Sunday, November 22, 2020

குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை.

 

கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும்.

இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும்.

சஷ்டி என்பவள் ஒர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்ம தேவனின் மானசபுத்ரி.

முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியா கத் திகழ்ந்த (தேவ சேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள்.

அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது. சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாதப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை.

மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள். அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர்.

அப்போது இவளை சம்பத் ஸ்வரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம். ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக ஓர் ஆண் குழந்தையின்றி புத்ரதோஷம் இருந்தது. அவர்கள் சஷ்டி விரதமிருந்து சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது.

ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் அக்குழந்தையை மயானத்தில் கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு அழுது புலம்பினர். அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையிடம் சென்று அதனை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள்.

உடனே இறந்த அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து அரசு புரிவான் என்று ஆசீர்வதித்தாள் பிறகு அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.

சுவிரதன் என்றால் நன்கு விரதம் அஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.

No comments:

Post a Comment