேற தூங்கினாய், அதனால் தான் நானே காஃபி போட்டு வைத்து விட்டேன்" என்று கணவன் சொல்ல

"ஏங்க ஒரு ஆம்பளை சமையல் வேலை செய்யலாமா" என்று அவள் சொல்ல

" இதுல ஆம்பளை என்ன பொம்பளை என்ன, இன்னைக்கு நான் எழுந்தேன் செய்து விட்டேன், நாளைக்கு நீ முன்பே எழுந்தால் நீ செய்ய போற"என்று கணவன் சொல்ல

அந்த நாள் மட்டுமல்ல அடுத்து வரும் நாட்களும் இனிமையாக இருக்கும் அல்லவா .

இதற்கு பெயர் விட்டு கொடுப்பது அல்ல. ஒருவர் மீது அடுத்தவருக்கு இருக்கும் அன்பு. இப்படி அன்பு இழையோடும் வாழ்க்கையில் யார் யார் பெரியவர் யார் சிறியவர் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று பேதங்கள் இல்லாமல் குடும்பம் குடும்பமாக இருக்கும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக வளரும். அடுத்த தலைமுறை சிறக்கும்.

 

No comments:

Post a Comment