Saturday, July 29, 2023

ஜாமீன் கையெழுத்து

 

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் கவனிக்க...!

ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்:-

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் சட்டப்படி தங்கள் உரிமை மற்றும் கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப முடியும்.

இது எந்த சட்டத்தில் வருகிறது...?

இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act), 1872 ன் 8 ஆம் பகுதி தான் இண்டெம்னிடி அண்ட் கியாரண்டி (Indemnity and Gyranty) எனப்படும் இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் ஆகும். இந்த சட்டத்தின் 124 முதல் 147 வரையிலான பிரிவுகள் ஷூரிட்டி பற்றி கூறுகிறது.

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால்...?

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால் உத்தரவாதம் கொடுப்பவர் அல்லது உத்தரவாதி என்று பொருள். உதாரணமாக A என்ற நபர் B என்ற நபருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அல்லது B க்கு செய்வதாக ஒப்புக்கொண்ட ஒரு செயலை கொடுக்கவோ அல்லது செய்யவோ தவறினால், தாம் பொறுப்பு ஏற்பதாக இவர்கள் இருவரும் அல்லாத 3வது நபரான C என்பவர் கூறுவதைத்தான் உத்தரவாதம் என்கிறோம். அவ்வாறு உத்தரவாதம் கொடுப்பவர் தான் ஜாமீன் (ஷூரிட்டி) என்னும் உத்தரவாதி ஆவார்.

ஒருவருக்கு மற்றவர் உத்தரவாதம் கொடுப்பது என்பது முதல் நபர் கடன் வாங்கும் போது மட்டுமல்ல. அவர் ஏதேனும் வழக்கில் சிக்கி அவர் மீது கைது வாரண்ட் இருக்கும் போதோ அல்லது அவர் முன்ஜாமீன் கேட்கும் போதோ, அவருக்கு வேறு நபர் உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கடன் கொடுத்தவர், பெற்றவர், உத்தரவாதம் கொடுத்தவர்:-

சாதாரண புரோநோட் கடன் அல்லது அடமானக் கடனாக இருந்தால் கடன் கொடுத்தவர், கடன் பெற்றவர் என இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் Indemnity ல் ஒரு நபர், புரோநோட்டோ அல்லது அடமானப் பத்திரமோ வாங்கிக் கொண்டு, வேறொரு நபருக்கு கடன் கொடுக்கும் போது, அந்த கடனை பெற்றவர் அதனை திருப்பி தருவதற்கு 3வது நபர் உத்தரவாதம் கொடுப்பதால், இங்கு கிரெடிட்டார் என்ற கடன் கொடுத்தவர், பிரின்ஸ்பல் டெப்டார் (Principal Debtor) என்னும் கடன் வாங்கியவர் மற்றும் ஜாமீன் (ஷூரிட்டி) என்ற உத்தரவாதி ஆகிய மூன்று பேர் இருப்பார்கள்.

உத்தரவாதியின் நிலை :-

மேலே கூறப்பட்டுள்ள மூன்று பேரில் 3வது நபரான உத்தரவாதிக்கு சற்று சங்கடமான நிலை தான். கடன் கொடுத்தவர், கடனை கொடுக்கும் முன்பாக போதிய பாதுகாப்பு (Security) பெற்றுக் கொண்டு தான் கொடுக்கிறார். கடன் பெற்றவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், உத்தரவாதியிடம் இருந்து வசூலித்து விடுகிறார். கடன் பெற்றவர் முடிந்தால் திருப்பிக் கொடுக்கிறார். இல்லாவிட்டால் அவருக்கு பதில் உத்தரவாதம் கொடுத்தவர் தான் கொடுப்பார். இந்த நடவடிக்கையால் எந்தவித பிரதிபலனும் பெறாத உத்தரவாதி தான் யாருக்காக உத்தரவாதம் கொடுத்தாரோ, அந்த நண்பர் அல்லது உறவினர் திருப்பிச் செலுத்தாத கடனுக்காக தன் பணத்தை அல்லது சொத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

மூன்று வகையான உரிமைகள்:-

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உரிமைகள்

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உரிமைகள்

3. இதர இணை உத்தரவாதிகளுக்கு எதிரான உரிமைகள்

என உத்தரவாதியின் உரிமைகளை மூன்று வகைகளை பிரிக்கலாம்.

