முருங்கை மரம்
பூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா?
முருங்கை மரம் வைத்தவன் பசியோடு தூங்க மாட்டான்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க. ஏன்னா, சீசனில்லாத போதும் ஒன்னிரண்டு காய் காய்க்கும். காய் இல்லாதபோது முருங்கைகீரையை சமைச்சு சாப்பிடலாம். முருங்கை மரத்துக்கு கற்பகத்தருன்ற பேருமுண்டு. முரின்னா ஒடிதல்ன்னு அர்த்தம். சீக்கிரம் ஒடியக்கூடிய கிளைகளை கொண்டதுன்னு பொருள்படத்தான் முருங்கமரம்ன்னு சொல்றோம். அனைத்து நிலத்திலும் இந்த முருங்கை வளரும் தன்மைக்கொண்டது. தண்ணியில்லாத காட்டிலும், வெப்பம் அதிகமுள்ள இடத்திலும் இம்மரம் செழித்து வளரும். முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரத்து பின்னிருக்கும் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவுக்கு போய் கடைசியா இந்தியாவுக்கு வந்தது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில்தான் அதிகளவு பயிரிடப்படுது. இலங்கையிலும், தாய்லாந்து, தைவானிலும் பயிரிடப்படுது.
பயிரிடப்பட்டதிலிருந்து ஆறு மாசத்திலிருந்து ஒரு வருசத்துக்குள் காய் காய்க்கும் தன்மைக் கொண்ட முருங்கை யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கைன்னு பேர்ல காய்க்குது. முன்னலாம் அரை அடி நீளத்துல இருந்த முருங்கை இப்பலாம் ஒன்னரை அடி நீளத்துலயும் கிடைக்குது. இலை, பூ, காய், பட்டை, வேர்ன்னு அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தது.
முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள் இருக்கு. காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகளவு இருக்கு. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக்அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின், இரும்புசத்து, பொட்டாசியம் இருக்கு. கொழுப்பு சத்து துளியும் இல்லாதது இதன் சிறப்பு/ பொரியல், காரக்குழம்பு, சாம்பார்,பிரட்டல், சூப், கூட்டுன்னு அத்தனை விதமாய் இதை சமைக்கலாம்.
முருங்கை
மருத்துவ பயன்பாடு....
முந்தானை முடிச்சு படத்துக்குப்பின் முருங்கையின் பயன்பாடு ’அது’ ஒன்னு மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும். அது ஓரளவுக்கு உண்மையாயிருந்தாலும் இன்னும் ஏகப்பட்ட மருத்துவ பலன் உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். முருங்கைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் கால்சியம், இரும்புசத்துலாம் பெண்ணின் கருப்பையை வலுப்படுத்தி குழந்தைப்பிறப்பை துரிதப்படுத்தும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவ நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள், உப்பு சேர்த்து வதக்கி கட்டி உள்ள இடத்தில் இளஞ்சூட்டில் வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும். கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்கும். தாய்ப்பாலை ஊறவைக்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாத்திரத்தில் இரவு முழுதும் வைத்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். ஆஸ்துமா, மார்ச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
No comments:
Post a Comment