Thursday, December 8, 2022

சுமைதாங்கி

 சுமைதாங்கி



 அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் நினைவுச் சுவடுகள் !! எத்தனை பேருக்கு தெரியும்???

"சுமைதாங்கி"

கிராமங்களின் வீதி ஓரங்களில், நுழை வாயில்களில் அரிதாகக் காணப்படும் கற்களிலான இத்தகைய அமைப்பானது "சுமைதாங்கி" எனப்படுகிறது. எமது முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் தற்போதுள்ளது போன்று வாகன வசதிகள் கிடையாது. மிகவும் எடை கொண்ட, பெரும் பொதிகளைச் சுமப்பதற்கே அவர்கள் மாட்டு வண்டிகளை உபயோகித்திருப்பார்கள். அனைவரிடமும் மாட்டு வண்டி வசதியும் இருந்திருக்காது. அதனால் முற்காலத்தில் பல பேர் எடை கொண்ட பொதிகளைத் தலையிலும், தோளிலும் சுமக்க வேண்டிய கட்டாயமிருந்துள்ளது. பொதிகளைச் சுமந்து நீண்ட தொலைவுகளுக்குக் கால்நடையாகச் செல்லும் போது, பொதிகளை அடிக்கடி இறக்கி வைத்து இளைப்பாற வேண்டி வந்திருக்கும். தரையில் இறக்கி வைத்துத், திரும்பவும் பொதியைத் தலையிலும், தோளிலும் ஏற்றுவதென்பது சிரமமானது. அதை இலகுவாக்கவே வீதிகளில் இத்தகைய சுமை தாங்கிக் கற்களை எமது முன்னோர்கள் அமைத்தனர். ஒரு நபரின் சராசரி உயரத்தைக் கணக்கில் வைத்துப், பொதியை இறக்கி, ஏற்ற வசதியாக இக் கற்கள் தகுந்த உயரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் பொதி சுமப்பவர்களின் நலன் கருதி நிழல் தரும் மரங்கள், நீர்ச் சுனைகள், கால்நடைகளுக்கு நீர் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தொட்டிகள் போன்றவற்றின் அருகில் சுமைதாங்கிகளை அமைத்துள்ளனர்.

சில சுமைதாங்கிகளில் பெண்களின் பெயர்களும், திகதிகளும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெறாமல் இறந்து போனால், வயிற்றிலிருந்த சுமையை இறக்கி வைக்க முடியாமல் போன அவர்களின் நினைவாகச் சுமைதாங்கி அமைக்கப்படும் வழக்கம் ஆரம்பமாகியதெனச் சொல்லப்படுகிறது. உண்மையிலேயே சுமைதாங்கிகளை எமது முன்னோர்கள் இக் காரணத்திற்காக அமைக்கத் தொடங்கினார்களா அல்லது நீண்ட தூரக் கால்நடைப் பயணங்களில் பொதியை இறக்கி வைத்துச் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சுமைதாங்கிகள் காலப் போக்கில் இறந்து போன கற்பிணிப் பெண்களுக்காக அமைக்கப்படுமொன்றாக மாறியதாவென்று தெரியவில்லை.

எக் காரணமாகினும் சுமைதாங்கிக் கற்களின் பயன்பாடானாது சுமைகளை இறக்கி வைத்துச் சிறிது நேரம் இளைப்பாறுதல் என்பதாகும். சுமைதாங்கிகளை அமைக்கும் வழக்கத்தின் பின்னணி எதுவாகவிருந்தாலும், பல பேர் பயன் கொள்ளும் நோக்கமே கருத்திலிருந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றிக் கூடக் கவலைப்படாத இக் காலத்தில், எங்கிருந்தோ வரும் வழிப்போக்கர்களை, அவர்களின் சிரமங்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் மனம் எம் முன்னோர்களிடமிருந்துள்ளதென்பது எமக்குப் பெருமை தரும் விஷயமாகும்.

 

No comments:

Post a Comment