Friday, March 10, 2023

திருப்பதி போய்ட்டு வாங்களேன். எல்லாம் மாறும்

 ஒருமுறை திருப்பதி போய்ட்டு வாங்களேன். எல்லாம் மாறும்!"

இந்த வாக்கியத்தை நம் வாழ்வில் பல முறை கடந்துவந்திருப்போம். இக்கட்டான தருணங்களில் யாரோ நமக்குச் சொல்லியிருப்பார்கள். அல்லது நாம் பிறருக்குச் சொல்லியிருப்போம். காரணம், திருமலை திருப்பதி என்பது ஒர் ஊர் அல்ல... நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் கலந்த பெயர். கலக்கம் வரும் போது நம்பிக்கை தரும் மந்திரச் சொல். எளிய மனிதர்களின் சொர்க்கம். விரதமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு ஏழுமலை ஏறிச் சென்று ஜருகண்டி ஜருகண்டிக்களுக்கு இடையே தரிசனம் செய்யும் அந்த ஒரு நொடிதான் நம்மைக் காலம் முழுவதும் கொண்டு செலுத்துகிற மாபெரும் சக்தி. ஒவ்வொரு காசாகச் சேர்த்து அதை மஞ்சள் துணியில் முடிந்து அந்த மாலவனுக்குச் சேர்ப்பிக்கத் துடிக்கும் மாந்தர்கள் கோடிப்பேர். அப்படி என்ன இருக்கிறது அந்தத் திருப்பதியில்? அங்கிருக்கும் பெருமாள் மட்டும் அப்படி என்ன விசேஷம்?

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும் வானோங்கு சோலை மலையென்றும் தானோங்கு தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ் சொன்னார்க்கு உண்டோ துயர்

- பாரதம் பாடிய பெருந்தேவனார்

திருமலை திருப்பதி... ஒட்டு மொத்த பாரத தேசமும் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் இந்த நிலம் தமிழ் மக்களுக்கானது. வரலாற்றில் அதுதான் தமிழகத்தின் தொன்மையான வட எல்லை.

`நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு' என்கிறது 2 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரம். தமிழக வரலாற்றில் இப்படி இணைபிரிக்கமுடியாத இடமாகிவிட்ட திருவேங்கடம் எனப்படும் திருமலை திருப்பதி தமிழ் மன்னர்கள் குறித்த பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் குவிந்துகிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷம்.

இங்கு மொத்தம் 750 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ்க் கல்வெட்டுகளே. தமிழ் மன்னர்கள் திருமலையோடு கொண்டிருந்த உறவைத் தம்முள் பாதுகாத்து வைத்திருக்கும் அற்புதங்கள் அவை.

இந்தப் புண்ணிய பூமியில் தான் ஏழுமலையான், கலியுகத்தில் நிலைகொண்டு அருள்வதற்காகத் தன் திருப்பாதங்களைப் பதித்தான் என்கின்றன புராணங்கள்.

ஏழுமலையின் காலம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தத் திருமலை திருப்பதியில் மிகவும் உயரமான இடம் என்றால் அது ஸ்ரீவாரி பாதாலுவைச் சொல்வார்கள். பெருமாள் ஸ்ரீநிவாசனாக அவதாரம் செய்து இந்த பூமிக்கு வந்தபோது முதன் முதலில் அந்த இடத்தில்தான் காலடி எடுத்துவைத்தாராம். அடுத்து அவர் காலடி எடுத்துவைத்த இடம் சிலா தோரணம். மூன்றாவது அடிதான் தற்போது ஆலயத்தில் இருக்கும் கருவறை என்கின்றனர் பக்தர்கள்.

குவார்ட்ஸ் பாறைகளால் அமைந்த அற்புதமான இயற்கைப் பொக்கிஷம் சிலா தோரணம். சிலா என்றால் கல், தோரணம் என்றால் வளைவு. சிலா தோரணம் தேசிய புவியியல் சின்னங்களில் சிலாதோரணமும் ஒன்று. திருப்பதிக்கு சற்று முன்பாக அமைந்து உள்ளது நகரி என்னும் இடம். இங்கு திருமலையிலிருந்து வெறும் 600 மீட்டர் தொலைவில்தான் உள்ளது சிலா தோரணம்.