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. அறிவிப்பு கொடுக்கும் உரிமை

கடன் கொடுத்தவர் உத்தரவாதியிடம் பணம் கேட்டு வந்தால், அந்தக் கடனை உடனடியாக தீர்க்கும்படி முக்கிய கடனாளிக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

B. பற்று உரிமை மாற்றுதல் :

கடன் கொடுத்தவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் செலுத்தி, கடனாளியின் பொறுப்பு முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவருக்கு உள்ள உரிமைகள் முழுவதும் உத்தரவாதிக்கு வந்துவிடும். இதுதான் பற்று உரிமை மாற்றுதல் எனப்படும் சப்ரோகேஷன் எனப்படும். (பிரிவு 140)

C. பத்திரங்கள் மீது உரிமை :

உத்தரவாதி பணம் முழுவதையும் செலுத்திய பிறகு முக்கிய கடனாளியின் பத்திரங்கள் மீது கடன் கொடுத்தவர் போல் நடவடிக்கை எடுக்கலாம். (பிரிவு 141)

D. இழப்பு எதிர்காப்பு உரிமை :

முக்கிய கடனாளி சார்பாக உத்தரவாதி செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு எனப்படும் Indemnity உரிமை அவருக்கு உண்டு. (பிரிவு 149)

E. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை :

உத்தரவாதி, கடனாளி சார்பாக பணம் செலுத்துவதற்கு முன்பாக கடனாளியிடம் (அந்த கடன் தீர்க்கப்படாமல் இருந்தால்) தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோருதல் :

கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால், கடன் கொடுத்தவரிடம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.

B. பத்திரங்களை விற்கச் சொல்லுதல்:-

தான் வாங்கிய கடனுக்கு ஆதாரமாக கடனாளி, கடன் கொடுத்தவரிடம் கொடுத்திருந்த பத்திரங்களை விற்று, அந்த தொகையிலிருந்து அவருக்கு வரவேண்டிய கடன் தொகையை எடுத்துக் கொள்ளச் சொல்லி கடன் கொடுத்தவரிடம் கேட்கும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.

C. கடனாளி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோருதல்:-

தன்னிடம் பணம் கேட்டு கடன் கொடுத்தவர் வரும் போது, கடன் தொகையை வசூல் செய்ய கடனாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

3. இணை உத்தரவாதிகளுக்கு எதிராக

உத்தரவாதியின் உரிமை:-

முக்கிய கடனாளி தன் கடனை தீர்க்காமல் இருந்துவிடும் பட்சத்தில், உத்தரவாதி அக்கடனை தீர்க்க வேண்டியது வரும். அந்த நேரங்களில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்கலாம். அப்போது உத்தரவாதி மற்றும் இதர இணை உத்தரவாதிகள் எல்லோரும் சமமாக கடன்தாரருக்கு கொடுக்கப்படும் தொகையில் பங்கு பெற வேண்டும். அவ்வாறு எல்லா உத்தரவாதிகளும் சேர்ந்து கடனாளியின் கடன் முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவர் வசம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களில் அவரவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதில் அவரவர்களுக்குரிய பங்கினை பெறலாம்.

உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல்:-

இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு 130,131 மற்றும் 133 ல் எந்தெந்த சூழ்நிலையில் உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறுகிறது.

பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு கொடுப்பதன் மூலம்

பிரிவு - 131- உத்தரவாதி இறந்து விட்டால்

பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் மாறுபாடுகள் ஏற்படும் போது.