சுஜாதா
சுஜாதா... இன்றைய இணைய உலகில், யார் இன்மையை நீங்கள் உணர்கிறீர்கள்
என்று கேட்டால் சட்டென்று எல்லோர் மனதிலும் தோன்றும் பெயர்!
நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ் பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம்
கொடுக்கிறார். இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார்.
அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்று முயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக்
கோத்துவிளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். அப்படித்தான்
எழுத்துத் துறைக்கு வந்தேன்” என்கிறார் சுஜாதா.
கி.ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட சுஜாதா, தன் மனைவியின் பெயரையே புனைபெயராக ஆக்கிக் கொண்டார். யாரும் பயன்படுத்தாத
ஒரு புதிய மொழிநடையையும் கருப்பொருள்கள் கொண்டு எழுதுவதையும் அவர் உருவாக்கினார்.
அறிவியலுக்கும், இலக்கியத்துக்கும் புதிய பங்களிப்பைத்
தந்தார். அவருடைய எழுத்து, தமிழுக்கு ஒரு பாய்ச்சல் என்றால் மிகையாகாது
1953-இல் முதல் சிறுகதை. அதற்குப் பிறகு நிற்காமல் ஓடிய குதிரை இது. எழுதாத துறைகள் இல்லை எனலாம். திருக்குறள், புறநாநூறு என்று இலக்கியங்கள் பற்றி எழுதியிருக்கிறார். கிட்னி ட்ரான்ஸ்ப்ளண்டேஷன் பற்றி நாவல் எழுதுகிறார். அதைப் படமாக்கும் விவாதத்தில், “டிஷ்யூ ரிஜக்ஷன்னா என்னன்னா..” என்று விஞ்ஞானம் பேசுகிறார். பீத்தோவனின் சிம்பனி பற்றி எழுதுகிறார். உலகப்படங்கள் பற்றி விவாதிக்கிறார். “இதெல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள்ல
வந்ததுதானே.. உதாரணத்துக்கு..”
என்று தாவுகிறார். லிமரிக் (கவிதை வடிவம்) சொல்லிக் கொடுக்கிறார்.. பவுல்ஸ், லீகரி, வுட் ஹவுஸ், ஓ,ஹென்றி என்று ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி எழுதிப் பரவலாக்குகிறார். எம்.டி. ராமநாதனின் சங்கீதம், ஓஸிபிஸாவின் ஜாஸ் இசை என்று கலந்து கட்டி அடிக்கிறார். இவர் ஒரு கவிதையைப் பாராட்டினால், அவர்மீது புகழ்வெளிச்சம் விழுந்து, அவரும் அதற்கு முயன்று உழைத்து முன்னேறுகிறார். இப்படி கண்டுபிடித்து
ஒளிர்ந்தவர்கள்தான் நா. முத்துக்குமார், மனுஷ்யபுத்திரன் போன்றோர்.
ஒரு பத்திரிக்கையின்
கடைசி பக்கத்தை 35 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி நிரப்பியவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் கணையாழி இதழில் தொடர்ந்து ரசனையோடு எழுதிவந்தார்
சுஜாதா. படித்த நல்ல கவிதைகளை எந்த வகையிலாவது தன் மூலமாக அறிமுகம் செய்து விடுவார்..
நாற்பது வயதுக்கு மேல்தான் சினிமாவுக்குள் எட்டிப் பார்க்கிறார். ஆனாலும் திரைமொழியைத்
தன் வசமாக்கி சிறப்புற செயல்பட்டார்.
வெறும் வார்த்தை விளையாட்டுகள் அல்லாமல், கணினி அச்சுமுறையில் பத்திரிகைகள் வெளியாகிக் கொண்டிருந்த காலத்திலேயே பல புதுமைகளைச் செய்தவர். ஒரு கதையில் கதாபாத்திரம் மாடிப்படியில்
இருந்து கீழே இறங்குவதை..
இ
ற
ங்
கி
னா
ன் - என்று எழுதினார். இன்னொரு கதை, முடிவில் ‘இப்போது இந்தக் கதையின் ஆரம்ப வரிகளைப் படியுங்கள்’ என்றிருக்கும். முடிக்கிற இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கிற இடத்திற்கு வந்து.. தொடர்ந்து இப்படி முடிவிலியாய்
இருக்கும்.
இவருக்கும் வாசகர்களுமான
பிணைப்பு அலாதியானது. காகிதச் சங்கிலிகள் நாவலைப் படித்துவிட்டு, சிறுநீரக அறுவைசிகிச்சை
பற்றி, தொலைபேசியில்
இவரிடம் அரை மணிநேரம் பேசி தெளிவு பெறுகிறார் ஒரு வாசகர். மிடில் ஈஸ்ட் விமானநிலையத்தில்
இவரை அடையாளம் கண்டுகொண்ட வாசகர் ஒருவர், ஓடிப்போய் அங்கேயே ஒரு ரேடியோவும், டேப் ரெகார்டரும்
இணைந்த ‘டூ-இன்- ஒன்’ வாங்கிப் பரிசாய்த் திணிக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையை மையமாக வைத்து எழுதிய ‘நகரம்’ சிறுகதையைப் படித்துவிட்டு அந்த மருத்துவமனையின் டீன், இவரிடம் கடிதம் எழுதி விசாரிக்கிறார்..
