Friday, March 10, 2023

மகளிர் தினம் கொண்டாடாதவள்

 மகளிர் தினம் கொண்டாடாதவள்

 

காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமலே எழுந்து

வீடு பெருக்கி

நீர் தெளித்துக்

கோலமிட்டு

பாத்திரம் விளக்கி

வீட்டில் அனைவருக்கும்

காபி போட்டுக் கொடுத்து

காலை உணவைத் தயாரித்து

மீண்டும் பாத்திரம் விளக்கி

கல்லூரிக்குச் செல்லும் மகனுக்கும்

பள்ளிக்குச் செல்லும் மகளுக்கும்

டிபன் பாக்ஸ் கட்டி மறக்காமல் கொடுத்துனுப்பி எல்லோரும் புறப்பட்டதும் வியர்வை வழிய மின்விசிறியின் கீழ் அமரும்போது ஞாபகம் வரும்

துணி ஊற வைக்கலாமே என்று.

துணியை ஊற வைத்துவிட்டு

மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும் கணவனுக்காக கூட்டு பொரியல் குழம்பு எனும் வகை குறையாமல் உணவு தயாரித்துக் காய்கறி வாங்கக் கடைக்குச் சென்று திரும்பி வரும்போது அடிவயிற்று வலிக்கு மருந்து வாங்கலாம் என்று நினைப்பாள்.

மருந்துக் கடை கொஞ்சம் தூரம்... பிறகு பார்க்கலாம் என்று திரும்புவாள்

மீதிக் காசை எண்ணியபடியே.

ஊறவைத்த துணி அவளைப் பார்க்கும்

காய்கறி நறுக்க அரிவாள் மனை அழைக்கும்.

நேரத்துக்கு சாமைக்கலேனா கணவன் கத்துவானே...

மதிய உணவு முடித்து கணவன் வந்ததும் பரிமாறிச் சேவகம் செய்து அவன் சென்றதும் சற்று அயரலாம் போலிருக்கும்.

துணிகளோ துவைக்காமல் விட்டால் நாறும் என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டு

வெடித்த பாதங்களோடு தண்ணீர்க் குழாய் போவாள்.

மூட்டுவலி இப்போதெல்லாம் முதுகு வலி நோக்கி முன்னேறுகிறது மருத்துவரைப் பார்க்க வேண்டும் என நினைக்கவும் மறந்துவிடுகிறது அவளுக்கு.

கல்லூரி சென்ற மகளும்

பள்ளியிலிருந்து மகனும் திரும்புவார்கள்.

அவர்களுக்கான நொறுக்குத் தீனி காபி தயாரித்து வைத்து அவர்களோடு அமர்ந்து அவளும்

பழைய பாடங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வாள்.

வயதுக்கு வந்ததும் பள்ளிக்கூடம் போவதைத் தன் வீட்டில் நிறுத்தியது ஞாபகம் வந்து கண்கள் கசியும்.

முகம் துடைப்பதுபோல்

கண்ணீரைத் துடைத்துப் பாடப் புத்தகம் புரட்டி என்ன படிக்கலாம் என்பாள்.

'ஆமா... நீ சொல்லிக்கொடுத்துட்டாலும்... ' எனும் கிண்டலுக்கு அவளும் சிரிக்கத்தானே வேண்டும்... சிரிப்பாள்.

' போய் நைட் டிஃபன் வேலைய பாரு... இன்னைக்கும் இட்லி தோசை இல்லாமல் வேற ஏதாவது பண்ணு...'

' இடியாப்பம் தேங்காய்ப் பால் ஓகேவா ...' என்று அவளே அடி எடுத்துக் கொடுப்பாள்

மாவு பிசைந்து இடியாப்பம் பிழிகையில்

தேங்காய் பால் அரைக்கப் போகும்போதுதான்

அரை மூடித் தேங்காய்தானே இருக்கிறது என்ற நினைவு வரும்...

பையன் படிக்க வேண்டும்

நாளை டெஸ்ட் இருக்கிறது.

வயதுக்கு வந்த பெண்ணை

இந்த நேரத்தில் வெளியே அனுப்ப முடியாது.

அவளே மீண்டும் கடைக்குப் போவாள் தேங்காய் கேட்டு சில்லறையை எண்ணிப்பார்த்து

அரை மூடி போதும் என்பாள்.

கணவன் வருவான் பின்னிரவு

உணவு முடிந்ததும் அவன் கால் அமுக்கி விடுவாள்.

உறங்காவிட்டால் அவன் உறக்கத்திற்கு தேவையானவற்றையும் பாயில் தரவேண்டும்.

பிள்ளைகள் வளரும் திருமணமாகும்

பேரன் பேத்தி பீத்துணி அலசுவாள்

அவர்கள்

பள்ளிக்குப் போக பெருமை பிடிபடாது

அவர்களுக்கு ஆயா ஆவாள்.

அதே ஐந்துமணிக்கு நாள் துவங்கி பின்னிரவில் முடிகிறது தினமும்.

முன்பு போல் உடல் சொன்னபடி கேட்பதில்லை.

அதை யாருக்கும் சொல்லாமல் சமாளிக்கிறாள்.

மகளிர் தினக் கொண்டாட்டம் எல்லாம் அவளுக்கு இல்லை

இன்றும் அவளது இந்த வாடிக்கையான வேலைகளுக்கு ஒழிவில்லை.

நன்றி: கவிதை உறவு மார்ச் 2022

No comments:

Post a Comment