ரயில்வே ஸ்டேஷன் போர்டில் இருக்கும் MSL என்ற குறியீடு எதை குறிக்கிறது?
ரயில் பயணங்களுக்காக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்லும்போது
நிறைய விஷயங்கள் நம் கண்களில் சிக்கும். அப்படி நாம் கவனிக்கும் முக்கியமான விஷயங்களில்
ஒன்று ரயில் நிலையத்தின் பெயர் பலகை. அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிற பெயர்
பலகை வைக்கப்பட்டிருக்கும். இதில் கருப்பு நிறத்தில் சம்பந்தப்பட்ட ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
அதில் 'எம்எஸ்எல்' (MSL) என குறிப்பிடப்பட்டிருக்கும். Mean Sea
Level (மீன் சீ லெவல்) என்பதன் சுருக்கமே MSL என குறிப்பிடப்படுகிறது. கடல் மட்டத்தில்
இருந்து சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது? என்பதை குறிப்பிடுவதற்காக
MSL என்ற சுருக்கத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது.
சரி, கடல் மட்டத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில்
அமைந்துள்ளது? என்பதை எதற்காக குறிப்பிடுகின்றனர்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
இந்திய ரயில்வே மூலமாக இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும்
மனதில் வைத்துதான், MSL குறிப்பிடப்படுகிறது.
MSL குறிப்பிடப்படுவதற்கும், பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம்? என்ற
சந்தேகம் எழுவது இயல்புதான். என்ன உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம்? என்பதை லோகோ
பைலட்கள் (ரயில் ஓட்டுனர்கள்) மற்றும் கார்டுகள் (Guards) தெரிந்து கொள்வதற்கு MSL
உதவி செய்யும். உயரம் குறித்த எச்சரிக்கையை MSL நேரடியாக லோகோ பைலட்களுக்கு தெரிவிப்பதால்,
ரயில் பயணம் பாதுகாப்பாக அமையும்.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், எவ்வளவு உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோமோ, அதற்கேற்ப ரயிலின் வேகத்தை லோகோ பைலட்டால் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ரயிலில் பயணம் செய்யும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். ரயில்வே ஸ்டேஷன்களில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பலகைகளில், MSL ஏன் குறிப்பிடப்படுகிறது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
No comments:
Post a Comment