Thursday, June 9, 2022

ரயிலிலும் லக்கேஜ் கட்டுப்பாடு

 ரயிலிலும் லக்கேஜ் கட்டுப்பாடு

*விமானம் போல் ரயிலிலும் லக்கேஜ் கட்டுப்பாடு : அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு சென்றால் 6 மடங்கு அபராதம் !*

ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அனுமதிக்கப்பட்ட இலவச வரம்பு*

    ஏசி முதல் வகுப்பு - 70 கிலோ

    ஏசி இரண்டு அடுக்கு / ஏசி அல்லாத முதல் வகுப்பு - 50 கிலோ

    ஏசி மூன்று அடுக்கு / ஏசி அமரும் வசதி - 40 கிலோ

   இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி - 40 கிலோ

    இரண்டாம் வகுப்பு அமரும் வசதி - 35 கிலோ

*அதிகபட்ச எடை அளவு*

இது தவிர லக்கேஜுக்கான கட்டணம் செலுத்தி ஒவ்வொரு பயணியும் அதிகபட்சமாக ஏசி முதல் வகுப்பு - 150 கிலோ கிராம், ஏசி இரண்டு அடுக்கு / ஏசி அல்லாத முதல் வகுப்பு - 100 கிலோ கிராம், ஏசி மூன்று அடுக்கு / ஏசி அமரும் வசதி / இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி - 80 கிலோ கிராம், இரண்டாம் வகுப்பு - 70 கிலோ கிராம் வரை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவசமாக கொண்டு செல்லும் லக்கேஜுக்கான எடையும் இந்த அதிகபட்ச எடையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கூடுதல் லக்கேஜுக்கான புக்கிங்கை ரயில் புறப்பாட்டுக்கு 30 நிமிடங்கள் முன்னர் வரையில் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போதும் பயணிகள் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*6 மடங்கு அபராதம் !*

அதிகப்படியான லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு பார்சல் சர்வீஸ் கட்டணத்தைவிட 6 மடங்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உதாரணமாக 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்திற்கு 40 கிலோ எடையுள்ள லக்கேஜ்களை பார்சல் சர்வீஸில் புக் செய்தால் ரூபாய் 109 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். ஆனால் அதே எடையுள்ள லக்கேஜ்களை விதிகளை மீறி ரயிலில் எடுத்து சென்றால் 109 x 6 = 654 என ஆறு மடங்கு அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது