சதன் என்ற சாதனைக்கலைஞன்
நடிகர் சிவகார்த்திகேயன்,
ரோபோ சங்கர் போன்ற மிமிக்ரி கலைஞர்களுக்கு
கிடைத்த அங்கீகாரமும்,
வாய்ப்புகளும் அந்த கலைஞனுக்குக் கிடைத்திருந்தால், அவன் இறந்த போது பிணத்தை வாங்காவது அவனது குடும்பத்திற்கு
பணம் இருந்திருக்கும்.
தமிழ் சினிமாவின் சாபக்கேடு, நண்பர்கள் உதவி செய்தே மருத்துவமனையில் இருந்த அந்த கலைஞனின் பிணத்தை வாங்கி குடும்பத்தினரிடம் வழங்க முடிந்தது. யார் அந்த கலைஞன்?
ராக்கெட் ராமனாதன், சின்னி ஜெயந்த், மயில்சாமி, விவேக், தாமு போன்ற மிமிக்ரி கலைஞர்கள் திரைப்படம் மட்டுமின்றி மேடைகளில் நிகழ்ச்சி நடத்தியதன் விளைவாக தப்பித்துக்
கொண்டனர்.
ஆனால், நடிப்பு, பாடல், நடனம், மிமிக்ரி என்று இருந்த அந்த கலைஞன் மெல்ல, மெல்ல வாய்ப்பிழந்ததால் குடியிடம் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன்,
சொர்க்கம் படத்தில் கார் ஓட்டிக் கொண்டே ஒரு பாடல் பாடுவார்.
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
இந்த காட்சியில் சிவாஜியின் கார் டிரைவராக வரும் கலைஞன் தான் அந்த மிமிக்ரி கலைஞர். அவர் பெயர் சதன். குடிப்பதை யாரிடமும் சொல்லாதே என்று சிவாஜி வலியுறுத்திய
காட்சியில் நடித்தவர், கடைசியில் சினிமாவில் வாய்ப்பிழந்து
குடியிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த சதன், மேடை நாடகங்களில் நகைச்சுவை காட்சிகளில் ரசிகர்களை மகிழ்வித்தவர்.
உடல்மொழி மூலம் காட்சிகளுக்குள் ஊடுறுவி பார்ப்பவர்களின்
மனங்களை கவர்ந்தார்.
1959ம் ஆண்டு வெளிவந்த “சதுரங்கம்” என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இயல்பாக நகைச்சுவை குணம் கொண்ட சதன் நடித்த “வான்மாரே அவசியமுண்டு” , நடிகை லெட்சுமி தயாரித்த “பெந்தம்” போன்ற மலையாளப்படங்களில் நடித்தார்.
அத்துடன் தேவராஜன் மாஸ்டர், பாபுராஜ், உம்மர், கேஜே.ஜாய் இசையில் பல பாடல்களை சதன் பாடியுள்ளார். மலையாளத்தில் இசையமைத்துக்
கொண்டிருந்த எம்எஸ்.விஸ்வநாதனில் குழுவில் கோரஸ் பாடகராக சதன் இணைந்தார். ஆனாலும், நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருந்தார்.
மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞரான சதனுக்கு, தமிழ் சினிமாவில் உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. மேடை தான் அவரை வாரி அணைத்துக் கொண்டது. மெல்லிசை மன்னர், எம்எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ் இசைக்குழுக்களில் ரிதம் மற்றும் மிமிக்ரி பணியை சதன் செய்து வந்தார்.
தமிழ் சினிமாவில் ஏற்கனவே நாகேஷ், சந்திரபாபு போன்ற உடல்மொழிக்கலைஞர்கள் மக்களை மகிழ்வித்த வந்த நிலையில், அதே பாணியை பின்பற்றிய சதனுக்கு, துண்டு துக்கடா வேடம் தான் கிடைத்தது.
நாகேஷீடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு சதனுக்கு கிடைத்தது. டிஆர்.ராமண்ணா இயக்கிய நீ படத்தில் நாகேஷீக்கு இணையான நகைச்சுவையை
சதன் வாரி வழங்கியிருப்பார். நாகேஷ் நடத்தும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு
வரும் சதன், என்னத்தே கன்னையா, மாதவி ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் காமெடி கலாட்டா சிரித்து வயிறே புண்ணாகி விடும். தெரியாமல் ஒரு மருந்தைச் சாப்பிட்டு குரங்கு குணமாக மாறி விடும் சதன் செய்யும் சேட்டை அவரின் பண்பாட்ட நகைச்சுவை நடிப்பிற்கு
சான்று.
