Tuesday, June 15, 2021

நடிகை_பத்மினி கல்யாண வைபோகம்.

நடிகை_பத்மினி  கல்யாண வைபோகம்.

1961, ஏப்ரல் 27 என மண நாள் குறிக்கப்பட்டது. பதறியவாறு ஓடி வந்தது, கலை உலகம். ‘ப்ளீஸ்! கொஞ்சம் கல்யாணத்தைத்  தள்ளிவையுங்கள். திடுதிப்பென்று இப்படிச் செய்தால் தொழில் பாதிக்கும். பத்மினியை நம்பி லட்சக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. முடிகிற நிலையில் உள்ள படங்களையாவது பூர்த்தி செய்துவிட்டுப் போகட்டும்’.

 

ஒரு மாதம்போல் சற்றே தள்ளி, அக்னி நட்சத்திரம் முடியும் நிலையில் புதிய முகூர்த்தம் ஏற்பாடானது. 1961 மே 25-ல், ஏற்கெனவே வேண்டிக்கொண்ட மாதிரி, குருவாயூரப்பன் ஸ்தலத்தில் பத்மினிக்குக் கல்யாணம் என அறிவிப்பு வெளியானது. பத்மினி திருமணத்துக்குப் பின் நடிக்கக்கூடாது என்கிற வழக்கமான வேண்டுகோளை புகுந்த வீடு முன் வைத்தது.

 

அதனால், மே 23-ந் தேதி அன்றும் பத்மினியால் அரிதாரத்தைக் கலைக்க முடியவில்லை. அவர் மணமகள் அவதாரம் எடுப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டது. இடையில், மே 20, 21, 22 ஆகிய தினங்களில், சாயங்காலத்தில் ராமாயண நாட்டிய நாடகம்! விடியலின் ஒவ்வொரு நகர்வும், பத்மினி தன் கல்யாண சந்தோஷத்தைச் சிந்திக்க இடமில்லாமல், மிகக் கடின உழைப்பால் நிரம்பி வழிந்தது.

 

மே 24. மிக உக்கிரமான கத்திரி வெய்யிலின் காலை. நேரம் 10 மணி 40 நிமிடம். கொச்சிக்கு வானூர்தி ஏற மீனம்பாக்கம் சென்றார் பத்மினி. பூரண கும்ப மரியாதையுடன் டைரக்டர் கே.சுப்ரமணியம் தலைமையில் கலையுலகினர் வரவேற்றார்கள். நாகஸ்வரம், மங்கல இசை பெருக்கியது. கல்யாண வசந்தம் வாசித்தது. சுற்றமும் நட்பும் ஆரத்தி எடுத்தது.

 

சென்னை இளைஞர்கள் அங்கு திரண்டு நின்றார்கள். அவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் இருக்கும் என நாளிதழ்கள் எழுதின. அத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தை யாரும் அதுவரையில் விமான நிலையத்தில் கண்டதில்லை. அடக்க முடியாமல் அழுகை பெருகியது பத்மினிக்கு. மூச்சு முட்டக் கை குவித்து, திருவாளர் பொது ஜனத்துக்கு உளமாற நிறைவான வணக்கம் சொன்னார். மகிழ்ச்சியைவிட துக்கமே அதிகரித்தது. கண்ணீரும் புன்னகையும் முகங்களில் வழிந்தோடதங்களின் அபிமான நடிகைக்குப் பிரியாவிடை தந்தனர்  வாலிப விசிறிகள். வேறு யாருக்கு, பத்மினிக்குக் கிடைத்த அத்தகைய பாக்கியம் அமைந்தது!

 

கொச்சியில் இருந்து பத்மினியை ராகினி காரில் அழைத்துக்கொண்டு திருச்சூருக்குப் பயணமானார். திருச்சூர் ராமவிலாஸ் மாளிகையில், சகோதரிகள் தங்கினர். முந்தைய  பிஞ்சு இரவுகளின் மழலைப் படிவங்களில்  விடிய விடிய விழுந்து எழுந்தார்கள். ரசிகர்களின் பட்டாளம் போதாதென்று, வானமும்  மழையைச் சிறப்பு விருந்தினராக அனுப்பிவைத்தது. குருவாயூரில் பத்மினியின் மருதாணிப் பாதங்கள் பட்டதும், மழை இன்னும் வீறுகொண்டு பொழிந்தது.

