Saturday, August 29, 2020

மாட்டுவண்டி

 மாட்டுவண்டி



                              மாட்டுவண்டி என்பது மனிதனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு வாகனம். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்திய முதல் வாகனமும் இது தான் என்று கூட சொல்லலாம். நமது முன்னோர்கள் வடிவமைத்திருக்கும் இந்த மாட்டுவண்டியின் தொழில்நுட்பம் நம்மை சற்று கூடுதலாகவே ஆச்சரியப்பட வைக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் சக்கடாவண்டி என்னும் பாரவண்டியை எடுத்துக்கொண்டால் அதன் வடிவமைப்பு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது என்கிற தகவல் சற்று யோசிக்க வைக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

                         இந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5 ¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது. இந்தத் தரபடுத்தல் என்பது ஏன் என்று சற்று பார்ப்போம். பொதுவாக ஒரு நபரை நெட்டையான ஆள் என்றோ குட்டையான ஆள் என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம். இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை(reference point) என்று ஒன்று இருக்க வேண்டும் தானே. அதாவது சராசரி உயரம் என்பதாக. நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 5 ½ அடி என்பதாகும்.

                 இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது எண் சாண் உடம்பு என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும். இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.
மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர்போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5 ¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும் . சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1 ½ அடி உயரம் இருக்கும்.

                             ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

                           அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் சமன் (feather touch balance) செய்ய முடியும். இந்த அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிற வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை தாக்காது. எனவே மாட்டை வண்டியின் பாரம் தாக்காத விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை சுமக்க வேண்டியதில்லை. மாட்டினை பெரிய அளவில் பாரம் தாக்காத விதத்தில் வடிவைக்கப்பட்ட நமது மரபுவழி வண்டியின் தொழில் நுட்பத்தின் தன்மையை புரிந்து கொள்கையில் நமது முன்னோர்களின் அறிவுத்திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

No comments:

Post a Comment