Wednesday, June 2, 2021

காந்தக் குரல் பாடகி பி .லீலா!

 

காந்தக் குரல் பாடகி  பி .லீலா!

`மாயா பஜார்படத்தில் வரும்ஆகாஇன்ப நிலவினிலே…’’ என்ற மெல்லிசைப் பாடலை பி. லீலா பாடுவதைக் கேட்டால் காதல் கொள்ளாத இதயமும் காதல் வயப்படும். இந்தப் பாட்டை கண்டசாலாவுடன் இணைந்து பாடுவார் லீலா. தேகத்தை வருடும் தென்றல் போன்று இதம் தரும் பாடல் அது. பாடல் முழுக்க மென்சொற்களைப் பயன்படுத்தியிருப்பார், கவிஞர் தஞ்சை என்.ராமையா தாஸ்.

முறையான இப்பயிற்சி, கேள்வி ஞானம் எல்லாம் சேர்ந்ததால் இசையில் முழுநேரமும் லீலா மனம் சென்றது. தந்தையாருக்கு மகளை இசைத்துறையில் புகழ்பெற வைக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கேற்ற இடம் சென்னைதான் எனத் தந்தையாரின் நண்பர் கூற, தன் மகளுடன் சென்னை வந்தார் லீலாவின் தந்தை. எனினும் லீலாவுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் தாயாரும் கேரளத்தில்தான் இருந்தனர்.

சென்னை வந்ததும் வடக்கஞ்சேரி ராமபாகதவரிடம் குருகுலவாசம் முறையில் இசைப் பயின்றார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது இசைப் பயிற்சி. இதனிடையே, வித்துவான்கள் பலரின் கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்பும் லீலாவுக்குக் கிடைத்தது. ஒரு கட்டத்தில் லீலா கச்சேரி பண்ணும் அளவுக்கு உயர்ந்தார். அவர் நடத்திய இசைக் கச்சேரிகள்தான் திரைத்துறையில் பாடுவதற்கான வாயிற் கவுகளைத் திறந்துவிட்டது. 1947ஆம் ஆண்டு திரைத்துறையில் பின்னணி பாடும் வாய்ப்பு வந்தது லீலாவுக்கு.

பத்மநாப சாஸ்திரி இசையில் `கங்கணம்என்ற படத்தில் தன் முதல் திரைப்பாடலைப் பாடினார் லீலா அவர்கள். அடுத்து தமிழில் இரண்டு படங்கள். பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பி.லீலா அவர்களின் இசைப்பயணம் வேகமெடுத்தது. இளமையான, இதமான புதிய குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

பள்ளிப்பருவம் முதல் இப்போதுவரை எப்போது கேட்டாலும் மனதை இலவாக்கும் பாடல், பாகப்பிரிவினையில் வரும் தாழையாம் பூம்முடிச்சு....” பாடல். இதை டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து பாடியிருப்பார்.தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து…” என்று தொடங்குவார் டிஎம்எஸ். கூடவே நடை நடந்து என்பார் லீலா.

மேலும்வாழை இலை போல வந்த அன்னம்மாஎன்பார் டிஎம்எஸ். உடனே பின்பாட்டாக பொன்னம்மா என்பார் லீலா. என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா என்று டிஎம்எஸ் தொடர, என்னம்மா என ஒலிக்கும் லீலாவின் குரல் பின் தொடரும். பின்னர் கேள்வி பதில்போல் பாடல் பயணிக்கும். பாடல் முழுக்க லீலாவின் குரல் தெளிந்த நீரோடை போல் சலசலக்கும். நீரோடையை பின் தொடர்வதுதான் நம் வேலை என்று நாம் நம்மை அறியாமல் சென்று கொண்டேயிருப்போம்.

இதேபோல் போட்டி பாடல் ஒன்று அவருக்கு மிகப்பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. திரையில் பத்மினிக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் போட்டி. திரையிசையில் லீலாவுக்கும் ஜிக்கிக்கும் போட்டி. “கண்ணும் கண்ணும் கலந்து..” என்ற வஞ்சிக்கோட்டை வாலிபன் படப்பாடல் மெதுவாகத் தொடங்கி உச்சம் தொடும். போட்டி வகையறாப் பாடல்களுக்கு இதுதான் முன்னோடி என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானது. கொத்தமங்கலம் சுப்புவின் வரிகளை பாடகிகள் இருவரும் கச்சிதமாக உள்வாங்கி குரலில் வெளிப்படுத்தியிருப்பர். குறிப்பாக லீலாவின் குரல் தனித்துமாய் ஒலிக்கும்.

