கூரக்கடை(சிறுகதை)
அந்தநாளுகள்ல அந்த ஊருல பலகடைகள் இருந்துச்சு. தெருவுக்கு ஒரு கடை ஆனா எங்க தெருவில மாத்திரம் 3 கடைகள் இருந்துச்சு எல்லாம் பலசரக்குக் கடைகள்தான். ஒவ்வொன்னுக்கும் ஒரு பேரு அதுல பெரிய கடைன்னா அது கூரக்கடைதான். அது இல்லாம இன்னும் ரெண்டு கடைக இருந்துச்சு ஒன்னுக்குப்பேரு குட்டயன் கடை இன்னொன் னுக்குப்பேரு மூக்குப் பொடிக்காரன் கடை
கடைவெச்சிருந்தவர் குட்டயா இருப்பாரு அதுனால குட்டயன் கடை அவரோட தங்கச்சி புருசன் தான் மூக்குப்பொடிக்காரன் கடை மொதலாளி எப்பையும் மூக்குப்பொடிய போட்டுக்கிட்டே இருக்குறதுனால அந்தப்பேரு
அந்தத்தெருவில இருந்தவங்க எல்லாம் நோட்டுப்போட்டு கடன்லதான் பலசரக்கு காய்கறி எல்லாம் வாங்குவாங்க. மதுரை கோட்ஸ் மில்லுல தனியார்லேத்துல பென்னர் காக்கில்ல அப்புறம் கொஞ்சப்பேர் அச்சாபீஸ் நு சொல்லப்படுற அச்சகத்துல வேல பாக்குறவங்க
பென்னர் ,கோட்ஸிலவேல பாக்குறவங்க எல்லாம் சம்பளம் வாங்குன மக்யாநாளுல கடன அடைச்சிட்டு வாங்குவாங்க. மத்தவங்க ஒருகடையில கடன் வாங்கிட்டு அதை அடைக்காம அடுத்த கடையில வாங்கப் போயிருவாங்க இந்த மூனு கடைக்காரவுகளும் ஒரே ஊர்க்காரவுக அதுலயும் சொந்தக்காரவுக அதுனால ஒருகடையில கடன் வைச்சிருந்தா மத்தவுகளுக்கும் சொல்லிருவாங்க அப்பத்தான் வாங்குன கடன அடைப் பாங்கன்னு அவங்களுக்குள்ள ஒரு ஏற்பாடு
செலநேரம் சொல்லிக்குடுப்பாங்க கடைக்காரவுங்க “ நீங்க அங்க பாக்கி வைச்சிருக்கீகலாம்ல சீக்கிரமா அடைங்க இங்கயும் ரொம்பக்குடுக்க முடியாது” நு
குட்டையன் கடை மொதலாளி கறாரானவரு ரொம்பக் கடன் குடுக்க மாட்டாரு. மூக்குப்பொடியும் அப்புடித்தான் அது சின்னக்கடைவேற அதுனால கடனே கொஞ்சம் தான். ஆனா கூரைக்கடை அப்புடி இல்ல பெரிய கடை நாளைஞ்சு பேரு வேலை பாப்பாங்க. எல்லாச்சரக்கும் இருக்கும் கடனும் கொஞ்சம் விட்டுப்புடிப்பாங்க .
கூரை க்கடைக்குள்ளயேதான் எல்லாரும் குடியிருக்குறது. வாடகைக்கடைதான் ஆனா முதலீடு அதிகம். இப்ப கதைக்கி வருவோம் இந்தக்கடையிலதான் நம்ம கதாநாயகன் கணக்கு வைச்சிருந்தாரு. அவர் ரயில்வேல வேலை புள்ள குட்டி ஜாஸ்த்தி அங்க காலனியில ஸ்டோர்ல பலசரக்கு வாங்கு வாரு பத்தாததுக்கு கூரக்கடையில கணக்கு வைச்சி வாங்குவாரு. பணம் முன்ன பின்னதான் குடுப்பாரு.
