Wednesday, June 26, 2024

கார் ( மகிழுந்து ) பாதுகாப்பு (Part-2)

 கார் ( மகிழுந்து ) பாதுகாப்பு (Part-2)

5) விசில்

 காருக்கு எதற்கு விசில் என்று கேட்கக்கூடாது. 20 முதல் 200 ரூபாய் வரை உங்களுக்குப் பிடித்த விலையில் ஒரு விசிலை வாங்கி டேஷ்போர்டில் போட்டு வைக்கவும். சாவிக் கொத்தில் மாட்டியும் வைக்கலாம்

 யாரும் பார்க்க வாய்ப்பில்லாத பள்ளத்தில் வண்டி உருண்டு, நாமும் மாட்டிக்கொண்டால் அப்படியே கிடக்க வேண்டியதுதான்ஏதாவது வண்டி சத்தமோ வெளிச்சமோ வந்தால் விசில் அடித்து அவர்களது கவனத்தை ஈர்த்து நமது இருப்பிடத்தைத் தெரிவிக்க முடியும்

(ஒருமுறை சென்னையில் இருந்து மசினகுடிக்கு சுற்றுலா வந்த ஐந்து இளைஞர்களது கார் கல்லட்டி மலைப்பாதையில் உருண்டு கீழே விழுந்துவிட்டது. நான்கு நாட்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் புகார் செய்து, காவல்துறையினர் அவர்களது செல் டவர் சிக்னலை வைத்து மலைப்பாதையில் தேடிக் கண்டுபிடித்தனர்நான்கு பேர் இறந்து உடல்கள் அழுகிய நிலையில் கிடக்க, ஒரு பையன் காருக்குள்ளே மாட்டிய நிலையில் உயிரோடு கிடந்திருக்கிறான். ஐந்தாவது நாள் மீட்டனர்)

 சில நேரங்களில் - காவலர்கள் இல்லாதபோது - போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை ஒழுங்குபடுத்தவும் விசில், 5in1 டார்ச் போன்றவை பயன்படும்

 6) Jump Start Cable: 

 தரமான ஜம்ப் ஸ்டார்ட் கேபிள் ஒன்றை அவசியம் வண்டி டிக்கியில் வைத்திருக்கவும். பேட்டரி இறங்கிவிட்டால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது எல்லா இடங்களிலும் சாத்தியம் இல்லை. எப்படி ஜம்ப் ஸ்டார்ட் செய்வது என்று அனுபவம் மிக்க ஓட்டுநர்களைக் கேட்கலாம்யூடிபில் ஏதாவது வீடியோ பார்த்தும் தெரிந்துகொள்ளலாம். இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை

 7) ABC Type தீயணைப்பான்

 ஒரு கிலோ எடையில் ரீஃபில் பண்ணக்கூடிய ABC வகைத் தீயணைப்பானை வாங்கி ஓட்டுநருக்கு அடுத்த இருக்கையின் அடியில் பின்னால் இருந்து உள்ளே தள்ளி கட்டி வைக்கவும். Loose object-ஆக எங்கேயும் கிடக்கக்கூடாது. ஓட்டுநர் முகத்துக்கு அருகில் உள்ள தூணில் வைப்பதும் தவறு. விபத்து ஏற்படும்போது பறந்துவந்து கபாலத்தை உடைத்துவிடும்

 இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காலாவதி தேதி முடிந்தவுடன் அம்புக்குறி பச்சையின் மீது காட்டினாலும் ரீஃபில் செய்யவும். அந்த ரீஃபில் நேரத்தில் தீயணைப்பானை எப்படி பயன்படுத்துவது என்று குழந்தைகளுக்கோ, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கோ செயல்முறை விளக்கம் காட்ட உள்ளே இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

 கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் தீயணைப்பான்களை தவிர்ப்பது நல்லது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்

 8) முதலுதவிப் பெட்டி:

 கார் வாங்கும்போது தரப்படும் முதலுதவிப் பெட்டியோடு அப்படியே மறந்துவிடுவது பலரது பழக்கம். தனியாக ஒரு தரமான பெட்டி வாங்கி, ஒவ்வொரு பொருளையும் மெடிக்கலில் காலாவதி நாளைப் பார்த்துவிட்டு வாங்கி அதில் போட்டு வைக்கவும்

 ரெடிமேட் முதலுதவிப் பெட்டிகளைத் தவிர்க்கவும். மெடிக்கல்களில் கேட்டாலே என்னென்ன தேவை என்று சொல்வார்கள். வருடம் ஒருமுறை அதைப் பார்த்து காலாவதியானவற்றை எடுத்துவிட்டு அப்கிரேடு செய்யவும்

 பஞ்சு, கையுறை, கட்டுத் துணிகள் போன்றவை நிறையவே இருக்கட்டும். நாம் போகுமிடமெல்லாம் வரக்கூடிய முதலுதவிப் பெட்டி என்பதால் கஞ்சத்தனம் பண்ணாமல் நிறைய வாங்கி வைக்கவும்

 வேறு யாராவது காயமுற்றதைப் பார்த்தால்கூட வண்டியை நிறுத்தி உங்களது முதலுதவிப் பெட்டியில் உள்ளவற்றைத் தாராளமாகக் கொடுத்து உதவுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் பயன்படட்டும்; இல்லாவிட்டடால் அது ஒருநாள் காலாவதியாகி, தூக்கிப் போட்டுவிட்டு மாற்றத்தானே போகிறோம்

 9) குடை:

