Friday, January 5, 2018

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்


தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்


காரணம் தெரியாமல் தேநீர் குடிக்கலாமா?

தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே.

ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர்.

ஒரு வேளை தேநீர் குடிக்கவில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர்.

சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவதுமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கிறோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர்.

ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மைகள் அடங்கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வுகள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ்வொன்றாக நமக்கு தெரிவிக்கின்றன.

பழங்காலத்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது தேநீர்.

அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பல் சொத்தை

தேநீரில் இயற்கையான ஃபுளோரைடு என்ற ரசாயனம் சிறிதளவில் இருப்பதால், பல் சொத்தையாவதை அது தடுக்கும்.

எப்படியெனில் ஃபுளோரைடு எச்சிலோடு கலக்கும் போது, சொத்தைகளை உண்டாக்கும் துணை உற்பத்திப் பொருட்களை பாக்டீரியாவால் உற்பத்தி செய்ய முடியாது.

மேலும் ஃபுளோரைடு, பல் சொத்தையாகும் ஆரம்ப நிலையில் அதை சரி செய்ய உதவும்.

எடை குறைவு

க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது.

இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால் (முக்கியமாக வயிற்று பகுதியில்), உடல் எடை குறையும்.

புற்றுநோய்

தேநீரில் உள்ள மற்றொரு ஆக்சிஜெனேற்றத் தடுப்பானான பாலிஃபீனால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.

எனவே இதற்கு நன்றியை முதலில் நாம் தெரிவிக்க வேண்டும். இதற்காக செய்யப்படும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இதனை இன்னும் உறுதியாக சொல்லாவிட்டாலும், தேநீரில் உள்ள பாலிஃபீனால் மற்றும் கேட்சின்ஸில் உள்ள உயிரிய செயல்பாடு புற்றுநோயை தடுக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்

தினசரி எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி முழுவதும் சரியில்லை என்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

பதிலாக தண்ணீருடன் சேர்த்து, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களும் உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்கின்றனர்.

எனவே சிறிதளவு காப்ஃபைன் சேர்ப்பது தவறில்லை; ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் பருகலாம்.

தமனித் தடிப்பை குறைக்கும்

தமனித் தடிப்பு என்பது தமனி இறுகி குறுகுவது. ஒரு ஆய்வின்படி, தினசரி 1-2 கப் தேநீர் பருகும் பெண்களுக்கு 50 சதவீதம் வரை தீவிர தமனித் தடிப்பு குறைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாதத்திற்கும் நிவாரணி

பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர் பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும்

பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

முக்கியமாக அல்சைமர் போன்ற சிதைகின்ற நோய்கள். மேலும் க்ரீன் டீ-யில் உள்ள பாலிஃபீனால், மூளை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் டோபமைன் மற்றும் எஃபிநெஃப்ரின் போன்ற நரம்பியத்தூண்டுவிப்பிகள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ளும்.

மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால், படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோய்

இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன் டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்

க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும் அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்பு அதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயது பெண்மணிகளுக்கு இருப்பதில்லை.

என்ன தேநீர் குடிக்க கிளம்பிட்டீங்களா ?