மருத்துவ குறியீடுகள்
பார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது. இந்த நிலை மாறும்
Sunday, August 30, 2020
உங்களுக்கு 'பிரஷர்' இருக்கிறதா?
உங்களுக்கு 'பிரஷர்' இருக்கிறதா?
உங்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டதா? உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாருக்காவது ரத்தக் கொதிப்பு உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகைபிடிப்பவரா? மதுப் பழக்கம் உண்டா? உடல் பருமன் உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? சர்க்கரை நோய் இருக்கிறதா?மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு 'ஆம்' என்று பதில் சொன்னாலும் இன்றைக்கே டாக்டரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சரியான ரத்த அழுத்தம்:
ஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ.பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம் ஆனால் இது அனைவருக்குமே சொல்லி வைத்தது போல் 120/80 என்று இருக்காது. ஒரே வயது தான் என்றாலும் ஆளுக்கு ஆள் உடல் எடை உயரம் போன்றவை வேறுபடுவது போல ரத்த அழுத்தமும் சற்று வேறுபடலாம். ஆகவேதான் உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ.வரை உள்ள ரத்த அழுத்தத்தை 'சரியான ரத்த அழுத்தம்' என்று வரையறை செய்துள்ளது.
உயர்ரத்த அழுத்தம் எது?
ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக்கணிக்கிறார்கள் மருத்துவர்கள். பரம்பரை, உடல்பருமன், முதுமை, முறையற்ற உணவு முறை, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகப் பாதிப்பு, சர்க்கரை நோய், அட்ரீனல் தைராய்டு கோளாறு போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. என்றாலும் இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவுப் பழக்கமும் மன அழுத்தமுமே இதற்கு முக்கியக் காரணங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை உணவுகள் எனக் கொழுப்பு மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவதால் இளமையிலேயே உடல் பருமன் வந்து அவதிப்படுகிறவர்கள் நம்மிடம் அதிகம். இது உயர்ரத்த அழுத்த நோய்க்குப் பாதை அமைக்கிறது. இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது உடலில் ரத்த அழுத்தத்தை நிர்வாகிக்கிற பலகாரணிகளைப் பாதிக்கிறது. இதன் விளைவால் இளமையிலேயே ரத்த அழுத்தம் அதிகரித்துவிடுகிறது.
அறிகுறிகள் என்ன?
தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு, மூக்கில் ரத்தக் கசிவு ஆகியவை இந்த நோய்க்குரிய அறிகுறிகள். ஆனால் பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. இவர்கள் தான் மிகுந்த ஆபத்தானவர்கள். இந்த நோயினால் இதயம், சிறுநீரகம்,மூளை, கண்கள் பாதிக்கப்படும் போது சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுக்காக மருத்துவரிடம் செல்வார்கள். அப்போது உயர் ரத்த அழுத்த நோய் இருப்பது தெரியவரும்.
பாதிப்புகள் என்ன?
இந்த நோயைச் சரியாகக் கவனிக்காத நிலையில் இதயம் வீங்கிவிடும். மாரடைப்பு, பக்கவாதம் வந்து சேரும். பார்வை பாதிக்கப்படும். சிறிது சிறிதாகச் சிறுநீரகங்கள் கெட்டுப் போகும். இந்த ஆபத்துகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ரத்த அழுத்தம் பார்த்துக் கொள்ளவேண்டும். ரத்தக் கொதிப்புக்கு முதல் எதிரி சமையல் உப்பு. தென்னிந்தியாவில் தான் உப்பு மிகுந்த உணவை உண்ணும் பழக்கம் அதிகமாக உள்ளது. தினமும் 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த உணவுப் பொருள்களான ஊறுகாய் கருவாடு, அப்பளம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு ஆகாது:
கொழுப்புச் சத்து அதிகமுள்ள இறைச்சி, முட்டை, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லேட், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பூரி, அப்பளம், வடை, சமோசா, முறுக்கு, பஜ்ஜி, வறுவல் போன்ற எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக் கூட மிகக்குறைந்த அளவில் தான் உபயோகிக்க வேண்டும். அசைவப்பிரியர்கள் வாரம் ஒருமுறை கோழிக்கறி அல்லது மீன்சாப்பிட்டுக் கொள்ளலாம்.
நார்ச்சத்து முக்கியம்:
நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் கரைக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் .உடல் எடையையும் குறைக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழுதானியங்கள், கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்த மல்லி போன்ற பச்சை இலைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டுமானால் உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது மிக முக்கியம். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். குறிப்பாக 40 நிமிடங்கள் வேகமாக நடப்பது நல்லது. புகைபிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள்.
தூக்கமும் ஓய்வும் அவசியம்:
தினமும் குறைந்தது 6மணி நேரம் தூக்கம் அவசியம். வாரம் ஒரு நாள் ஓய்வு அவசியம். ஓய்வு என்பது உடலுக்கு மட்டுமல்ல; உள்ளத்துக்கும் தான். ஆகவே வார இறுதியைக் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். தினமும் யோகாசனம், தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். மனதுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்தால், மனம் லேசாகி மன அழுத்தம் குறையும். அலுவலக நேரங்களில் தேவையற்ற பரபரப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி கோபப்படுவதாலும், உணர்ச்சிவசப்படுவதாலும், சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. கோபத்தைக் குறைத்து உணர்வுகளைத் தளர்த்தி மனதை லேசாக்கிக் கொள்ளப்பழகிக் கொள்ளுங்கள்.