குறை ரத்த
அழுத்தம்
குறை
ரத்த அழுத்தத்தில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த
நோய்க்குத் ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர்.
ஒருவருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 90க்குக் குறைவாகவோ அல்லது டயஸ்டாலிக் அழுத்தம்
60க்குக் குறைவாகவோ இருந்தால், அவருக்கு இவ்வகை குறை ரத்த அழுத்தம் இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
அல்லது
சிஸ்டாலிக் அழுத்தம் 115க்கு மேல் இருந்து டயஸ்டாலிக் அழுத்தம் 50க்குக் குறைவாக
இருந்தால் அப்போதும் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் எதுவும் இருக்காது.
அப்படிப்பட்டவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று 20 மி.மீ. அளவுக்கு
சிஸ்டாலிக் அழுத்தம்
குறைகிறதென்றால், அப்போது சில அறிகுறிகள் தோன்றும். இந்த நிலைமையில் அவசியம்
மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உயிருக்கு ஆபத்து
நேரும்.
ரத்த அழுத்தம்
குறைவது ஏன்?
இதயத்துக்குத்
தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக்
காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே
நின்று விடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால்
ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது, மயக்கம் ஏற்படுகிறது.
யாருக்கு
இது வருகிறது?
தடகள
வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள்,
கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம்
படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அறிகுறிகள்
தலைக்கனம்,
தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு,
பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத
நிலைமை, உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ ஏற்பட்டால் அப்போது குறை
ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
யாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்
1.
கர்ப்பம் : கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள்
அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப்
பிறகு இது சரியாகிவிடும்.
2.
நீரிழப்பு: காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள்
மற்றும் விளையாட்டுகள், தீவிரமான தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு
ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும்.
3.
நோய்கள் : இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு,
இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி
(Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில் சிரை ரத்தக்குழாய் புடைப்பு
நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.
4.
விபத்துகள் : வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும்
விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும் நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள்
பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
5.
ஹார்மோன் கோளாறுகள் : தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா
தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை
போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
6.
ரத்தம் இழப்பு : விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு
காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல் புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம்
இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
7.
தீவிர நோய்த்தொற்று: சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி
நிலையை (Septicaemia) உருவாக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும்.
8.
ஒவ்வாமை: மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும்
ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.
9.
சத்துக்குறைவு : ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12
மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.
10.
மருந்துகள்: சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான
மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத் தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள்
போன்றவற்றால் ரத்த அழுத்தம் குறையலாம்.
11.
ரத்த அழுத்த மாத்திரைகள் : உயர் ரத்த அழுத்த நோய்க்குத் தரப்படுகிற
மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்
12.
அதிர்ச்சி நிலை : இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள்,
ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிர்ச்சி நிலை
(Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை, விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி நிலை உருவாவது உண்டு. இதுதான்
ஆபத்தைத் தரும்.
இருக்கை
நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்
சிலருக்குப்
படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும்
கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த
குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். நீண்ட நேரம் கால்களை மடக்கித்
தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம்
ஏற்பட்டு மயக்கம் வரும். சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல்
சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.
உணவுக்குப்
பின் குறை ரத்த அழுத்தம்
சிலருக்கு
உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் (Postprandial hypotension). இது
பொதுவாக 60 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும்
பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை சாப்பிட்டதும் அதை
செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும்
மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும். அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது
சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து நிறைந்த, கொழுப்புச்
சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.
பரிசோதனைகள்
குறை
ரத்த அழுத்த நோய்க்கு முதல்முறையாக மருத்துவரிடம் செல்லும்போது வழக்கமான ரத்தப்
பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரெட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச்
செய்துகொள்வது நல்லது. சிலருக்கு ‘சாய் மேஜை பரிசோதனை (Tilt-table Test)
தேவைப்படும். இவற்றின் மூலம் குறை ரத்த அழுத்தம் நோய்க்குக் காரணம் தெரிந்து
சரியான சிகிச்சையை தொடங்க முடியும்.
சிகிச்சைகள்
அடிப்படை
காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச்
சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். மருத்துவரின் ஆலோசனைப்படி
உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
· நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
· கால்களுக்கு மீளுறைகளை
(Stockings) அணிந்து கொள்வது நல்லது.
· சிறு தானியங்கள், காய்கறி,
பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
· குறை ரத்த அழுத்த நோயைக் குணப்படுத்த
சில மாத்திரைகளும் உள்ளன. அவற்றை குடும்ப மருத்துவரின் பரிந்துரையின்படி சாப்பிடலாம்.
பொதுவான யோசனைகள்
· குறை ரத்த அழுத்தம் காரணமாக
தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை
ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள்.
இடையிடையில் எழுந்து செல்லுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது. வெயிலில்
அளவுக்கு அதிகமாக அலையவும் விளையாடவும் கூடாது.
· கடுமையான உடற்பயிற்சிகள்,
`ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சரியான
அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த
சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். புகைப்பிடிக்காதீர்கள்.
மது அருந்தாதீர்கள்.
· போதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.
தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று
உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு,
உடலை முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை
மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
· படுக்கையை விட்டு சட்டென்று
உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு,
மெதுவாக எழுந்திருங்கள். எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில்
முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல
வேண்டாம்.
· படுக்கையில் சிறிது நேரம்
உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது. படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக்
குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலையிலிருந்து
மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப்
புரளாதீர்கள்.
· அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை
உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில்
பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன்
மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும். வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை
மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள்.
· இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற
ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே
சுய மருத்துவம் செய்யாதீர்கள்