 

#இனி_லைவ்_ரிலே_பை #பத்மினி.

 

விமான நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு உபசாரம் என்னைத் திணறடித்துவிட்டது. நாதஸ்வர இசையும், கலைஞர்களின் ஆசிச் சொற்களும், ரசிகர்களின் வாழ்த்தொலியும் சேர்ந்து என்னை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டன. என் மனநிலை, விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஓர் உலகிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகிறோம் என்ற எண்ணம் என்னை என்னவோ செய்தது

 

புதுமையான மலர் அலங்காரத்துடன் மணப்பந்தல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உள்ளே பரப்புவதற்காகத் திருவனந்தபுரத்திலிருந்து, ஸ்பெஷலாக வெள்ளை மணலை லாரி லாரியாகக் கொண்டுவந்து கொட்டினார்கள். விளக்குடன் கூடிய தட்டுகளை ஏந்திய ஒன்பது கன்னிகைகள், என்னை அவரிடம் அழைத்துச் சென்றனர். என் தம்பி சந்திரன், அவர் கால்களை அலம்பினான். எங்கள் சம்பிரதாயப்படி, அவர் எனக்கு முண்டு கொடுத்தார். பிறகு மோதிரம் மாற்றிக்கொண்டோம். சரியாக காலை 8.15-க்கு அவர் எனக்குத் தாலி கட்டினார். என் உடல் புல்லரித்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத நேரம் அல்லவா அது!

 

 

‘12 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்பட்டு அவர் ஊரான தலைச்சேரி சென்றோம். அங்கு, மஞ்சள் துணி விரித்த மனையில் என்னை அமர்த்தினார்கள். அந்தக் கணத்திலிருந்து நான் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டேன். ‘சென்னை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. சினிமாகாரர்களைப் பார்க்க, மாலையில் மவுண்ட் ரோட்டில் ஜன சமுத்திரம் அலை அலையாகக்  கூடியது. இரவு நெருங்க நெருங்க, 1961-ன்  சுனாமியாகி  தேனாம்பேட்டையையே திணறச் செய்துவிட்டார்கள்.

 

ராஜாஜி, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டவர்கள் நேரிலும், மாநில கவர்னர்கள், ராணி எலிசெபத், மவுன்ட்பேட்டன் பிரபு, நேரு, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், நேபாள மன்னர் போன்றவர்கள் தந்தி மூலமும் பத்மினிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உலகப் பேரொளியின்  திருமணத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் ஆப்சென்ட். ஜெமினி தன் இரண்டு மனைவிகளுடன் (பாப்ஜி - சாவித்திரி) ஸ்ரீதரின்தேன் நிலவுஷூட்டிங்கில், வைஜெயந்திமாலாவுடன் ஓஹோ எந்தன் பேபி பாடியவாறு காஷ்மீரில் இருந்தார். சிவாஜிக்குப் பதிலாக அவரது தாயார் ராஜாமணி அம்மாள், தம்பி வி.சி.ஷண்முகம் ஆபட்ஸ்பரிக்குச் சென்று ஆசிர்வதித்தனர். எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் கிடையாது. அக்கா லலிதாவின் கல்யாணத்தில், நடிகர் சங்கத் தலைவராக வாழ்த்துப் பத்திரம் வாசித்தவர் புரட்சி நடிகர்.

 

விவிஐபிகளுக்காக பிரத்யேக ரிசப்ஷன் ஓஷியானிக் ஹோட்டலில் நடந்தது. அதில் ரவிசங்கரின் சிதார் இசை இடம் பெற்றது. வேறு எந்த முக்கியப் பிரமுகரின் அழைப்புக்கும் விரல் அசைத்து வாசிக்காத மேதைபத்மினிக்காக சிதாரை மீட்டி, கலையரசிக்கும் தனக்கும் உள்ள சிறப்பான சிநேகத்தை வெளிப்படுத்தினார்.