தமிழ் சினிமாவில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய வீணை எஸ்.பாலச்சந்தரின்
படங்களில் சதனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிட்டியது. பொம்மை, நடுஇரவில், அவனா இவன் போன்ற படங்களில் சதன் நடித்துள்ளார்.
இதில் நடு இரவில் படத்தில் படம் துவங்கியவுடன் டைட்டில் கார்டு இல்லை. படம் முடியும் போது தான் போடப்படும். அதில் துணை நடிகர்கள் 4 பேரின் பெயர் மட்டுமே வெளியானது. அதில் ஒருவர் சதன்.
அதே போல நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
தனது படத்தில் சதனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியுள்ளார். பட்டிக்காடா பட்டணமா, படிக்காத பண்ணையார் உள்பட பல படங்களில் சிவாஜியுடன்
சதன் இணைந்து நடித்திருந்தார்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜியின் நண்பர்களில் ஒருவராக வருவது மட்டுமின்றி பாடலும் சதன் பாடியுள்ளார். டிஎம்.சௌந்தராஜனின்
புகழ்பெற்ற பாடலான,
" அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு"
பாடலில் மூக்கால் தாளம் போடும் சத்தத்திற்கு
குரல் கொடுத்தவர் சதன் தான். படித்தால் மட்டும் போதுமா படத்தில் "காலம் செய்த கோமாளித்தனத்தில்
உலகம் பிறந்தது" பாடலில் கௌபாய் உடை அணிந்து ஏ.வீரப்பனோடு சதன் நடனமாடியிருப்பார். இந்தப் பாடலை பிபி.ஸ்ரீனிவாஸ், ஏஎல்,ராகவன், ஜிகே.வெங்கடேஷ் பாடியிருந்தனர். இந்தப் பாடலில் மிக அழகாக நடனமாடிய சதன், பல படங்களில் நடனக்கலைஞராக தோன்றியுள்ளார்.
எம்ஜிஆர் படத்தில் சதன் பாடியுள்ளார். ரிக்சாக்காரன்
படத்தில் டிஎம்.சௌந்தராஜன், பி.சுசீலா பாடிய
அழகிய தமிழ்மகள் இவள்
இருவிழிகளில் எழுதிய மடல்
மெல்லமொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்
பாடலில் வரும் ஓகோகோ.. என்ற கோரஸ்களுக்கு
மத்தியில் வரும் லல் லல் லல் லல் லலலா என்றபொம்மையின்
சத்தம் போன்ற குரல் சதனுடையது தான்.
சதனிடம் இருந்த மிமிக்ரி கலையை சினிமாவில் மிகச்சிறப்பாக பயன்படுத்தியவர்
மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் மட்டும் தான். எத்தனையோ இசைக்கருவிகள்
இருக்கும் போது, ஒருவனின் தனித்திறமையைக் கண்டு சரியாக பயன்படுத்திக் கொண்ட மேதை எம்எஸ்.விஸ்வநாதன் மட்டும் தான். ஏனெனில், அதற்கு பல உதாரணங்களைச்
சொல்ல முடியும். தனது குழுவில் ஸ்பெஷல் எபெக்ட் கலைஞர்கள் சிலரை எம்எஸ்வி வைத்திருந்தார்.
நடிகர் மீசை முருகேஷ், எம்எஸ்.ராஜு, சதன் தான் அவர்கள். இடி, மின்னல், மழை, ரயில் வருவது உள்ளிட்ட பல சப்தங்கள் இந்த கலைஞர்கள் மூலம் தான் தமிழ் சினிமாவில் வெளிப்பட்டன.
இன்றைய நவீன யுகத்தில் எந்த சப்தத்தையும்
கொண்டு வர வசதி உள்ளது. ஆனால், 1960ம் ஆண்டுகளில் குரல்களின் வழியே தான் இந்த சாதனையை எம்எஸ்.விஸ்வநாதன் செய்திருந்தார்.
தமிழ் சினிமா நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற பாடல் பாலும், பழமும் படத்தில் இடம் பெற்ற "போனால் போகட்டும் போடா". டிஎம்.சௌந்தராஜனின் குரலில் தத்துவத்தை தாங்கிப் பிடித்த இந்த பாடலின் பின் நரி, நாய், கோட்டான் என பல சத்தங்கள் கேட்கும். அத்தனை சத்தத்திற்கும் உபயதாரர் சதன் தான். அவரது குரல்களில் இருந்தே இந்த மிருகங்களின் குரல் வெளிப்பட்டது.
