Thursday, May 18, 2023

தயிர் சாதத்திற்கு சிறந்த பக்கவாத்தியம் எது ?

 தயிர் சாதத்திற்கு சிறந்த பக்கவாத்தியம் எது ?

பொதுவாகவே வெயில் காலத்தில் சாப்பாட்டில் அவ்வளவு ஈடுபாடு இருக்காது. ஏதோ வேண்டா வெறுப்பாகத்தான் உள்ளே தள்ளுவோம். அப்படியும் ஹிதமாக இருப்பது ஒன்று உண்டென்றால் அது தயிர்

சாதமோ மோர் சாதமோதான். நொறுங்க பிசைந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய்,இஞ்சி,கடுகு சகிதமாய் தாளிச்சு கொட்டி பச்சை திராட்சையை சிறிதாக நறுக்கி, அதனுடன் மாதுளை முத்துக்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து டைனிங் டேபிளில் அதை பார்க்கும்போதே வெயில் களைப்பு குறைந்துவிடும்.. இப்படிப்பட்ட தயிர்சாத கச்சேரிக்கு சிறந்த பக்கவாத்தியம் எது?

1 பொடிப்பொடியாக கடுக் கடுக் என கடிக்கப்படும் மாவடுக்கள் குறிப்பாக உப்பு காரக்கரைசல் வண்டி அல்லது ஜலம்

2 உப்பு காரம் சேர்ந்த கருமை நிறத்தில் வறுக்கப்பட்ட நீளமான மோர் மிளகாய்

3 கல்லாமணி மாங்காயை நறுக்கி மிளகாய்ப்பொடி, உப்பு தடவி பக்கத்தில் ஒரு தனி பிளேட்டில் வைத்து கொள்வது

4 உப்பு போட்ட காய்ந்த நார்த்தங்காய் (ஆஹா!!)

5 ஒரு மழை வந்த பிறகு சீசனில் வாங்கிய பங்கனப்பள்ளி மாம்பழத்தில் நாலு துண்டம் நேர்த்தியாக நறுக்கப்பட்டு, சில நேரங்களில் முழு சதைப்பகுதி மற்றும் அதன் கொட்டை

6 ஈயச்சொம்பில் செய்த ரசம் வண்டி மீந்து போனது

7 முதல்நாள் மனத்தக்காளி வற்றலை போட்டு கல்சட்டியில் செய்த வற்றல் குழம்பினை மறுநாள் மோர் சாதத்தை கையில் ஒரு கவளம் போட்டுகொண்டு குழித்துக்கொண்டு நடுவில் இரண்டு ஸ்பூன் வற்றல் குழம்பினை விட்டுக்கொள்வது

8 ஆவக்காய் அல்லது எண்ணெய் வற்றல் மாங்காய்

9 பொல பொலவென காரெட்டை துருவி பச்சை மிளகாய், கடுகு தாளித்து கொட்டி எலுமிச்சை சாறு பிழிந்து பக்கத்தில் ஒரு தனி கிண்ணத்தில் வைத்து கொள்வது

10 வட இந்திய கடைகளில் கிடைக்கும் நீளமான மிளகாயில் செய்யப்படும் சற்று உப்பு தூக்கலாய் இருக்கும் மிளகாய் ஊறுகாய்

11 மிக நேர்த்தியாக செய்யப்பட்ட எலுமிச்சை ஊறுகாய்

இதில் எது உங்கள் சாய்ஸ் என சொல்லுங்களேன்.. என் முதல் சாய்ஸ் வத்த குழம்பு , இரண்டாவது ஈச்சொம்பு ரசவண்டி.. குறிப்பாக அந்த வற்றல் குழம்பை ஒரு சொட்டு தொட்டுக்கொண்டால் ஒரு காபி விளம்பரத்தில் அங்கவஸ்திரத்துடன் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் இறக்கி சொல்வாரே

"தேவாம்ருதமா இருக்குமேடி, சரசு, ஏண்டி நிக்கற.. ", அந்த சௌக்கியம் கிடைக்கும்..

No comments:

Post a Comment