 

மலையாள நாயர் வகுப்பைச் சேர்ந்தவர் பத்மினி. தமிழ்ப் பண்பாட்டினை மறக்காமல் தன் திருமணத்தில் தொங்கத் தொங்கத் தங்கத்தாலி கட்டிக்கொண்டார். பத்மினி மீதான தமிழர்களின் நேசம், சரித்திரம் காணாதது. வேறு எந்த சினிமா  ஸ்டாரின் கல்யாணத்தைவிட பத்மினியின் திடீர் திருமண அறிவிப்பும், உடனடியான கல்யாண ஏற்பாடுகளும் அன்றைய தமிழகத்தில் சமூக, அரசியல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளின. அன்றைக்கு இதேபோல் இன்டர்நெட் வசதிகளும், தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருந்திருந்தால், மங்கல நிகழ்வுகள் உலகமெங்கும் நிச்சயம் நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தக் குறையே தெரியாதவாறு, ‘தினத்தந்திநாள்தோறும் தலைப்புச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு தமிழ்நாட்டைத் தயார் செய்தது. ‘இரவும் பகலும் சினிமாவில் நடிக்கிறார் பத்மினி!’, ‘ஓட்டல்கள் நிறைந்துவிட்டன’, ‘பத்மினி திருமணத்தைப் பார்க்க ரசிகர் கூட்டம்!’, ‘இன்று நடக்கிறது பத்மினி - ராமச்சந்திரன் திருமணம்!’, ‘பத்மினி கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை ராமச்சந்திரன்!’…

 

தங்களின் அபிமான நடிகையை மணமகள் கோலத்தில் காண வேண்டும் என்பதற்காக, மெனக்கெட்டு கிடைத்த வாகனங்களில் ஏறி, குருவாயூர் போய்ச் சேர்ந்த 1961-ன் விடலைகள், இந்நேரம் ஆயிரம் நிலவைக் கொண்டாடி இருப்பார்கள். பத்மினி கல்யாணத்துக்குப் போக வர இருபது ரூபாய் டிக்கெட் என்றெல்லாம் வாலிபர்களை உசுப்பேற்றி, தமிழகத்தின் தனியார் பஸ் அதிபர்கள் வசூலை வாரிக் குவித்தார்கள். சென்னை ராஜதானியில், மூன்று தினங்களுக்கு பத்மினியால் இன்பப் பிரளயம் நிகழ்ந்தது.

 

பத்மினி - ராமச்சந்திரன் தம்பதிக்கு ஒரே மகன் பிரேம் குமார். தற்போது அவருக்கும்  ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். டைம் பத்திரிகையில் நிருபர் பணி. அவரது மனைவி ஒரு டாக்டர். கேரளத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் ஓர் ஆண் வாரிசு.

 

நட்சத்திரங்களிடையே நோய்க்கிருமியாகப் பரவும் காழ்ப்புணர்ச்சி, பத்மினியிடம் அறவே கிடையாது. தன் காலத்தில் ஒளிவீசிய சக கதாநாயகிகள் அத்தனை பேருடனும் சேர்ந்து நடித்தவர் அவர் ஒருவரே. ஓய்வாக இதை வாசிக்கிறவர்கள், சட்டென்று அந்த நட்சத்திரப் பட்டியலை ஒரு பார்வை பார்த்துவிடலாம்.