அப்படி வாங்குறவரு மூனுமாசமா மொத்தப் பலசரக்கும் அரிசி உள்பட இங்கேயே வாங்கி பாக்கி வைச்சிட்டாரு. பணம் குடுக்க முடியல எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குள்ள அதுனால கூரக்கடக்காரருமகன் வீட்டுக்கு ஆள் அனுப்பிச்சிட்டாரு. அதுவுமில்லாம இனிமே பணம் குடுக்காம பொருள் இல்லைன்னு சொல்லிட்டாரு.
சரி இந்தக்கடைலதான் இல்லைன்னா மத்த கடைக்கும் தகவல் சொல்லிட்டாரு. எங்கயும் எதுவும் வாங்க முடியல. ஒருநா அரிசி பருப்பு வாங்கவந்த அவரோட மகன எதுவும் கொடுக்காமத் திருப்பி அனுப்பிச்சிட்டாரு அதைப் பாத்துக்கிட்டு இருந்த அந்தத் தெருவில இருந்த ஒருத்தர் சொன்னாரு” அவங்களால குடுக்கமுடியாது ஏன்னா அவர் வேலையில இருந்து சஸ்பெண்ட் பண்ணீட்டாங்க” நு
மேல கேட்டப்ப அவர் சொன்னாரு ” அவர் ஒரு தொழிற்சங்கத்தலைவர். எல்லாரும் சேந்து கொஞ்சநாளைக்கி முன்னாடி ஸ்ட்ரைக் பண்ணுனாங்க. அதுல இவர சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க வேலை இல்ல அதான் கடன அடைக்கமுடியல பாவம் என்ன செய்வாங்க”
அதைச்சொல்லிட்டு இருக்குறப்ப கூரக்கடைக் காரர் ஊருக்குப்போயிருந்தவர் வந்துட்டாரு. விசயத்தைக் கேள்விப்பட்டு மகனக் கண்ணா பின்னா நுதிட்டிப்புட்டாரு. யாருக்கு நீ இல்லைன்னு சொல்லிருக்க அவங்க இல்லைனா இன்னிக்கி நம்ம இல்ல இந்தக் கடையில்ல. இளையாங்குடிக்குப் பக்கத்துல பசில செத்துப்போயிருப்போம் அவங்களுக்குப் போய் இல்லைன்னு சொல்லிட்டியே அந்த தாயமங்கலம் மாரியம்மா நம்மல காலி பண்ணிடும் நு சொன்னாரு
அப்ப அவர் சொன்னாரு ”பத்துவருசத்துக்கு முன்னாடி நம்ம ஊரில பெரிய பஞ்சம் சுத்தமா வெளைச்சல் இல்ல. குடிக்கக் கூழுக்கும் வழி இல்ல. என்னா பண்ணுறதுன்னும் தெரியல இனிமே இந்த ஊரில இருந்தாப்பொழைக்க முடியாதுன்னு தெரிஞ்சி போச்சு. கெட்டும் பட்டணம் சேர்னு எல்லாம் மதுரைக்கி வந்தோம் ஆனா மதுரையில ஆரும் தெரியாது தெரிஞ்ச ஒரே ஆளு நம்ம ஊரில இருந்து இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்த ஒரே அம்மா பூவாயிதான். நேர அவுகளைத்தான் வந்து பாத்தோம். அப்ப அவுக நம்ம குலத்தொழிலான மண்பானைதான் செஞ்சு பொழைச்சிட்டு இருந்தாங்க அப்ப 10 பேரு மொத்தமா வந்தோம் அவுகளோட புருசன் சாமி மாதிரி “ சரி வந்தது வத்துட்டீக எல்லாரும் வேலை பாத்து எல்லாரும் சாப்பிடுவோம்னு வேலையப்பாக்கச்சொன்னாரு”
”ஆனா அது கட்டுபடியாகல. ஏற்கனவே ஒன்னப்புடி என்னப்புடின்னு போய்க்கிட்டு இருந்த தொழில் கட்டுபடியாகல. அப்பத்தான்அவர் சொன்னாரு நான் கொஞ்சப்பணம் கடனா வாங்கித்தாறேன் ஒரு கடைய கிடைய வைச்சிப்பொழச்சிக்கோங்க நு சொல்லி பணம் தனக்குத்தெரிஞ்சவங்க கிட்ட வாங்கிக்கொடுத்து பலசரக்குக் கடை வைச்சிக்கொடுத்தாரு.