துப்பறியும் கதைகளில், 'கணேஷ் - வசந்த்' என்கிற இரண்டு கதாபாத்திரங்களைவைத்து கதை எழுதியிருப்பார். 'கணேஷ் - வசந்த்' கதை என்றாலே, அந்தக் காலத்தில் பிரபல வார பத்திரிகைகளின் விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டும். ‘வஸந்தைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். எங்கிருக்கிறான் அவன்?” என்று சுஜாதாவுக்கு வந்த தந்திகள் நிறைய.
கணேஷும், வசந்த்தும் சம்பந்தப்பட்ட ஒரு கதையில், இருவருக்கும் சண்டை வந்து பிரிந்துபோகும்படியான சூழ்நிலை உருவாகும். இதைப் படித்த அவர்களுடைய வாசகர்கள் துடித்துப்போனதுடன், சுஜாதாவுக்கு போன் செய்து முடிவை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர். 'அவர்கள் பிரியமாட்டார்கள்' என்று அவர் சொன்னபிறகே, அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. அவருடைய மற்றொரு கதையில், வசந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அப்போதும் இதேபோன்று பிரச்னை எழுந்தது.
கணேஷ் - வசந்த்தைப்போன்று
அறிவியல் கதைகளில் ஆத்மா - நித்யா என்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார். அந்தக் கதைகளில் செவ்வாய்க்கிரகத்தைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார். ஆனால், நம் பிரச்னைகளை அறிவியல் மூலமாக உணர்த்தியிருப்பார். திருப்பதியைப்
பற்றி ஒரு கதை எழுதியிருப்பார். அதில், வேற்றுக்கிரகவாசிகளிடம் திருப்பதியைச்
சுற்றிக்காட்டும் நபர், ஒரு கடலைக் காண்பித்து... 'இதுதான் திருப்பதி, இதைக் கும்பிட்டுக்கோங்க' என்று சொல்வார். காரணம், இயற்கை மற்றும் அறிவியலால் திருப்பதி கடலுக்குள் மூழ்கியதாகத் தன் கற்பனையைப் பதிவுசெய்திருப்பார். அவர் எழுதிய அறிவியல் கதைகளில், 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ' போன்றவை மிகவும் பிரபலமானவை. இவையிரண்டும்
'ஆனந்த விகடனி'ல் வெளியானவை. இதுதவிர, அறிவியல் கேள்வி - பதில்கள் பற்றி, 'ஏன், எதற்கு, எப்படி' என்கிற தலைப்பில், 'ஜூனியர் விகடனி'ல் ஒரு தொடர் எழுதினார். இதை வாசகர்கள் வெறிகொண்டு படித்தனர். 'அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படியான ஒருமுறையில் எழுதுகிறார்கள்' என புதுப்புது எழுத்தாளர்களை அவர் உருவாக்கினார்.
ஒருமுறை தொலைக்காட்சி
நேர்காணலின்போது, வாசகர்கள் அவரிடம் பலவாறு கேள்வி கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் மிகவும் பொறுமையாக விடையளித்த அவர், நிகழ்ச்சியின் முடிவில், 'இதுவரை நீங்க என்னைக் கிழிகிழினு கிழிச்சதுக்கு நன்றி' என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லிவிட்டுச் சென்றாராம்...
சின்னச் சின்ன வாக்கியங்களில் கதை எழுதுவது சுஜாதா பாணி. அந்தக்கால கதைகளில் சுதாகர் அங்கிருந்து
புறப்பட்டு வந்து சென்றான் என்று விலாவாரியாக
எழுதப்பட்டு வந்த சூழலில் ஒரே வார்த்தையில்
புறப்பட்டு சென்றான் என்று சுருக்கமாக எழுதி வாசக மனதில் விளங்க வைத்தவர்.
தனது வாசகர்கள் அறிவுஜீவிகளாக இருக்கவேண்டும் என்பதற்காக கதைகளை மெனக்கெட்டு எழுதியவர். உதாரணத்திற்கு நாயகன் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார் எனில் அதனை இவ்வாறு எழுதுவார்: 'ரோத்மன்ஸ் கைகளில் சுருள் விட்டது'
ரோத்மன்ஸ் என்பது சிகரெட் பிராண்டின் பெயர்.
''தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டுகொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது'' - இந்தச் சுட்டெரிக்கும்
வரிகளுக்குச் சொந்தக்காரர்,
எழுத்தாளர் சுஜாதா.
