கார் ( மகிழுந்து ) பாதுகாப்பு
(Part-1)
மகிழுந்து வைத்திருப்பது இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பெருமைக்குரிய விசயம். அதற்கு பூ வைப்பது, சாமி படம் மாட்டி கோவில் ஆக்குவது, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கி காத்து கருப்பு விரட்டுவது, விசிட்டிங் கார்டை அப்படியே கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டுவது, சாலையைப் பாத்தா சமத்து சேலையைப் பாத்தா விபத்து என்று சமுதாயத்துக்குக் கருத்து சொல்வது என நம் மக்கள் செய்யும் அட்டகாசங்களை ஏகப்பட்டது எழுதலாம்.
கார் வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்களுக்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகர டப்பாவை கார் என்று நினைத்து வாங்கும் வாடிக்கையாளர்,
தயாரித்து விற்கும் கம்பெனிகள், அதை அனுமதிக்கும் அரசாங்கம் என மூன்று பேருக்கும் இதில் முறையே 33% பொறுப்பு உண்டு.
கார் வாங்கியாயிற்று,
ஓட்டுநர் உரிமம் இருக்கிறது, சாலைப் பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் தெரியும், வண்டியும் பணிமனையில் விட்டு முறையாகப் பழுது பார்க்கப்படுகிறது என்றாலும் சில கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தயாராக இருப்பது நமது பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதோடு தேவையற்ற சங்கடங்களையும் தவிர்க்க உதவும். அவை சில நேரங்களில் நமக்குப் பயன்படா விட்டாலும், வழியில் பிரேக்-டவுன் ஆகித் தடுமாறிக் கொண்டு
நிற்பவர்களுக்கும் பயன்படும்.
காருடன் வந்த வீல் ஸ்பேனர், ஜாக், ஜாக் லீவர், ஸ்டெப்னி டயர், முன்னெரிச்சரிக்கை முக்கோணம், வீல் சோக் தாண்டி வேறு சில கருவிகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி முறையாக வைத்திருப்பது அவசியம். அப்படிப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களைப் பார்ப்போம்.
1) Advance Warning
Triangle: முன்னெச்சரிக்கை முக்கோணம் ஒன்றைப் புதிய வண்டியுடன் தருவார்கள். ஐந்து இலட்சத்துக்கும் குறைவான விலையுடைய கார்களில் அது பேப்பர் மாதிரிதான் இருக்கும். வெயிலில் நிறுத்தப்படும் கார்களில் நான்கைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் பொடிப் பொடியாக உதிர்ந்துவிடும்.
இரண்டு முக்கோணங்களை வண்டியில் வைத்திருப்பது அவசியம். சாலையோரத்தில் பிரேக்டவுன் ஆகி நிற்கும்போது பின்புறம் சிவப்பு முக்கோணத்தையும், முன்புறம் வெள்ளை முக்கோணத்தையும் வைக்க வேண்டும். மாநில சாலையாக இருந்தால் வண்டியில் இருந்து 50 மீட்டர் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால் நூறு மீட்டர் தொலைவிலும் வைக்க வேண்டும். நான்கு வழிச்சாலைகளில் பின்புறம் 50 மீட்டரில் ஒன்று, 100 மீட்டரில் ஒன்று என வைக்கவேண்டும்;
முன்புறம் வைக்கத் தேவையில்லை.
ஒருமுறையாவது அதை எடுத்து எப்படி விரித்து முக்கோணமாக மாற்றி சாலையில் வைப்பது என்று பார்க்கவும்.
பிரேக்டவுன் ஆனால் அதை வைப்பதற்கு கூச்சப்பட வேண்டாம். 'பரவால்ல விடு' என்ற அலட்சியமும் வேண்டாம். 'ரிப்பேர் ஆகி நின்ற கார் மீது, பின்னால் வந்த லாரி மோதி குடும்பமே பலி' என்று படித்த செய்திகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
2) சேஃப்டி லைட் & டார்ச் லைட்:
5in1 எமர்ஜென்சி டார்ச் லைட் என்று ஆன்லைனில் கிடைக்கிறது.
அதில் சிவப்பு எல்ஈடி விளக்கு விட்டுவிட்டு மின்னும்படி இருப்பதோடு டார்ச் லைட், சீட் பெல்ட் கட்டர், கிளாஸ் பிரேக்கர் உடன் அடியில் ஒரு காந்தமும் இருக்கும். வண்டி மீது நிற்க வைத்துவிட்டால் கீழே விழாது. இரவு நேரங்களில் மற்ற வண்டிகளுக்கு எச்சரிக்கை சமிக்கை காட்டுவதற்குப் பயன்படும்.
