Monday, August 12, 2024

முதல் இரவுக்கு சாந்தி முகூர்த்தம் என்ற பெயர் ஏன்?

 முதல் இரவுக்கு சாந்தி முகூர்த்தம் என்ற பெயர் ஏன்?



மோகமுள் என்றொரு படம். இளையராஜா ஒரு இசை காவியத்தை படைத்திருப்பார். தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு உன்னதமான முயற்சி! இந்த மோகமுள் படத்தின் கதை குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் காட்சி உங்கள் கேள்விக்கு பதில் தரும்!

என்னடா சாந்தி முகூர்த்தம் பத்தி கேட்டா இவன் மோகமுள் இளையராஜா இசை தி .ஜானகிராமன் கதை என்று ஆரம்பித்து விட்டானே என்று நினைக்காதீர்கள்! தொடர்ந்து படியுங்கள். ஒரு சூசகமான சம்ஸ்கிருத பதத்தை உங்களுக்கு நான் விளக்குவதற்கு இதைவிட அருமையான படம் கிடைக்காது!

மீண்டும் கதைக்குள் பயணிப்போம்! திறமையுள்ள இசைக்கலைஞன் தன்னை விட வயது அதிகமான ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். சுற்றியுள்ள கட்டுப்பாடுகள் அவனை தடுக்கிறது. அவளையும் தடுக்கிறது.

ஆனால் அந்தத் தரமான இசைக்கலைஞன் தன் இசையை மறந்து விடக்கூடாது என்று குருநாதர் நினைக்கின்றார். காதலில் சிக்கி இசைக்கலைஞன் புத்தி பேதலிக்கும் நிலை செல்கிறான். குருநாதர் இறந்துவிடுகிறார். அந்த இசை அழியக்கூடாது அவன் மூலம் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்!

அவனோ எங்கோ சென்று விடுகிறான், பல நாட்கள் காத்திருந்து முடியாது என்று சொல்லி அவன் காதலை தவிர்த்து வந்த அந்த பக்குவப்பட்ட பெண்மணி குரு மறைந்த பிறகு அந்த இசை தொடர வேண்டும் என்று நினைக்கிறார்.

அவளுக்கு நன்றாகத் தெரிகிறது. அவனுள் ஞானம் ஒளிந்து கிடக்கிறது திறமை ஒளிந்து கிடக்கிறது. அது அவனிடம் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் அவனது உடலில் எரிகின்ற காமத்தீ அணைக்கப்பட்ட ஆகவேண்டும்! அப்போதுதான் அவன் சாந்தியடைந்து நல்ல இசைக் கலைஞனாக மாறுவான்.

தன்னுள் எரியும் அந்த காதலை காமத்தை எரிய விட்டது அவள்தான். அவளைத் தவிர யாரையும் தொட மாட்டேன் என்று வைராக்கியம் வேறு அவனுக்கு. அணையா நெருப்போடு எங்கோ சென்று விட்டான்.

குருநாதர் மறைந்த பிறகு ஊர்ஊராக அவரைத் தேடி அலைகிறாள் அவள். கடைசியில் சென்னையில் ஏதோ ஒரு மூலையில் அவன் காய்ச்சலில் படுத்துக் கொண்டு இருக்கிறான். கடைசியில் நாயகி அவனைப் பார்க்கிறாள்.

அவனுடன் அந்த நினைவில் உடலுறவு கொள்கிறாள். அவளை பார்த்தவுடன் அவனும் தன்னிலை மறந்து மனதால் இணைந்த இருவரும் உடலால் இணைகிறார்கள்! அவனுள் கொழுந்துவிட்டெரியும் காமம் அவளால் அணைக்கப்படுகிறது! அதற்குப்பின்னால் அவன் மிகப் பெரிய இசைக் கலைஞன் ஆகிறான். குருநாதர் லட்சியமும் நிறைவேறுகிறது!

இதுதான் சாந்தி முகூர்த்தம்! கதைக்கு பெயர் சாந்தி முகூர்த்தம் என்று கூட வைத்திருக்கலாம்! அவ்வளவு பொருத்தம்!

இப்பொழுது நாம் சாந்தி மந்திரத்துக்கு வருவோம். பிராமண வீடுகளில் குறிப்பாக யாகங்கள் மந்திரங்கள் ஆகியவற்றை முடிக்கும் பொழுது இந்த சாந்தி மந்திரம் பயன்படுத்துவார்கள்..

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று மூன்று முறை கூறுவார்கள்! மூன்று உலகமும் சாந்தி அடைவதற்காக! அதேதான் பிரம்மச்சாரியம் என்ற என் பல வருட விரதம் முடிந்தது அக்னி ரூபமாய் கொழுந்து விட்டெரியும் ஆண்மகன்.

திருமணம் முடிந்து கிரகஸ்தம் என்னும் புது கட்டத்துக்குள் நுழைகிறான். ஒரு கிரகஸ்தன் ஆக அவன் தன் கடமையை செய்ய வேண்டுமென்றால் அவனுக்குள் இத்தனை வருட காலமாக எரிந்து கொண்டிருக்கும் காமத்தீ அணைய வேண்டும்!

பிரம்மச்சரியத்துக்குள் நுழைய ஒரு நல்ல முகூர்த்த நாளாக பார்த்து எப்படி நாம் உபநயனம் செய்கிறோமோ அதேபோல் கிரகஸ்தம் உள்நுழைய ஒரு முகூர்த்தம் பார்த்து அந்த இருவரும் சாந்தி அடைய நாம் செய்வது தான் சாந்தி முகூர்த்தம்!

 

No comments:

Post a Comment