Saturday, August 10, 2024

முத்தழகி.

முத்தழகி.

 


படித்ததில் பிடித்தது  என் முத்தழகி....

பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத

உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க

கட்டுனது தாலியுனும்

நடந்தது கல்யாணம்னும்

பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்

அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ

அம்மன் சிலையாட்டம் நீ நின்ன

சிறுத்த இடையழகி !

செவத்த நிறத்தழகி !

கொஞ்சும் பேச்சழகி !

என் முத்தழகி !

பின்கொசுவம் சேலைகட்டி,

கோணங்கி கொண்டை போட்டு,

கொண்டையில பூவும் வச்சு..



கும்முன்னு நீ வந்தா

கம்முனு இருக்கவா முடுஞ்சுது.

கம்மாகரையிலும்,

களத்துமேட்டுலையும்...

காதலும் வளந்துச்சு

குடும்பமும் பெருகுச்சு

மூணு காணி நிலத்துல

முறைய பயிர் வச்சு

கருதருத்து கமிட்டில கொடுத்து காசாக்கி

கழனி வேலைய நா பாக்க.

கணக்குபுள்ளையா நீ இருந்த.

எட்டு புள்ள பெத்தும் எடுபாத்தான் இருக்க புள்ளன்னு...

நைய்யாண்டி நான் பேச

மூத்தவ மூலைல உட்கார்ந்தாச்சு

இன்னும் முந்தானை நினைப்ப பாருன்னு சொல்லி

கொமட்டுல குத்தி குறும்பா சிரிச்சத நினைக்கையில்

நெஞ்சம் நிறைஞ்சிருக்கு.

அஞ்சு பொண்ணும்,

முணு பிள்ளையும்

வளந்து நிக்க

காச கரியாக்காம கச்சிதமா குடும்பம் பண்ணியதால

கெளரவமா அடுத்தடுத்து

அஞ்சு பொண்ணையும் கரையேத்தினோம்.

மூணு மருமகளையும் முறையா கொண்டுவந்து

பொறுப்ப கொடுத்து விருப்ப ஓய்வெடுக்க.

எடுத்த முடிவு தப்புன்னு இப்பதான் புரியுது.

பெத்த பிள்ளைங்க பாரமா நெனைக்க

மூணு வேலை சோத்துக்கு

மூத்தவன் வீட்ல ஒருநேரம்

இளையவன் வீட்ல ஒருநேரம்

நடுலவன் வீட்ல ஒருநேரம்னு...

நாதியத்து நாயா அலைய வேண்டியிருக்கு

உழைச்ச உழைப்புக்கு

விதிச்ச விதி இதுதான் !

முத்தழகி.

இப்போ நினைப்பெல்லாம் ஒண்ணுதான்.

கடைசி நிமிஷம் உன் மடியில கண்ண மூடனும்.

மூச்சி நின்னதை முடிவு பண்ணி

உன் முந்தானையில என் முகத்தை தொடச்சி

முறையா அனுப்பிட்டு

அடுத்த நிமிஷம் நீயும் வந்துடு

அங்கேயும் சேர்ந்தே இருப்போம்.

சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்

நீ இல்லைனா சொகமேது