Wednesday, October 4, 2017

பிரதோஷ காலம்



            சிவபெருமான் பிரதோஷ காலம் எனப்படும் சந்தியா வேளையில் (மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரை) நந்திதேவரின் இருகொம்புகளுக்கிடையே உமையம்மை, தேவர்கள் கண்டு மகிழ திருநடனம் புரிந்தார் என்பதும்; பிரதோஷ வேளையில் சிவலிங்கத்தை நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே தரிசித்து வணங்கவேண்டும் என்பதும் வரலாறு.





         காசிப முனிவரின் குமாரர்களே தேவர்களும் அசுரர்களும். நற்குணம் படைத்தவர்கள் சுரர் (தேவர்) என்றும், துர்குணம் படைத்தவர்கள் அசுரர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒருவரையொருவர் அடக்கியாள நினைத்து அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். அசுரர்கள் கடுந்தவமியற்றி இறைவனிடமிருந்து வரம்பெற்று, அதன் வலிமையால் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர்.

           பிருகு முனிவரின் மகனான பார்க்கவர் காசியில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கடுந்தவம் மேற்கொண்டார். அவருக்குக் காட்சியளித்த சிவபெருமான், அவர் வேண்டிக்கொண்டபடி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தருளினார். சிவபெருமானிடம் வரம்பெற்ற பார்க்கவரை அசுரர்கள் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். பார்க்கவரே அசுர குரு சுக்ராச்சாரியார்.  அதன் பிறகு நடைபெற்ற தேவாசுர யுத்தத்தில், இறந்துபோன அசுரர்களை சுக்ராச்சாரியார் மிருதசஞ்சீவினி மந்திரத்தைக்கொண்டு உயிர்ப்பித்தார். அதனால் அசுரர் படை குறைவடையாமல் இருந்தது. அந்த மந்திரத்தை அறிந்திராததால் தேவர்கள் கவலைகொண்டனர்.

           தேவகுரு பிரகஸ்பதியின் மகன் "கசன்" என்பவன். அவனை சுக்ராச்சாரியாரிடம் சென்று எப்படியேனும் அந்த மந்திரத்தை அறிந்துவருமாறு அனுப்பி வைத்தனர் தேவர்கள். கசன் சுக்ராச்சாரியாரிடம் சென்று சீடனாகச் சேர்ந்து நன்முறையில் அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். கசனை சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி விரும்பினாள். இதனிடையே மந்திரத்தைக் கற்றுச் செல்வதற்காகத்தான் கசன் வந்திருக்கிறான் என்பதை அறிந்த அசுரர்கள் அவனைக் கொன்றுவிட்டனர்
 ஆனால் தேவயானியின் வேண்டுகோளையேற்று சுக்ராச்சாரியார் கசனை உயிர்ப்பித்தார். இவ்வாறு அசுரர்கள் கசனைக் கொல்வதும், சுக்ராச்சாரியார் உயிர்ப்பிப்பதும் தொடர்ந்தது. இதனால் கோபமடைந்த அசுரர்கள் கசனை எரித்துச் சாம்பலாக்கி, அச்சாம்பலை சுக்ராச்சாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். நடந்ததை அறிந்த தேவயானி மிகவும் துயருற்று தன் தந்தையிடம் இதைத் தெரிவித்தாள். கசன் இப்போது சுக்ராச்சாரியார் வயிற்றுக்குள் இருப்பதால் மந்திரம் சொல்லி அவனை உயிர்ப்பித்துவிடலாம். ஆனால் கசன் வெளியே வரும்போது சுக்ராச்சாரியார் வயிறு பிளந்து இறப்பார். இதற்கு என்ன செய்வதென்று சுக்ராச்சாரியார் யோசித்தார்

          சுக்ராச்சாரியார் தன் வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசிப்பதாகவும், பின்னர் அந்த மந்திரத்தின் மூலம் அவனை உயிர்ப்பிப்பதாகவும், வெளியே வந்தபின் அவன் தன்னை உயிர்ப்பிக்கவேண்டுமென்றும் கூறி மந்திரத்தைச் சொல்லி அவனை உயிர்ப்பித்தார். அவன் வெளியே வந்தபின் சுக்ராச்சாரியாரை உயிர்ப்பித்தான்.

              கசன் உயிருடன் வந்ததனால் மகிழ்ச்சியடைந்த தேவயானி அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டாள். ஆனால் கசன், "சுக்ராச்சாரியார் வயிற்றிலிருந்து வெளிப்பட்டதால் நான் உனக்கு சகோதரனாகிறேன்'' என்று கூறி, அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டான். இதனால் கோபமடைந்த தேவயானி, "நீ கற்ற மந்திரம் உனக்கு பலிக்காது'' என்று சாபமிட்டாள். ""எனக்கு பலிக்காவிட்டாலும், எம்முடையவருக்கு பலிக்கும்'' என்று சொல்லி தேவலோகம் சேர்ந்தான். அங்கு தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறி, தான் கற்றுவந்த மந்திரத்தை அவருக்கு உபதேசித்தான். அதன் பிறகு நடந்த தேவாசுர யுத்தத்தில் இருவர் சேனைகளும் குறைவடையாததால் யுத்தம் தீவிரமாக நடந்தது.

        யுத்தம் முடிவடைய வேண்டுமெனில் தாங்கள் அசுரர்களைவிட வலிமைபெற வேண்டும் என்பதை உணர்ந்த தேவர்கள், "சாவா மூவா நலம்" பெற வழிதேடினர். அவர்கள் தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் "நரை, திரை, மூப்பு, மரணம் பற்றிய ரகசியம் அறிந்தவர் அகத்தியர் ஒருவரே. அவரிடம் சென்று கேளுங்கள்'' என்று கூறினார். அனைவரும் அகத்தியரிடம் சென்றனர். அகத்தியர், "கயிலை சென்று சிவபெருமானை வழிபடுங்கள். அவர் திருப்பார்வை பட்டாலே நரை, திரை, மூப்பு உங்களை அணுகாது'' என்று கூறினார்.