சர்வர் சுந்தரம் படத்தில் "தத்தை நெஞ்சம் முத்தக்கிளி" பாடலில் கேஆர்.விஜயா கிளியுடன் பாடுவது போல படமாக்கப்பட்டது. பி.சுசீலா கேஆர்.விஜயாவிற்கு
குரல் கொடுத்தார். கிளியாக அப்படத்தில் வெளிப்பட்ட குரல் சதனே தான்.
1962ம் ஆண்டு ஏசி.திருலோகச்சந்தர் இயக்கிய வீரத் திருமகன் படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் "வெத்தல போட்ட பத்தினி பொண்ணு" பாடலை டிஎம்.சௌந்தராஜனுடன் இணைந்து சதன் பாடினார்.
1964ம் ஆண்டு டிஆர்.ராமண்ணா இயக்கிய பணக்கார குடும்பம் படத்தில் டிஎம்.சௌந்தராஜன், பி.சுசீலா பாடிய "பறக்கும் பந்து பறக்கும் பந்து" பாடலை இனி கேட்டுப் பாருங்கள். பாடலின் வரிகளில் பந்து அடிபடும் டொப் சத்தம் கேட்கும். அந்த குரலை பாடல் முழுவதும் வாயில் விரலை வைத்து மிகவும் கஷ்டப்பட்டு செய்தவர் சதன் தான்.
1964ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், சச்சு ஆடும், "மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்" பாடலில் எல்ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து எம்எஸ்.ராஜு, சதன் இணைந்து பாடிய வரிகள் தான் "யூடு யூடு யூடு யூடுடுடுஊ". இந்த வரிகளுக்குக் தான நாகேஷ் தனது பேவரைட் நடனம் ஆடியிருப்பார்.
1965ம் ஆண்டு பிராந்திய மொழிக்கான தேசிய விருது பெற்ற படம் குழந்தையும், தெய்வமும். இப்படத்தில்
டிஎம்.சௌந்தராஜன், ஏஎல்.ராகவன் இணைந்து மிகவேகமான பாடலைப் பாடியிருப்பார்கள்.
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா.
ஜமுனாவை விரட்டி ஜெய்சங்கர், நாகேஷ் கேலி செய்வது போல அமைக்கப்பட்ட
இப்பாடலில் கோரஸில் மிக வேகமாக வரும் "டௌ டௌடௌட டௌ " என்ற வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்
சதன்.
1967ம் ஆண்டு ஏசி.திருலோகசந்தர் இயக்கத்தில்
சிவாஜி, பத்மினி,கேஆர்.விஜயா நடித்த இருமலர்கள் படத்தில் டிஎம்.சௌந்தராஜனுடன், நடிகர் விஜயின் தாய் ஷோபா ஒரு பாடல் பாடியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி
என்ற பாடல் தான் இது. இதில் இவர்கள் இருவருடன் சேர்ந்து "குட்டிராணி" என பொம்மைக்கு குரல் கொடுத்தது சதன். அம்மம்மா இச் இச் என பல சேட்டைகளை பொம்மை போல சதன் இப்பாடலில் செய்து காட்டியிருப்பார்.
கே.பாலச்சந்தர்
இயக்கத்தில் 1967ம் ஆண்டு வெளிவந்த படம் பாமா விஜயம். மெல்லிசை மன்னர் இசையில் இப்படத்தில்
இடம் பெற்ற ஒரு வித்தியாசமான பாடல். முத்துராமன், காஞ்சனா தோன்றும் இந்த காட்சியில்,
நினைத்தால் சிரிப்பு வரும்
இரவில் மயக்கம் வரும்
என பி.சுசீலா அலட்டல் இல்லாமல் பாட,
ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணையா
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணையா
என எல்ஆர்.ஈஸ்வரி தனது பாணியில் பாடுவார். இந்த காட்சியில் ஹிட்லர் மீசையுடன் நாகேஷ், நவநாகரீக உடையில் ஜெயந்தி தோன்றுவார்கள்.
இப்பாடலில், சட்டென நாகேஷ் சுவற்றில் தலைகீழாக ஏறுவது போல காட்சியமைக்கப்பட்டதுடன் "துப துபா துபா" என்ற வரிகளில் நடனமாட வைத்திருப்பார் பாலச்சந்தர்.
நாகேஷீற்கு இந்த பாடலுக்கு வித்தியாசமான குரலை வழங்கினார் சதன்.
