பழைய தஞ்சாவூர் ... தஞ்சை பெரியகோயில் ... 800 ஆண்டுகளாக புதைந்து கிடந்த உண்மை ...
இதன் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட, உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860 க்கு முன்னர் கோயிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது .. .
1858 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய கிருத்துவ பாதிரியார் மற்றும் தலை சிறந்த தமிழ் அறிஞருமாகிய ஜி.யூ.போப் (G.U.போப் அவர்களின் சிலை சென்னை மெரினா கடற்கரையில் தமிழக அரசால் 1968ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது), பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.
அதன் விளைவாக தஞ்சை பெரிய கோயில், ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவெட்டி சோழர்" என்பவரால் கட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் சொன்னதை வைத்து வெளியிட்டார்.
பிற்காலத்தில் தான் முழு உண்மை தெரிய வந்தது .... 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோயில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது .
ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் பெரிய கோயிலின் பூர்வீ கத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோயிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010
ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார் !!
இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது.
இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது .பெரிய கோயில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.
பெரிய கோயில் கட்டப்பட்ட அதே நேரத்தில் சிவங்கா குளமும் தோண்டப்பட்டது. கட்டிடக் கற்களை கோயிலின் உச்சிக்கு எடுத்து செல்ல வட்ட வளைவை மண் சாரபாதையாக உருவாக்க அதன் மண் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் கூறப்படுகிறது ... கட்டிடக் கற்களை கோயிலின் உச்சிக்கு எடுத்து செல்ல, பெரியகோயிலில் இருந்து ஏறக்குறைய 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரப்பள்ளம் வரை, ஒரு சாய்ந்த மண் இரக்கம்/சாரபாதை அமைக்கப்பட்டு கற்களை மேலே எடுத்து சென்றனர் என்று பரவலாக சொல்வது உண்டு. இரண்டு காரணங்களுக்காக அது நடைமுறைக்கு சரிவராது ; ஒன்று, இந்த சாரப்பள்ளம் கிழக்கில் உள்ளது.. கட்டிட கற்கள் தென்மேற்கில் இருந்து வந்தது; இரண்டு, 200 அடி உயரத்திற்கு எடுத்துச் செல்ல 1:15
விகிதத்துடன் ஒரு இரக்க சாரம் கட்ட, அதிகபட்ச நீளம் சுமார் 3000
அடி மட்டுமே போதுமானது , இதுவும் 1 கிலோமீட்டருக்குள் தான் அடங்கும். எனவே 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரப்பள்ளத்திலிருந்து ஒரு இரக்க சாரம் அமைக்க வேண்டிய சூழ்நிலை அவசியமில்லை.
ஆதலால் மேற்கிலிருந்து தான் தடம் அமைத்திருக்க வேண்டும். (தற்போது ... பெரியகோவிலின் மேற்கு பகுதியில் ... குறிப்பாக பண்டிதர் தோட்டம் , செல்வம் நகர் , கணபதி நகர் ஆகிய பகுதிகளில் மண் குவியல் மேட்டுத்தடம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது).
1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பெரிய கோயில் பூகம்பங்கள், இராணுவ படையெடுப்புகள், திருட்டு, சூறை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தாங்கி இன்று வரை கம்பீரமாக நிற்பது ஒரு மாபெரும் அதிசயம்.
800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை .... 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. ... 1335ல் : தில்லி சுல்தான் படையெடுப்பு .. 1350 முதல் 1532வரை தேவ ராயாவின் விஜயநகரின் ஆதிக்கம் ... 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி .. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.... 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி
1772 ஆம் ஆண்டில், கோயிலின் நுழைவு கூடம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. (2005ல், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கேரளந்தகன் கோபுரத்தில் பூட்டப்பட்ட அறையில் அவர்கள் பயன்படுத்திய பீரங்கி குண்டுகளை கண்டெடுத்தனர்). 1773 முதல் 1779 வரை ஆங்கிலேய படை சிறிய கோட்டையின் வடக்கு பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தினர் (தற்போதைய பதிவு அலுவலகம் / சிவ கங்கா பூங்கா இருக்கும் இடம் ).
பெரிய கோயிலைச் சுற்றியுள்ள சிறிய கோட்டை தஞ்சையின் பெரிய கோட்டையை விட பழமையானது. சிறிய கோட்டை 1535
ஆம் ஆண்டு வாக்கில், நாயக்கர்களால் கட்டப்பட்டது. சீனிவாசபுரத்திற்கு அருகே இடிந்து விழுந்து கிடந்த, அழிக்கப்பட்ட சோழர் அரண்மனையின் கற்களை கொண்டு, கோட்டை கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரிய கோயில், பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதன் பிறகு தான் கரும் பாசி படிந்த, கோயிலின் முகப்பு கற்கள்
"சாண்ட் பிளாஸ்டிங்" முறையில் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இளஞ்சிவப்பு கிரானைட் கல் மேலும் நன்றாக தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான் பெரிய கோயில் தோற்றம் பிரகாசமாக மாறியது.
1995 உலக தமிழ் மாநாட்டின் போது, திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் பெரிய கோயிலின் வெளிப்புற ஒளி விளக்குகளை வடிவமைத்தார்.அது மேலும் பிரகாசம் ஊட்டியது.
கடந்த 15 வருடங்களாக 5 வருடத்திற்கு ஒரு முறை ரசாயன முறையில் கோபுர சிற்பங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன
பெரிய கோயில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. .. தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக்கு மிக அருகாமையில் .உள்ள இந்த இடத்தை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்திருக்கிறேன். தஞ்சைக்கு அருகில் சிற்பகட்டிட கற்கள் கிடைக்கும், மிக அருகாமையான இடம் இதுவாகும்.
தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
கோயிலின் மேல் உள்ள உருண்டை வடிவம் கொண்ட கலசம் போல இருக்கும் சிகரம் (கல் குவிமாடம்/ Dome ) ஒரே கல்லில் வடிவமைத்தது அல்ல .. ஆறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட சிகரம் என்பதினை நேரில் பார்த்த ஆய்வாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.
மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெரிய கோயிலின் முன் (கிழக்கு) பகுதியில் "அழகிய குளம்"
என்ற பெரிய நீர்நிலை இருந்தது, பெரிய கோயில் கட்டப்பட்ட நேரத்தில் அது இருந்தது. நாயக்க மன்னர்களால், கோட்டை மற்றும் அகழி உருவாக்கப்பட்டதன் மூலம் இதற்ககு வந்து கொண்டிருந்த நீர் ஆதாரம் தடைசெய்யப்பட்டது. பிற்காலத்தில் இந்த நீர்நிலை சுருங்கி காணாமல் போனது.
மராத்தியா ஆட்சியாளர்களின் பெரும் முயற்சியால், 700 வருட இடைவெளிக்குப் பிறகு, 1729 ஆம் ஆண்டில் தான் ராஜா செர்போஜி I அவர்களால் “கும்பாபிசேகம்” நிகழ்த்தப்பட்டது; பிறகு 1803ல் ராஜா செர்ஃபோஜி II காலத்தில் இந்த நிகழ்வு தொடர்ந்தது ; சுதந்திரத்திற்குப் பிறகு; 1980 மற்றும் மீண்டும் 1997ல் “கும்பாபிசேகம்” நிகழ்த்தப்பட்டது.
மராத்தா இளவரசர் இன்றும் கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆவார்.
இப்போதய “கும்பாபிசேகம்” பிப்ரவரி 5, 2020 அன்று நிகழ்த்தப்பட்டது.
No comments:
Post a Comment