 

1.  டி.ஆர். ராஜகுமாரி - அன்பு, தங்கப்பதுமை

2. பானுமதி - மதுரைவீரன், ராஜாதேசிங்கு

3. அஞ்சலிதேவி - சொர்க்கவாசல், மன்னாதிமன்னன்

4. வைஜெயந்திமாலா - வஞ்சிக்கோட்டை வாலிபன்அமர் தீப் (ஹிந்தி)

5. சாவித்ரி - அமரதீபம், சரஸ்வதி சபதம்

6. கண்ணாம்பா - புனர்ஜென்மம்

7. ராஜசுலோசனா - அரசிளங்குமரி

8. சௌகார் ஜானகி - பேசும் தெய்வம்

9. கே.ஆர்.விஜயா - இருமலர்கள், பாலாடை

10.ஜெயலலிதா - குருதட்சணை

11. லட்சுமி - பெண் தெய்வம், திருமகள்

12. சரோஜாதேவி - தேனும் பாலும்

13. தேவிகா - சரஸ்வதி சபதம், அன்னை வேளாங்கன்னி

14. காஞ்சனா - விளையாட்டுப்பிள்ளை

15 வாணிஸ்ரீ - எதிர்காலம், குலமா குணமா

 16. ராஜஸ்ரீஇரு துருவம்

17. விஜயநிர்மலாசித்தி

18. மஞ்சுளாரிக்ஷாக்காரன்

19. சுஜாதா - தாய்க்கு ஒரு தாலாட்டு

20. நதியா - பூவே பூச்சூடவா

21. ஜெயசித்ரா - லட்சுமி வந்தாச்சு

 

பத்மினியோடு மிக அதிகப்படங்களில் நடித்தவர், அறுபதுகள் வரையில்  எம்.என்.ராஜம். அதன் பிறகு மனோரமா. விஜயகுமாரி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரை நீங்கள் பத்மினியோடு பார்த்திருக்கிறிர்களா? ஒருவேளை மற்ற மொழிகளில் நிர்மலாவும் பப்பியோடு தோன்றி இருக்கலாம். விஜயகுமாரிக்கு அந்தச் சந்தர்ப்பமும் கிடையாது. மிக நீண்ட வருடங்கள், அவர் மற்ற மொழிகளில் நடித்தது இல்லை. கவிஞர் கண்ணதாசனின்தாயே உனக்காக’  படத்தில் கவுரவ வேடங்களில், தனித் தனி கதைகளில் சிவாஜி - பத்மினி, எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி, முத்துராமன் - தேவிகா ஆகிய ஜோடிகள் நடித்தனர்பத்மினியும் விஜயகுமாரியும் இணைந்து நடித்த காட்சிகள் அதில் கிடையாது. ‘சின்னதம்பிபுகழ் குஷ்புகூட பேபி ஆர்ட்டிஸ்டாக ஹிந்தியில் பத்மினியுடன் நடித்திருக்கிறார். தமிழில் ஏறக்குறைய இரண்டு டஜன் ஹீரோயின்களோடு நடித்த ஒரே நட்சத்திரம் பத்மினி! ஹிந்தியை கணக்கில் சேர்த்தால் பட்டியல் நீளும்.

 

பத்மினியின் ஒப்பற்ற உயர்ந்த குணங்களில் மிக முக்கியமானது தோழமை. 1950-களில் அரும்பி, எம்.என்.ராஜம் உள்ளிட்ட சக நட்சத்திரங்களிடம், அந்திம காலம் வரையில் ஆத்ம நேசத்தோடு நிறம் மாறாமல் மண்ணின் மகளாகப் பழகியவர். மூப்பு படர்ந்து நட்சத்திர வாழ்வின் எல்லையில் இருந்தபோதும், முன் பின் பார்த்திராத பத்திரிகையாளரைக்கூட பத்மினியின் வரவேற்பு புத்துணர்ச்சி பெற வைக்கும். சிநேக பாவத்துடன் நேர் காணல் பூர்த்தி பெறச் செய்யும். நான் பத்மினி என்கிற ஆணவம், திமிர், தெனாவட்டு எதுவும் அவர் முகத்தில் தென்படாது. பொதுவாக, பெண்களின் நிரந்தர அடையாளம் புறம் பேசுதல். எப்போதும் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்தும், பத்மினி ஒருகாலும் சக நடிகைகள் குறித்துத் தவறாக ஒரு சொல் பேசியதாக வரலாறு இல்லை.

No comments:

Post a Comment