காதல், சோகம், தத்துவம், போட்டி பாடல்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றாலும் நையாண்டிப் பாடல்கள் பாடுவது அவ்வளவு எளிதல்ல. அதையும் சர்வ சாதாரணமாகப் பாடியவர் லீலா. மதுரை வீரன்படத்தில்வாங்க மச்சான் வாங்க.. வந்த வழியைப் பார்த்து போங்க.. ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படி பாக்குறீங்க..” என்ற பாடலை போகிற போக்கில் சிரமம் இல்லாமல் பாடியிருப்பார். ஆனால், பாடலைக் கேட்கும் நாமோ லீலாவின் குரலுடன் ஆட்டம் போடுவோம்.

லீலாவின் இசைத் திறன் அறிந்து எம்.கே. தியாகராஜ பாகவதர் தான் தயாரித்த படத்தில் அவருக்குப் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். தாய்மொழி மலையாளம் என்றாலும் அந்தந்த மொழிகளில் உச்சரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்தியவர் லீலா. தமிழ், தெலுங்கு மொழிகளைப் பேச, எழுத ஆசிரியரை அமர்த்தினார் லீலா. தான் எந்த மொழியில் பாடினாலும் நேர்த்தி இருக்க வேண்டும் என்பதே லீலாவின் விருப்பமாக இருந்தது. பாடல்கள் பாடுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய லீலா, `சின்னாரி பாப்லுஎன்ற தெலுங்குப் படத்திற்கு இசையும் அமைத்தார். எனினும் இசையமைப்பைத் தொடரவில்லை. லீலா இசையமைத்த முதல் மற்றும் கடைசிப் படம் அதுதான்.

திரையிசைப்பாடல்கள் தவிர்த்து ஆன்மிக அன்பர்கள் விரும்பும் வகையில் லீலாவின் குரலில் எண்ணற்ற பக்திப் பாடல்கள் வந்துள்ளன. அவையெல்லாம் இன்றும் எண்ணற்றோர் இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் நாராயணீயம், ஐயப்ப சுப்ரபாதம், குருவாயூர் சுப்ரபாதம், ஸ்ரீமூகாம்பிகை சுப்ரபாதம் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

என் உயிர் மூச்சு எல்லாம் இசைதான் என்று நேர்காணலில் ஒன்றில் குறிப்பிட்ட பி.லீலா, தன்னுடைய புகழ், பொருள் எல்லாவற்றிற்கும் காரணம் தன் அப்பாதான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். அப்படியாக உயிராக இருந்த தந்தையார் இறந்த நேரத்தில், இனிமேல் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று லீலா சொன்னபோது, ஏன் இப்படிச் சொல்கிறாய், நான் இருக்கிறேன் உன் அண்ணன் என்று ஆறுதல் படுத்தினார் எம்ஜிஆர்.

இன்றுவரை தமிழ் திரையிசையுலகில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா... பாடலுக்கு முதலில் பாடுவதற்காக இசையமைப்பாளரால் அழைக்கப்பட்டவர் இந்த பி.லீலா. ஆனால் தன்னைவிட இந்தப் பாடலைப்பாட ஜானகியே சிறந்தவர் என்று அப்போது பரிந்துரைததாராம் லீலா. அந்த அளவுக்கு பரந்த மனது கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்த, 76 வயதில் காலமானார்.

இரும்புத் திரையில் நெஞ்சில் குடியிருக்கும், மிஸ்ஸியம்மாவில் எனையாளும் மேரி, சிவகங்கைச் சீமையில் சாந்துப் பொட்டு, அன்னையின் ஆணையில் நீயே கதி ஈஸ்வரி, தங்கப்பதுமையில் முகத்தில் முகம், குலேபகாவலியில் வில்லேந்தும் வீரர் எல்லாம்என்று எண்ணற்ற பாடல்களில் லீலாவின் குரல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment