Monday, November 9, 2020

எல்.ஆர்.ஈஸ்வரி.

 என் மனம்தான் கோயில்னு நினைப்பேன்’’ - எல்.ஆர்.ஈஸ்வரி.



எல்.ஆர்.ஈஸ்வரி... தமிழ் சினிமா திரை இசையின் தனித்துவமான ஆளுமை. `இவரது கந்தர்வக் குரல் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை' என்று சொல்லலாம். பி.சுசீலா, எஸ்.ஜானகி எனும் இரு பெரும் ஆளுமைகளுக்கும் அப்பால் தன்னந்தனியாகத் தனித்து வளர்ந்தவர். சினிமா பாடல்கள் என்றாலும் சரி, பக்திப் பாடல்கள் என்றாலும் சரி... தனிமுத்திரை பதித்தவர். அவரை `எனது ஆன்மிகம்பகுதிக்காகச் சந்தித்தோம்.

``இந்தத் திரையுலகம் தந்த வாய்ப்புலதான் பாட ஆரம்பிச்சேன். ான் போகாத நாடும் கிடையாது; பாட்டுக் கச்சேரி நடத்தாத ஊரும் கிடையாது. அறுபடை வீடுகள்ல இருந்து, ஆத்தா மாரியம்மா குடியிருக்கிற அம்மன் கோயில்கள்வரை எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கேன். கடல் கடந்து சிங்கப்பூர், மலேஷியா, இலங்கைனு பல வெளிநாடுகளுக்கும் போயிருக்கேன்.

நான் எங்கே போனாலும், பக்தர்கள் மற்றும் ரசிகர்களின் பாசமழைதான். இன்னமும் பழசை மறக்காம அப்படி அன்பு காட்டுறாங்க. அதுலயும் ஆடி மாசம் பொறந்துட்டா, `செல்லாத்தா... செல்ல மாரியாத்தா...'னு நான் பாடின அம்மன் பக்திப் பாடல்கள் எங்கே பார்த்தாலும் ஒலிக்க ஆரம்பிச்சிடும். அந்த அளவுக்குக் கடவுள் எனக்கு பாக்கியத்தைக் கொடுத்திருக்கார்.

உண்மையில அந்தப் பாட்டை நான் பாடுறதுக்குப் பல வருஷத்துக்கு முன்னாலயே அடிக்கடி பாடி பிரபலப்படுத்தியவர் வீரமணி சோமு அண்ணன்தான். அவர் கச்சேரிகளில், `இந்தப் பாடலை என் தங்கச்சி பாடுவார்'னு சொல்லி ஒருமுறை பாடச் சொன்னார். நானும் பாடினேன். அப்புறம் அதைப் பலரும் ரசிக்கவும் கேசட்டுகளில் வெளியிட, பெரிய அளவில் ஹிட்டாகிடுச்சு. அது என் வாழ்க்கையில அம்மன் வழங்கின மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆடி மாசம் பொறந்துட்டாலே அம்மன் மாசம். அதில் என் குரலும் ஒலிக்கும்.

1958-ம் வருஷம்தான் `நல்ல இடத்து சம்பந்தம்'கிற படத்துல கே.வி.மகாதேவன் இசையில முதன்முதல்ல சினிமாவுக்குப் பாடினேன். அதுலருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடிட்டேன். கணக்கெல்லாம் ஒண்ணும் வெச்சிக்கலை. எல்லாமே இறைவன் வகுத்தபடி நடந்துச்சுன்னுதான் சொல்லணும்.

லட்சக்கணக்குல, கோடிக்கணக்குல இருக்குற மக்களுக்கு ஒரு தனிமனுஷியோட குரல் பிடிக்குதுன்னா அதுக்குக் காரணம் கண்டிப்பா நம்மையெல்லாம் மீறிய இறை சக்திதான். அந்த இறை சக்திதான் என் இசை சக்தியா இருக்கு. என் உயிர் இருக்கும்வரை நான் பாடிக்கிட்டே இருப்பேன். பாட்டுதான் என் உயிர். பாட்டுதான் என் மூச்சு. அதனாலதான் இப்பவும் பாட கூப்பிட்டாங்கன்னா போய் பாடிட்டு வர்றேன்.
எல்லா தெய்வங்களையும் வணங்கினாலும், எனக்குப் புடிச்ச தெய்வம்னா அன்னை வேளாங்கண்ணியும் புள்ளையாரும்தான். பெங்களூர் ரமணியம்மாள் பாடின `பம்ம பம்மக்கா...'-ங்கிற விநாயகர் துதி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதோட இன்ஸ்பிரேஷன்லதான் அந்தப் பாடலை நானும் பாடினேன். அதுவும் நல்லாவே ஹிட்டாச்சு; நல்ல பேர் வாங்கித் தந்துச்சு. எல்லாக் கோயில்கள்லயும் இதை முதல் பாட்டா போடுறாங்க. அதுக்குப் பிறகு அம்மன் பாடல்களை ஒலிபரப்புறாங்க.

என்னுடைய மனம்தான் கோயில்னு நினைப்பேன். நம்ம மனசுக்குப் பதில் சொல்லணுங்கிறதை நான் முழுமையா நம்புறேன்.
நம்ம மனசுல தூய்மையான எண்ணங்களை விதைச்சோம்னா, நல்ல செயல்களையும் அதுக்குனு உரிய நல்ல பலன்களையும் அடையலாம். அதைக் கடைப்பிடிச்சு வாழணும்ங்கிறது மட்டும்தான் என்னோட ஆன்மிகம்’’ மனதிலிருப்பதைத் தெளிவாகச் சொல்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.

No comments:

Post a Comment