தண்ணீர் புகாத டார்ச் லைட் ஒன்று நல்ல பிராண்டில் வாங்கி வைத்திருக்கவும். நூறு ரூபாய்க்குக் கணக்குப் பார்க்ககூடாது. அதற்கு பேட்டரியை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிடவும். சிலநேரங்களில்
5in1 லைட் சீனா தயாரிப்பு என்பதால் ஏமாற்றிவிடக்கூடும்.
ஏதாவது விபத்து நடந்த இடங்களில் உதவப் போனால் இரண்டு டார்ச் லைட்டுமே தேவைப்படும். அவசர காலங்களில் செல்போன் டார்ச் எதற்குமே உதவாது.
3) Emergency Windshield
Breaker cum Seat Belt Cutter:
அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு ஆன்லைனில் கிடைக்கிறது. இதை ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் ஸ்க்ரூ போட்டு மாட்ட வேண்டும் அல்லது சீட் பெல்ட் கிளாம்ப்புக்கு கீழே பிளாஸ்டிக் கயிறு போட்டு இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். டேஷ் போர்டுக்கு உள்ளே, மேலே, ஓரத்தில் எல்லாம் வைக்கக் கூடாது. வண்டி விபத்தில் சிக்கினால் முதலில் loose objects-தான் பறந்து சென்று வெளியில் விழும்.
வண்டி உருண்டு தலைகீழாகக் கிடக்கும்போது நமது உடல் எடை மொத்தமும் சீட் பெல்ட்டில் தொங்கிக் கொண்டிருக்கும். அப்போது பட்டனை அழுத்தி சீட் பெல்ட்டை யாராலும் கழட்ட முடியாது. அப்போது இதில் உள்ள பெல்ட் கட்டரில் அறுத்துவிட்டு கண்ணாடியை உடைத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேற வேண்டும்.
விபத்து நடக்கும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்துவிடுவதால் கை கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடிக்கலாம். அப்போது செய்ய வேண்டிய முதல் வேலை சீட் பெல்ட் கட்டரை எடுத்து அறுத்துவிட்டு வண்டியை விட்டு வெளியேறுவதுதான்.
பெட்ரோல் ஒழுகி எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கும் அபாயம் உண்டு. அதனால்தான் இந்த கட்டரை, ஓட்டுநர் சீட் பெல்ட்டுக்கு கீழே லாக் செய்து கையை விட்டதும் எடுக்கும்படி வைத்திருக்க வேண்டும்.
எந்தப் பொருள் உள்ளே கிடந்தாலும் பரவாயில்லை என போட்டுவிட்டு வெளியேற வேண்டும். கரிக்கட்டையாகி விட்டால் எது இருந்து என்ன பயன்? எல்லா இடங்களிலும் விபத்து நடந்தால் உடனே உதவ மக்கள் இருக்கமாட்டார்கள். பல இடங்களில் விபத்து நடந்ததை விடிந்த பிறகே மக்கள் பார்த்த கதைகள் ஏராளம்.
4) 10 மீட்டர் நைலான் கயிறு:
ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும். உங்களது வண்டியில் உள்ள Tow hook-இன் அகலத்தைப் பார்த்துவிட்டு அதில் நுழையும் தடிமனில் வாங்கவும். சுண்டுவிரல் தடிமனில் இருந்தால் துணி காயப்போட மட்டுமே பயன்படும்; அதில் காரைக் கட்டி இழுத்தால் அறுந்துவிடும்.
பெரிய கார்களில் towing hook தனியாகக் கொடுத்திருப்பார்கள். அதை எடுத்து ஒருமுறையாவது முன்னும் பின்னும் மாட்டிப் பார்க்கவும்.
சிலர் அதை வீசி விடுவதுண்டு. எங்காவது சேற்றில் சிக்கி நிற்கும்போது இறங்கி ஹூக் எங்கே இருக்கிறது, எப்படி மாட்டுவது என்று முழிக்கக் கூடாது. கண்ட இடத்தில் மாட்டி வண்டியை இழுத்தால் ஏதாவது உள்பாகங்கள் உடைய வாய்ப்புண்டு.
தொடரும்
No comments:
Post a Comment