Sunday, October 29, 2017

மௌரிய வம்சம்



சந்திரகுப்த மெளரியர்
             மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மௌரியர் ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இரஜகிரஹகம் மகதத்தின்தலைநகராக இருந்தது. பின்னர், பாடலிபுத்திரம் என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய பீகாரின் தலைநகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது.மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மதத்தை தழுவி பெங்களூர் அருகே உள்ள சரவணபெலகுளாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.
பிந்துசாரர்
சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார். பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால், சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள் (பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப் பொருள்படும்).
பிந்து சாரர் இருகடல்களுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை வென்றதாக திபெத்திய வரலாற்று ஆசிரியர் தாரநாதர் கூறுகிறார். தமிழகம் வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள். சங்கப்புலவர் மாமூலனார் பாடலில் மௌரியர் படையெடுப்பை பற்றிய குறிப்புகள் இருப்பதால் இப்படையெடுப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கருதலாம். இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.
பிந்து சாரருக்குப் பிறகு அரியணை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டுதிஷ்யா என்ற ஒரு சகோதரரை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.

சக்கரவர்த்தி அசோகர் (கி.மு 273 – 232)
பிறப்பும் இளமைக் காலமும்
அசோகர் பிந்துசாரருக்கும் அவரது மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் செல்லுகஸ்நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும் (மகிந்த தேரர்),சங்கமித்தையும். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.
கலிங்கப் போரும் மதமாற்றமும்
  • கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதைய பீகார். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.
  • இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார்.ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
  • விவேகானந்தரின் கூற்றுப்படி,இளவயதில் அவ்வளவு நல்லவராக இல்லாத அசோகர், தனது சகோதரருடன் சண்டையிட்டார். அதில் தோற்கடிக்கப்பட்ட அசோகர், பழிவாங்குவதற்காக சகோதரனை கொல்ல எண்ணினார். அந்த சகோதரன் ஒரு புத்த பிட்சுவிடம் தஞ்சம் புகுந்ததால், அசோகர் அந்த புத்த பிட்சுவிடம் சென்று தனது தம்பியை ஒப்படைக்கக் கூறினார். அன்பால் பகைமையை நீக்கச் சொன்ன புத்த பிட்சுவிடம், கோபத்தால் தனது தம்பிக்கு பதில் உயிர் துறக்க அவருக்கு சம்மதமா என்று கேட்டதற்கு சிறு சலனமும் இல்லாமல் அந்த புத்த பிட்சு உயிர் விட சம்மதித்து வெளியே வந்தார். அவரது மனவலிமையைக் கண்டு கவரப்பட்டார் அசோகர். இவ்வாறுதான் புத்தரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் அசோகர்.
ஆட்சி முறை
அசோகர் முதல் முதலாக விலங்குகளுக்கு மருத்துவமனை கட்டியவர்.சாலை ஓரம் மரங்களை வைத்தவர்.மன்னர்களும், அரசு அதிகாரிகளும் மக்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தூண்களில் சட்ட திட்டங்களை செதுக்கி வத்துள்ளார்.இதன் முலம் வெளிப்படையாக நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளார்.
தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு மிகவும் எளிமையாக வாழ்ந்தார்.
தேவனாம்பியாச பிரியதர்ஷன்
தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரிலேயே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது,மாஸ்கி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மட்டும் அசோகர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஜேம்ஸ் பிரின்செப் என்ற கல்வெட்டு ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.
கிர்னார் மலை கட்டளை
சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள கிர்னார் மலை புத்தமதத்தினருக்கு மிகவும் புனிதமானது. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாக பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப்பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப்பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
பவஹாரி பாபாவுக்கு இந்த மலையின் உச்சியில் தான் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் உபதேசிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மவுரிய சாம்ராஜ்ய முடிவு
அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
  • அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநாம்பிரியர் என்ற பட்டமும் அளித்ததாகமகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பிய தீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.

No comments:

Post a Comment