அதுதான் இன்னைக்கி நம்ம எல்லாருக்கும் கஞ்சி ஊத்துது. நீங்க கடன் இல்லைனு சொல்லி விரட்டுனது அவரோட மகன் குடும்பத்தைச் சேந்தவங்களத்தான் அந்தப்பாவம் சும்மா விடாது மொதல்ல போய் அவங்களைகூப்புட்டு வாங்க”ன்னு சொல்லி கடைக்காரப்பையனை அனுப்பிச்சாரு
அவன் போய் அவரோட சம்சாரத்தைக் கூப்புட்டு வந்தான். அந்த அம்மா வந்துச்சு அவங்ககிட்ட கூரைக்கடைக்காரர் சொன்னாரு “அம்மா தப்பு நடந்துபோச்சு சின்னப்பயலுக தெரியாம சொல்லிப்புட்டாக மன்னிச்சிருங்க நீங்க ஒங்களுக்கு வேணுங்கிறத வாங்கிட்டுப் போங்க பணத்தை மெதுவாக் குடுங்க குடுக்காட்டியும் பரவாயில்ல அதுனால எங்களுக்குப் பெருசா கஸ்டம் இல்ல. உங்க மாமனார் செஞ்சதுக்கு இதுகூட செய்யலை ன்னா எப்புடி” நு பணிவாச் சொன்னார்.
அந்த அம்மாவும் வேண்டியதை வாங்கிட்டுப் போச்சு, ஆனா விசயம் அதோட முடியல மக்யாநா அவரே நேரில வந்து இதுவரைக்கும் இருந்த கடனையும் மொதநாள் வாங்கிட்டுப் போனதுக்கு உண்டான காசையும் கொண்டாந்து குடுத்தார். அப்ப கூரைக்கடக்காரர் கேட்டார் “ அய்யா ஒங்கள வேலையில சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களா முல்ல எப்புடி பணம் வேணாம்” நு இழுத்தார்
அப்ப அவர் சொன்னாரு உண்மைதான் . சஸ்பென்சன்லதான் இருக்குறேன் ஆனா மத்த தொழிலாளர்கள் வசூல் பண்ணிக் கொண்டாந்து காசு குடுத்துட்டுப்போனாங்க இது மறுபடி எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் குடுப்பாங்க. ஆனா அது இல்ல பிரச்சனை எங்க அப்பா உங்களுக்குச் செஞ்சதை நாங்க திரும்பிவாங்குன மாதிரி ஆயிடுது உங்ககிட்ட நாங்க காசு குடுக்காம வாங்குறது அது எங்களுக்கு அழகில்ல அதுனால வாங்கிக்கங்க இனிமே கடன் வேண்டாம் காசு கொடுத்தா மாத்திரம் பொருள் குடுங்கனு சொல்லிட்டுப் பணத்தைக் குடுத்துட்டுப்போனார்
அப்ப முன்னாடி இவருக்கு வேலைபோச்சுன்னு சொன்னாரே அவர் அங்க இருந்தார். அவர் சொன்னார் அவர் பொய்சொல்லிட்டு பணம் குடுத்துட்டுப்போறார். அவர் அவரோட அப்பாகிட்ட தனக்குச்சேரவேண்டிய நிலத்தை எழுதிக்குடுத்துட்டு காசுவாங்கி இங்க குடுத்துட்டுப்போறார் ஏன்னா அவங்க அப்பா இவரைக்கூப்புட்டுப் பணம் குடுத்து சொன்னதைத்தான் இப்ப உங்ககிட்ட சொல்லிட்டுப்போறார். ஏன்னா செஞ்ச உதவிய தான் கஸ்டப்பட்டாலும் திரும்பிக் கேக்கக் கூடாதுன்ற கொள்கை உடையவர் அவர்
அதைகேட்டதும் கூரைக்கடக்காரர் கண் கலங்குச்சு அவர் சொன்னார் “ எப்பேர்பட்ட மனுசன்யா அவரு அவருக்கா இப்படி சோதனைன்னு”
அதுக்கு இவர் சொன்னார்” கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே” சொல்லிருக்காங்க பெரியவங்க என்று.