'நான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலவில்லை. அவற்றை, ஒழுங்காக விவரிப்பதில்தான்... சொல்வதில்தான்
அக்கறை காட்டியுள்ளேன்'
என்று சொல்லும் சுஜாதா, ''ஒரு வாசகன், தனக்குப் பிடித்தமான எழுத்தாளனை... நண்பனைப்போலத் தேர்ந்தெடுக்கிறான். காரணம், அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது'' என்று அவர் சொன்னதால்தான்... இறந்த பிறகும் இன்றைய இளம் தலைமுறையினரின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றில் சுஜாதாவும், கமல்ஹாசனும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, வந்த இளைஞரைப் பார்த்து விட்டு, ‘கமல் உங்க ஆட்டோகிராஃபுக்காக வெய்ட் பண்றார்” என்றிருக்கிறார் சுஜாதா. அந்த இளைஞர், ‘இல்லை சார். எனக்கு உங்க ஆட்டோகிராப்தான்
வேணும்” என்கிறார் சுஜாதாவிடம்.
இவர் எழுத்துக்கு
சீரியஸான எதிர்ப்புகளும்
நிறைய வந்ததுண்டு. இவரது நாவல் ஒன்றைப் படித்துவிட்டுத்தான் தன் தங்கை நக்ஸல் இயக்கத்தில்
சேர்ந்தார் என்று அந்தப் பெண்ணின் அண்ணன் பெங்களூரு சென்று மிரட்டினாராம்.
ஒரு நாவலில் இவரது கதாபாத்திரமான வஸந்த் குண்டடிபட, ‘அவனைக் காப்பாற்று... நீ வேண்டுமானால் போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொள்’ என்று ஒரு பெண் தந்தி அனுப்பினார். தொடர்கதையில், பிடிக்காத அத்தியாயம் வந்தால், இவருடைய கதையை, சுக்குநூறாகக் கிழித்துத் தபாலில் அனுப்புவார்கள். “வாங்கிப் படித்த அவருக்கு, நிச்சயம் கிழித்து அனுப்பவும் உரிமை உண்டு” என்பார் இவர். ஒருநாவலை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வர, நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி எழுதும்போது இப்படிச் சொல்கிறார்: "எனக்கு இடது கையில் எழுதிப் பழக்கம் இல்லை என்பதால் நிறுத்திக்கொண்டேன்”
இன்றைக்கு எழுதும் இளைய தலைமுறையிடம் எதாவது ஒரு வரியில், சிந்தனையில்,
உத்தியில் இருந்துகொண்டுதான் இருக்கிறார் சுஜாதா. சிறுகதை எழுத நிறைய உத்திகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்தார் சுஜாதா.
‘முதல் வரியிலேயே வாசகனை கவருங்கள். ‘தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள்.
அடுத்தவரியில் ‘தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லை’ என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு...’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.’
‘எதிர்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.’
இவருக்கு எழுத்துதான்
எல்லாம். யாரிடமாவது ஏதாவது பேசும்போது உருவாகிற சிறு பொறியை மூளைக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டே இருந்து, சரியான தருணத்தில் கதையாக்குவார். பலராலும் பாராட்டப்பட்ட,
‘கரையெல்லாம் செண்பகப்பூ’ அப்படி உருவானதுதான். ‘ஒரு கிராமத்தில் நடைபெறும் மிஸ்ட்ரி ஒண்ணு எழுதுங்களேன்’ என்று பிரபலம் ஒருவர் சொல்ல, அதை மனதில் இருத்திக் கொண்டு, தொடர்கதையாக எழுதியதுதான்
அந்த நாவல். அப்படி சுஜாதாவைக் கேட்டுக் கொண்ட பிரபலம்.. இளையராஜா!
புனித ஜோசப் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார்.
பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து
ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக்
கழகம் அவருக்கு 1993-ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுக் கருவியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்சில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது தரப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
"அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே
வாழ்ந்தவர்; உணர்ச்சிகளைப்
பெரும்பாலும் வெளியே காட்டாதவர்; அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை... ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார்; விருப்புவெறுப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ளமாட்டார்; எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார்.
கதை பற்றிய விஷயமும் அதுபோல்தான். என்ன எழுதுகிறார், எதைப் படமாக எடுக்கிறார்கள் என எதையும் பகிர்ந்துகொள்ளமாட்டார். என்றுமே அவர், எழுத்துப் பணியில் சலித்துக்கொண்டதில்லை. எழுத ஆரம்பித்துவிட்டால்... அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டியதில்லை. எழுதுவது , படிப்பது... இவை இருந்தால் போதும். 'சாகும்வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார். அதுபோலத்தான்
நடந்தது'' என்று தன் கணவரைப் பற்றி, 'விகட'னின் நேர்காணலின்போது
ஒருமுறை சொல்லியிருந்தார்
அவர் மனைவி சுஜாதா -
No comments:
Post a Comment