Sunday, October 29, 2017

சோழர் வரலாறு



         சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.
கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
                கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.
                 உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. ‘சோழ கங்கம்என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
              கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயேஅருள்மொழி தேவேச்சுரம்என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.
தோற்றமும் வரலாறும்
              சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குலங்கள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களை அண்டிய காலப் பகுதிகளைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ சாத்தியமாகவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற விபரங்கள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பனவும் ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

No comments:

Post a Comment