ஆனால் தேவர்கள் அகத்தியர் கூறியபடி கயிலை செல்லாமல், பிரம்மதேவனிடம் சென்றனர். பிரம்மா அவர்களை விஷ்ணு பகவானிடம் அழைத்துச் சென்றார். தேவர்கள் வேண்டுதலைக் கேட்ட விஷ்ணு பகவான், "பாற்கடலைக் கடைந்து அதில் வெளிப்படும் அமிர்தத்தை உண்டால் மரணமிலா வாழ்வு கிட்டும். அசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடையுங்கள்'' என்று கூறினார்.

          அன்று தசமி திதி. விஷ்ணு பகவான் கூறியபடி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினர். வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் மேருமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. மத்தாக இருந்த மேருமலை கடலில் அமிழ்ந்துவிடாமலிருக்க விஷ்ணு பகவான் ஆமையாக மாறி தன் முதுகில் தாங்கிக்கொண்டார். கடைந்தபோது கயிறாக இருந்த வாசுகிப்பாம்பு கக்கிய விஷமும், ஆழ்கடலிலிருக்கும் ஆலம் என்ற விஷமும் வெளிவந்தன. அந்த ஆலகால விஷம் அனைவரையும் துரத்தியது. அனைவரும் அஞ்சியோடினர்

       விஷ்ணு பகவான் நஞ்சுடன் போரிட்டார். அவரால் நஞ்சை எதிர்க்க முடியவில்லை. நஞ்சுடன் போரிட்டதால் அவர் மேனி நீலநிறமாகியது. அப்போதுதான் தேவர்கள் தாங்கள் அகத்தியர் கூறியபடி கயிலை சென்று சிவபெருமானை வணங்காமல் வந்ததை நினைவு கூர்ந்தனர். அனைவரும் கயிலை நோக்கி ஓடினர். தேவர்கள் சிவபெருமானை வலமாக வந்தபோது ஆலகாலம் எதிர்த் திசையில் துரத்தியது. அவர்கள் சென்ற வழியே திரும்பி இடமாக வந்தபோது அங்கும் துரத்தியது. இப்படி இடமும் வலமுமாக நஞ்சு துரத்த, தேவர்கள் சிவபெருமான் இருப்பிடத்தை அடைந்தனர்.

நந்தியின் அனுமதி பெற்று தேவர்கள் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். சிவபெருமான் நந்தியிடமும் சுந்தரரிடமும் அந்த விஷத்தைக் கொண்டுவரும்படி கூறி, பிரபஞ்சத்தையும் தேவர்களையும் காக்க அவ்விஷத்தை தானே உண்டார். விஷம் அவரது வயிற்றுக்குள் சென்றாலோ, வெளியே உமிழப்பட்டாலோ பலகோடி அண்டங்கள் அழிந்துவிடும் என்பதால், தேவி விஷத்தை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினாள். சிவபெருமான் நஞ்சை உண்டது ஏகாதசி திதி தினம்.

            சிவபெருமான் தேவர்களிடம் மறுபடியும் பாற்கடலைக் கடையுமாறும், அதில் வரும் பொருட்களைப் பெற்றுகொள்ளும்படியும் கூறினார். தேவர்களும் அசுரர்களும் மீண்டும் கடையத் தொடங்கினர். ஏகாதசியன்று இரவு முழுவதும் கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், திருமகள் என பலவும் வெளிவந்தன. துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. திருமால் மோகினி வடிவெடுத்து, அசுரர்களை ஏமாற்றிவிட்டு தேவர்களுக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார்.

        அமிர்தம் கிடைக்காததால் அசுரர்கள் கோபம் கொண்டு தேவர்களுடன் போரிட்டனர். ஆனால் அமிர்தம் உண்டு வலிமைபெற்ற தேவர்களுடன் போரிட முடியாமல் அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். தேவர்கள் மகிழ்ச்சியடைந்து, தங்களுக்கு அருள்பாலித்த இறைவனை மறந்து ஆடிப்பாடி குதூகலித்தனர். மறுநாள் திரயோதசி திதியன்று நந்திதேவர் அருளால் தேவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, கயிலை சென்று சிவபெருமானை வழிபட்டனர்.

       தேவர்களின் வேண்டுதலையேற்று சிவபெருமான் அன்று மாலை மூன்றேமுக்கால் நாழிகை நேரம் உமாதேவி, தேவர்கள், முனிவர்கள் காண நடனமாடினார். அந்த வேளையே பிரதோஷ காலம் எனப்பட்டது. சிவபெருமானின் இந்த நடனத்தைக் கண்டு நந்திதேவர் ஆனந்த மிகுதியால் உடல் பருத்து, லேசாக சித்தம் கலங்கிய நிலையை அடைந்தார்

          பார்வதி தேவி நந்திக்கு சிவப்பரிசி, வெல்லம் கலந்து மருந்தாகக் கொடுத்து, இறைவனை வழிபட்டு தெளிவடையச் செய்தாள். சித்தம் தெளிந்து மகிழ்ந்த நந்தி, அதற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதோஷ காலத்தில் தன் தலையில் இரண்டு கொம்புகளுக்கும் இடையே இறைவனையும் இறைவியையும் வைத்து, கால்களை மாற்றி வைத்து, "ஆயிரங்கால் மாற்று நடனம்" என்ற நடனத்தை நிகழ்த்தினார். இதன் காரணமாகவே பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே இறைவனையும் இறைவியையும் தரிசிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
 

No comments:

Post a Comment