1965ம் ஆண்டு பி.மாதவன் இயக்கத்தில்
சிவாஜி, தேவிகா,ராஜஸ்ரீ நடித்த படம் நீலவானம். இப்படத்தில் சிவாஜிக்கு சதன் பாடியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
இப்படத்தின் திரைக்கதை, வசனம் கே.பாலச்சந்தர்
எழுதியது. மெல்லிசை மன்னர் இசையில் இப்படத்தில்
எல்ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்
ஓ லட்சுமி, ஓ ஷீலா, ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா, ஓ கீதா அய்யாவைப் பாருங்கள்
பாடலின் இறுதியில் ராஜஸ்ரீயின் வையைப் பொத்தி சிவாஜி பெண் குரலில்
ஓ லட்சுமி, ஓ ஷீலா, ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
பாடுவார். சிவாஜிக்கு குரல் கொடுத்தது சாட்சாத் சதன் தான்.
1967ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சிருக்கும்
வரை படத்தில்
நெஞ்சிருக்கு எங்களுக்கு
நாளை என்ற நாளிருக்கு
வாழ்ந்தே தீருவோம்
டிஎம்.சௌந்தராஜன் பாடிய பாடலில் வரும் கோரஸ் விசில் சத்தம் சதனும், ராஜும் கொடுத்தது. சதனின் வாழ்க்கையில் புகழ்பெற்ற பாடலை வழங்கிய பெருமை கே.பாலச்சந்தரை தான் சேரும். அவர் 1974ம் இயக்கிய படம் அவள் ஒரு தொடர்கதை. இதில் கமல்ஹாசன் ஏற்ற கேரக்டர் பலகுரல் கலைஞன். பிற்காலத்தில்
கமல்ஹாசனுக்கு பல படங்களுக்கு எஸ்பி.பாலசுப்பிரமணியம்
பின்னணி குரல் கொடுத்தார். ஆனால், அதற்கு அச்சாரம் போட்டது மெல்லிசை மன்னர் தான். அவள் ஒரு தொடர்கதை படத்தில்
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
என எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிக்கொண்டிருக்கும் போதே,
நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
என எஸ்பி.பாலசுப்பிரமணியம் பேச, பேச கிளிகளின் அலறலும் அதைத்தொடர்ந்து
பல பறவைகளின் குரல்களும் இப்பாடலில் வெளிப்படும்.
மேலும் பாடலில் விமானம், நாதஸ்வரம், மேளம் என பல சப்தங்களை தனது குரல் மூலம் அச்சாக பதிய வைத்த மகத்தான கலைஞன் சதன். அவருடன் இணைந்து பாடலைச் சிறப்பாக்கியவர் சாய்பாபா. இன்றளவும் எஸ்பி.பாலசுப்பிரமணியத்திற்கு எவ்வளவு சிறப்பான பாடலாக இப்பாடல் இருக்கிறதோ அந்த பாடலின் சிறப்பிற்கு சதனின் உழைப்பு இருக்கிறது.
இதே ஆண்டில் கே.பாலச்சந்தர் இயக்கிய அவர்கள் படத்தில் மீண்டும் எஸ்பி.பாலசுப்பிரமணியத்துடன் சதன் சேர்ந்து அசத்திய பாடல்
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்...
இப்பாடலில் பொம்மையாக மாறி சதன்
சிற்பம் ஒன்று சிரிக்கக்கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
சின்னப்பையன் மனசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய்ச் சேராதோ
எனப் பாடி விட்டு பொம்மையைப் போல சிரிப்பார் சதன். உண்மையில் எவ்வளவு அற்புதமான திறமையை அவர் மறைத்து வைத்திருந்தார்
என்பதை இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் உணர முடியும். அதனால் தான் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் சதனை மிகச்சிறப்பாக
தொடர்ந்து பயன்படுத்தினார்.
சங்கர் கணேஷ், ஷ்யாம், எஸ்.பாலச்சந்தர்
உள்ளிட்ட சிலர் சதனைப் பயன்படுத்தினர். தமிழ், மலையாளத்தில் சுமார் 100 பாடல்களைப் பாடியுள்ள சதனுக்கு பாடகனாகவோ, நடிகனாகவோ,மிமிக்ரி கலைஞனாகவோ எந்த அங்கீகாரத்தையும் தமிழ் சினிமா வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் 1992ம் ஆண்டு பட்டினியால் அந்த கலைஞன் செத்திருக்க மாட்டான்.
No comments:
Post a Comment