Thursday, August 1, 2024

கொள்ளிடம்.

 கொள்ளிடம்.



கொள் + இடம் = கொள்ளிடம்.

எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அது தாங்கும், ஏற்றுக்'கொள்ளும்' அதனால் அதன்பெயர் 'கொள்ளிடம்'

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 1 கி.மீ அகலமுள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் கரைபுரண்டோடுகிறது.

காவிரியின் இயற்கையான நீர் வடிகால் கொள்ளிடம் ஆறு.

திருச்சிக்கு மேலே முக்கொம்பு எனும் இடத்தில் காவிரி ஆறு இரண்டாக பிரிகிறது. (கல்லணையின் தொழில்நுட்பத்தில் வியந்த பிரிட்டிஷ் பொறியாளர் சர்.ஆத்தர் காட்டன் திருச்சியை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க மேலணையை முக்கொம்பில் கட்டினார்.

இதுதான் கொள்ளிடத்தின் பிறப்பிடம். இங்கு இரண்டாக பிரியும் காவிரி ஆறு கொள்ளிடம் என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திற்கு வடக்கேயும், காவிரியாக ஸ்ரீரங்கத்திற்கு தெற்கேயும் ஓடுவதால் ஸ்ரீரங்கம் தனித் தீவாகிறது.

முக்கொம்பிற்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படுவதால் திருச்சி நகரம் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

இதனை கடந்து வரும் காவிரியிலும் அதிகமான தண்ணீர் வந்தால் காவிரி டெல்டா பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க கல்லணையிலிருந்து வெள்ளநீர் உள்ளாறு என்ற கால்வாய்மூலம் கொள்ளிடத்தில் மடைமாற்றி விடப்படும்.

வெள்ளத்திலிருந்து தஞ்சையையும், காவிரி பாசன பகுதிகளையும் பாதுகாக்கத்தான் சோழர்கள் காவிரியில் கல்லணையை கட்டினார்கள்.

கடந்த இரு தினங்களாக அதிகப்படியாக வந்த 40,000 கனஅடி தண்ணீர் திருச்சி முக்கொம்பிலிருந்தே நேரடியாக கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டதால் கொள்ளிடத்தில் கரைபுறண்டோடுகிறது தண்ணீர்.கல்லணையிலிருந்து கொள்ளிடத்திற்கு 7000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த கொள்ளிடம் நீர் நேரடியாக கடலுக்கு போவதில்லை. கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள அணைக்கரையில் தேக்கப்பட்டு அங்கிருந்து வடவாற்றில் திருப்பிவிடப்படும். வடவாற்றுக்கு போக மீதம் உள்ள தண்ணீர்தான் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு நேரடியாக கடலுக்கு போகும்.

கொள்ளிடக்கரையிலிருக்கும் பெரிய நகரம் சிதம்பரம். சிதம்பரத்தை கடந்து பரங்கிப்பேட்டை அருகே கொள்ளிடம் கடலோடு கலக்கிறது.

வடவாற்றிக்கு போகும் நீர் வீராணம் ஏரியை நிரப்புகிறது. வீராணம் ஏரியை நிரப்பியதும் கடலூர் மாவட்டத்தின் இன்னொரு பெரிய ஏரியான பெருமாள் ஏரியையும் நிரப்பும்.

கொள்ளிடம் நதியால் ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. அதன் பிறகுதான் கடலோடு கலக்கிறது. கொள்ளிடம் கடலோடு கலக்கும் இடத்தில் மீன்வளம் மிக அதிகம்.

அலையாத்தி காடுகள் எனப்படும் 'மேங்குரோவ் காடுகள்' கொள்ளிட நதியின் கழிமுகத்தில்தான் உள்ளது. சுனாமியிலிருந்து இந்த பகுதியை பாதுகாத்தது இந்த அலையாத்தி காடுகள்.

நதி நிலத்திற்கும் கடலிற்குமான தொப்புள் கொடி.....

 

No comments:

Post a Comment