இந்தப் பாறைகள் சுமார் 150 கோடி ஆண்டுகள் பழைமையானவை. இயல்பாகவே இந்தப் பாறை வளைவில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடன் மற்றும் ஐராவதம் ஆகிய திருச்சின்னங்கள் அமைந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். அது இயற்கையின் விநோதம். இந்த சிலாதோரணம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. சிலா தோரணத்தின் அகலம் 8 மீட்டர், உயரம் 3 மீட்டர். இந்த சிலா தோரணத்தில் இருந்து எடுக்கப்பட்ட குவார்ட்ஸ் பாறையில்தான் மூலவரின் திருமேனி அமைந்துள்ளது என்றும் சிலா தோரணத்தின் உயரமும் மூலவர் விக்ரகத்தின் உயரமும் ஒன்று என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள். அதை மெய்ப்பிக்கும் விதமான பல்வேறு நம்பிக்கைகள் அங்கு உண்டு. பெருமாளின் திருமேனி எப்போதும் வெப்பமாகவே இருக்குமாம்.

வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள திவ்விய தேசம் இது! 'வைகுந்தத்துக்கும் மண்ணவர்க்கும் இதுவொரு வைப்புஎன வைஷ்ணவ ஆச்சார்யப் பெருமக்களால் போற்றப்படும் அற்புதத் தலம். அதாவது, விண்ணுலக தேவர்கள் மட்டுமின்றி, மண்ணுலக உயிர்கள் அனைத்தும் பரந்தாமனுக்குக் கைங்கர்யம் செய்யக்கூடிய திருவிடம் என்று அர்த்தம். வேம் கடம் = வேங்கடம்; 'வேம்என்றால், வினைகள்; 'கடம்என்றால், கடந்து செல்வது. திருமலைக்குச் சென்று திருவேங்கடத்தானைத் தரிசித்தால், வினைகள் (பாவங்கள்) யாவும் நம்மைக் கடந்துசெல்லும் என்பது சத்தியவாக்கு! கம்பர், தான் எழுதிய ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், திருமலையை சிலாகித்துள்ளார்!

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர்.

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது, இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

தினமும் காலை 4.30 மணிக்குப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பின்னும் வெப்பத்தால் பெருமாளின் திருமேனியில் வியர்வைகள் அரும்புமாம். அர்ச்சகர்கள் அதை ஒற்றி எடுப்பது தற்போதும் நடைபெறுகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பெருமாளின் ஆபரணங்களைக் கழற்றுவது வழக்கம். அவ்வாறு கழற்றும் ஆபரணங்கள் வெப்பம் ஏறி சூடாக இருக்குமாம். இதற்கெல்லாம் காரணம் மூலவர் திருமேனி குவார்ட்ஸ் பாறையால் அமைந்ததே என்று சொல்வாரும் உண்டு. இப்படி இயற்கையும் ஆன்மிகமும் கலந்து திகழும் புராண க்ஷேத்திரம் திருமலை திருப்பதி.

அளவற்ற கருணை கொண்டவன் வேங்கடத்தான். அவனுடைய பெருமை, அவனைவிடப் பெரிது. அத்தகைய பெருமானுக்கு முன்னே நாம் வெறும் துரும்பு. வைகுந்தத்தில் இருந்து நமக்காக மண்ணில் வந்து கோயில்கொண்டிருக்கும் பெருமாளுக்கு திருஷ்டி ஏதும் படாதிருக்க வேண்டும் அல்லவா?! அதற்காக, மங்களகரமாகப் பாசுரம் பாடினார்கள் ஆழ்வார்கள். அதனால்தான் அவற்றை மங்களாசாசனம் எனப் போற்றுகிறோம். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகியோர் மங்களாசாசனம் செய்தருளிய திருத்தலம், திருமலை!

இங்கே குடிகொண்டிருக்கும் வேங்கடவனை ஸ்ரீதியாகையர், ஸ்ரீஅன்னமாச்சார்யர், புரந்தரதாசர் ஆகியோர் தங்களது இசையால் பாடிப் பரவினார்கள். இவர்களில் ஸ்ரீஅன்னமாச்சார்யர், 32-க்கும் மேற்பட்ட சங்கீர்த்தனங்களைத் தந்துள்ளார். அதுமட்டுமா?! 'வேங்கடேச சதகம்எனும் நூலையும் இயற்றியுள்ளார்.

