Friday, July 26, 2024

ஒரு புராண கதை

  ஒரு புராண கதை



தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?

ஒரு புராண கதை இந்த கேள்விக்குள் ஒளிந்துள்ளது என்பதுதான் ஆச்சரியம்.

 

மகாபலி சக்கரவர்த்தி என்பவர் அசுரகுலத்தில் பிறந்து மலையாள தேசத்தை (கேரளா) ஆண்டுவந்த அரசன். இவர் பிறந்தது என்னவோ அசுரகுலம் என்றாலும் தன் தேசத்து மக்களின் நலனில் மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டு சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொடை வள்ளலாக திகழ்ந்தவர்.

புராணக் காலத்தில் அசுரர்களும், தேவர்களும் ஒருவருக்கொருவர் பாம்பும், கீரியும் போன்றவர்கள் என்பது நாம் அறிந்ததே..அந்த வகையில் மகாபலி சக்கரவர்த்தியின் கொடைத்தன்மையுடன் கூடிய நல்லாட்சியை கண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் பொறாமை கொண்டதாேடு இவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினர். தானம் கேட்கும் வரியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர்களை  தட்டான் என்று அழைப்பர்.

அவ்வாறு தன்னிடம் தானம் கேட்டு வருபவருக்கு தட்டாமல்(தவறாமல்) தான,தர்மம் செய்து மங்காத புகழோடு தட்டானாய் திகழ்ந்தார் மகாபலி சக்கரவர்த்தி.

இங்கு சட்டை போடுதல் என்பது தானம் கொடுப்பவரின் எண்ணத்தை தடுத்து நிறுத்துவது. அதாவது தானம் கொடுப்பவரின் ஈகை உள்ளத்தை மறைத்து அவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பது.

அவ்வாறு மகாபலி சக்கரவர்த்தி மூவுலகத்திலும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட 100 அசுவமேத யாகம் செய்ய திட்டமிட்டார். திட்டமிட்டபடி 99 அசுவமேத யாகத்தை முடித்து விட்டு. 100வது அசுவமேத யாகம் நடத்த தயாரானார். அந்த யாகம் நிறைவுபெற்ற கையோடு பெறும் தான, தர்மம் செய்ய மகாபலி சக்கரவர்த்தி முடிவு செய்திருந்தார்.

இதை கேள்விப்பட்ட தேவர்களுக்கு தூக்கி வாரி போட்டது.தேவர்கள் அனைவரும் வெலவெலத்துப் போனார்கள். இந்த யாகத்தால் அசுரகுல அரசன் மகாபலி சக்கரவர்த்தியின் புகழ் மூவுலகிலும் பரவி இம்மூவுலகத்தையும் ஆட்சி செய்யும் வல்லமை பெற்று விடுவானே என்று தேவர்கள் அஞ்சி நடுங்கினர்.

உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பகவான் மகா விஷ்ணுவிடம் நடந்ததை கூறி அசுரன் மகாபலியை கட்டுப்படுத்தி அருள வேண்டும் என்று முன்மொழிகின்றனர்.தன்னை தலைவனாக பூஜிக்கும் தேவர்களை காப்பது மகாவிஷ்ணுவின் கடமை அல்லவா. பகவானும் தேவர்களுக்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நம்பிக்கை அளிக்கிறார்.

பகவான் மகாவிஷ்ணுவும் வாமன ரூபத்தில் அவதாரம் எடுக்கிறார். மிகவும் குள்ள முனிவரான வாமனர் கிட்டத்தட்ட 3-அடி உயரம் மட்டுமே உடையவர். இவரைத்தான்  குட்டைப்பையன் என்று அந்த கேள்வியில் உள்ள வாசகம் குறிக்கிறது.

100வது யாகம் நடந்து முடிந்த கையோடு மகாபலி சக்கரவர்த்தியும் வரியவர்களுக்கு தான தர்மத்தை எல்லாம் தட்டாமல் தட்டானாய் வழங்கி முடித்தார். வாமனர் சற்று தாமதமாக யாகம் நடக்கும் இடத்திற்கு வருகிறார்.

வாமனன் ஒரு கையில் தாழம்பு குடையும், மறுகையில் கமண்டலத்துடன் மகாபலியை நோக்குகிறார்.மகாபலி சக்கரவர்த்தியும் யாக வேள்வியிலிருந்து எழுந்து வந்து "அந்தணரே! தான தர்மங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வந்துள்ளீர்களே" என்று வினவுகிறார்.

அதற்கு வாமனர் நான் குள்ளமாக உள்ளதால் இங்கு நடந்து வர சற்று தாமதமாகி விட்டது. இருப்பினும் எனக்கு பெரிய தானங்கள் எதுவும் தேவையில்லை."என் உயரத்தை போன்றே எனக்கு 3 அடி மண் குடுத்தால் போதுமானது" என்று மகாபலியிடம் கேட்கிறார்.

அசுரர்களுக்கெல்லாம் குருவான

சுக்ராச்சாரியார் மகாபலியிடம் "எனக்கு என்னவோ வந்திருப்பவர் மகாவிஷ்ணு-வாக இருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது. ஆதலால் அவருக்கும் தானம் வழங்க வேண்டாம்" என்று தட்டான் மகாபலியின் ஈகை உள்ளத்திற்கு சட்டை போட(தானம் வழங்க விடாமல்) தடுக்க முற்படுகிறார்.

தட்டான் என்ற பெறுமையை பெற்ற நம்ம மகாபலி சக்கரவர்த்தியும் "வந்திருப்பது பகவான் மகாவிஷ்ணுவாக இருந்தால் அவருக்கு தானம் வழங்கியதை விட வேறு என்ன பாக்கியம் எனக்கு கிடைக்க போகிறது" என்று சுக்ராச்சாரியின் பேச்சை மறுக்கிறார்.

வாமனருக்கு தானம் வழங்க, மகாபலி தனது கமண்டலத்தை எடுத்து அதில் உள்ள புனித நீரை தாரைவார்க்க முற்படுகிறார். அசுர குரு சுக்ராச்சாரியார் தேவர்களுக்கெல்லாம் தலைவனான மகாவிஷ்ணுக்கு மகாபலியால் தானம் வழங்கக் கூடாது என்று வண்டாக உருவெடுத்து, அந்த கமண்டலத்தில் உள்ள நீர் வார்க்கும் துளைக்குள் சென்று அடைத்துக்கொள்கிறார்.

இதனை கவனித்த குள்ள உருவம் கொண்ட வாமனர் (குட்டைப்பையன்) ஒரு சிறு கட்டையை(குச்சியை) எடுத்து கமண்டலத்தில் உள்ள துளைக்குள் விட்டு குத்தோ குத்துனு குத்தி அந்த வண்டை அடிக்கிறார்.. இதில் சுக்ராச்சாரியின் ஒரு கண் குருடானது. வலி தாங்க முடியாமல் சுக்ராச்சாரியார் கமண்டலத்திலிருந்து வெளியே பறந்து விடுகிறார்.

மேற்குறிப்பிட்ட புராண நிகழ்வுதான் "தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்" என்ற வாசகத்திற்கான விளக்கம்

No comments:

Post a Comment