தினசரி காரை எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்வபவராக இருந்தால் தனியாக ஒரு குடையைக் காருக்கென்றே டிக்கியில் வைத்திருங்கள். மழைக்காலத்தில் தினமும் வீட்டிலிருந்து கிளம்பும்போது மறக்காமல் குடையை எடுத்துச்செல்வது சாத்தியமில்லை

 பிரேக்டவுன் ஆகி நிற்பது என்பது எப்போதுமே நாம் எதிர்பாராத நேரத்தில்தான் நடக்கும்மொபைலில் சார்ஜ் இருக்காது, சார்ஜ் போட வண்டியில் கேபிள் இருக்காது, பின்னிரவு நேரமாகியிருக்கும், மழை கொட்டும், மின்சாரம் இருக்காது, அக்கம்பத்தில் ஒரு கிலோமீட்டருக்கு யாருமே இல்லாத இடமாக இருக்கும், பசி வயிற்றைக் கிள்ளும், குடிக்கத் தண்ணீரும் இருக்காது. அப்படி ஒரு நேரத்தில்தான் மேலே பார்த்த பலவும் எப்படிப் பயன்படும் என்பதை உணர முடியும்

 10) ஆவணங்கள்:

 வண்டியின் RC, காப்பீடு, PUC, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் நகல் கட்டாயம் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டும். வருடம் ஒருமுறை புதிய நகல்களை வைத்துவிட்டு பழையதை அப்புறப்படுத்தவும். ஒரிஜினல் தேவையா இல்லையா என்கிற பஞ்சாயத்து அப்புறம்தான்

 வண்டியில் அலுவலக வயர்லெஸ், ஹாம் ரேடியோ போன்றவற்றை வைத்திருந்தால் கண்டிப்பாக அதற்குரிய ஆவணங்களின் ஒரு பிரதி இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிவிட்டால் ஆவணங்கள் மட்டுமே பேசும்

 ஒரு சிறிய தரமான பிளாஸ்டிக் பெட்டி வாங்கி அதில் முதலுதவிப் பெட்டி, குடை, ஜம்ப் ஸ்டார்ட் கேபிள், கயிறு, wheel choke போன்றவற்றைப் போட்டு வைக்கவும். டிக்கியிலும் loose object-களாக எதுவும் கிடக்கக்கூடாது

 ஒவ்வொருவரின் தொழிலுக்கேற்ப சில கருவிகளை அன்றாடம் எடுத்துச்செல்ல வேண்டி வரும். அவற்றை அதற்குரிய பெட்டி, உறைகளில் வைத்து முறையாக வைத்து எடுத்துச்செல்ல வேண்டும். இல்லாவிட்டால் சோதனைச் சாவடிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு தர்மசங்கடம் ஏற்படும்

 அரிவாள், கத்தி போன்றவற்றை சீட்டுக்கு அடியில் சொருகி வைத்திருப்பதை எல்லாம் தவிர்க்க வேண்டும்; அது சட்டப்படி குற்றமாகும்

 டேஷ்போர்டில் கத்தி, திருப்புளி, ஆணி, ஸ்பூன், ஃபோர்க், இரும்புக் கம்பித் துண்டு போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக்கூடாது. பின் சீட்டின் மேல் டிபன் பாக்ஸ், லேப்டாப் என எதுவுமே இருக்கக்கூடாது. விபத்து ஏற்படும்போது அவை projectile ஆக மாறி திடீரென பறந்துவந்து ஆளைக் கொன்றுவிடும்

 டிக்கியில் ஏதாவது கனமான பொருளை வைத்தால் கண்டிப்பாக தரமான கயிறு போட்டு கீழே ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வைக்கவும். 'பரவால்ல விடு' என்று சொல்லி கிளம்பிச்சென்று விபத்துக்குளாகி டிக்கியில் இருந்த சாமான்கள் பின்சீட்டைக் கிழித்துக்கொண்டு சென்று முன் சீட்டில் இருந்தவர்களையும் காலி செய்த சம்பவங்கள் நிறைய உண்டு

 விபத்து அல்லாத பெரும்பாலான பிரேக்டவுன்கள் டயர் அல்லது பேட்டரி தொடர்பாகவே இருக்கும். எனவே டயர், பேட்டரி பராமரிப்பில் கஞ்சத்தனம் கூடாது. பஞ்சரான டயர், ஒட்ட முடியாத அளவுக்கு சேதமாகிவிட்டது என்று பஞ்சர் கடையில் சொன்னால் கவுரவமாகச் சென்று புதிய டயர் மாற்றிக்கொள்ள வேண்டும். அதை அடுத்தடுத்த பஞ்சர் கடைகளுக்கு எடுத்துச்சென்று வல்கனைஸ் பண்ணி சரி பண்ணும் அதிபுத்திசாலித்தனம் ஒரு நாளைக்கு மொத்த குடும்பத்தின் நிம்மதியையும் பறித்துவிடும்

 'அதெல்லாம் நமக்கு நடக்காது' என்கிற அதீதத் தன்னம்பிக்கைக்குப் பெயர் குருட்டு நம்பிக்கை. அந்தக் குருட்டு நம்பிக்கை ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் நம்மை படுகுழியில் தள்ளிவிடும்

 நமது பாதுகாப்புக்கும், நம்மை நம்பிக்  காரில் உட்கார்ந்து வருபவர்களது பாதுகாப்புக்கும் நாமே பொறுப்பு. எதையெல்லாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமோ, எதையெல்லாம் முன்கூட்டியே கணித்துத் தவிர்க்க முடியுமோ அதையெல்லாம் செய்துவிட வேண்டும். அதற்கு மேல் நடப்பதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்? வாழ்தல் இனிது. கூடி வாழ்தல் அதனினும் இனிதல்லவா

 

No comments:

Post a Comment