ஊழிகள் பல கடந்த திருமாலை... எல்லா நாளிலும் எந்த நட்சத்திரத்தில் வேண்டுமாயினும், எந்த மாதமாக இருப்பினும் அவனைக் கொண்டாடலாம். பன்னிரண்டு மாதங்களிலும் திருவிழா எடுத்து வழிபடலாம். திருப்பதி ஏழுமலையான் திருமலைக்கு வந்த நாள் புரட்டாசி சனிக்கிழமை, திருவோணம் நாள். அதனால் இங்கு திருமலையில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவமும் நடைபெறுகிறது.

கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம் - புரட்டாசி. இந்த மாதம் பௌர்ணமிக்குப் பிறகு வருகிற பிரதமை முதல் மஹாளயம் என்பார்கள். இந்த நாட்கள், பித்ருக்கள் எனப்படும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் தேவதைகளுக்கு உரிய புண்ணிய காரியங்களைச் செய்வதற்கு உகந்த அருமையான நாட்கள். பிரதமை முதல் அமாவாசை வரை இவற்றைக் கொண்டாடலாம். அமாவாசையை அடுத்து வருகிற நாட்கள் மட்டும் என்ன... அப்போதுதானே நவராத்திரி கொண்டாடப்படுகிறது?! அந்த ஒன்பது நாட்களும் ஸ்ரீமகாலட்சுமி எனும் பெரிய பிராட்டியாருக்கு உகந்த நாட்கள் என்கின்றனர், வைணவர்கள். அதனால்தான் பெரியபிராட்டியார் குடிகொண்டிருக்கும் திருமலையில், திருவேங்கடத்தானுக்கு பிரம்மோத்ஸவ வைபவம் சிறப்புற நடைபெறுகிறது.

திருமணமாகாத பெண்கள், இந்த மாதத்தில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் சுபவேளை கைகூடும் என்பது உறுதி. இதனால்தான், புரட்டாசி மாதத்தை 'கன்யா மாதம்என்றும் சொல்வார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலையில் ஸ்நானம் செய்து, பூஜையறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, நம் மனதுக்குப் பிரியமான பெருமாளின் திருவுருவத்தை துடைத்துப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், சுத்தமான அரிசியை இடித்து மாவெடுத்து, அதனுடன் வெல்லம் கலந்து இரண்டாகப் பிடித்துவைக்க வேண்டும். இதில், திரியிட்டு நெய்விளக்கேற்றி, மலர், துளசி கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரது நாமாவளிகளை மனதாரச் சொல்லி வழிபட, அவ்விடத்தில் சாட்சாத் அந்தப் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம். திருப்பதியில் இப்படியரு வழிபாட்டினை, கோயிலின் பல இடங்களில் செய்வார்கள் பக்தர்கள். ஆனால், உத்ஸவ காலமான பத்து நாட்கள் மட்டும், பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடத்தில்தான் மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டுமாம்! காலை நேரத்தில், வீடுகளில் 'திருவிளக்குமாவுகொண்டு மாலவனை வழிபட்டுவிட்டு, மாலையில் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.

'பெருமாளே! கோவிந்தா! நாராயணா! ராமா! எனத் திருமாலின் எந்தத் திருநாமத்தைச் சொல்லி அழைத்தாலும், அவன் ஓடோடி வருவான். 'நம்பினவர்க்கு நாராயணன்என்று சும்மாவா சொன்னார்கள்?!

எனவே, புண்ணிய மிகு புரட்டாசியில், திருமாலை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். அவனது திருநாமங்களை இடைவிடாது ஜபியுங்கள். பூஜைக்கு மலர்கள், நைவேத்தியத்துக்கு உணவு என எதுவுமே இல்லையாயினும், தூய்மையான சிறிதளவு தண்ணீரே போதுமானது. நாம் முழு பக்தியுடன் தருகின்ற எதையும் ஏற்றுக் கொள்வான். அந்தத் தூயவனை வணங்கி, அவனுடைய திருவடியைத் தொழுதால், நிம்மதியுடன் உங்களை வாழச் செய்வான், திருவேங்கடத்தான்!''

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

பின் குறிப்பு

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித

வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே!!!

பொதுப் பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே,

துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

ஸ்ரீவேங்கடவ உன் திருவடிகளே சரணம்!!

No comments:

Post a Comment