ஏ.எல்.ராகவன்.
திரை இசைப் பாடல்களை ஒரு காலத்தில் வெண்கலக் குரலோன்கள், அதிரடி சக்கரவர்த்திகள், வன்குரலாளர்கள் கட்டியாண்டபோது, பாடலை அப்படியே கைத்தாங்கலாகக் கவிஞரிடமிருந்தும், இசை அமைப்பாளரிடமிருந்தும் பக்குவமாக ஒரு பட்டுத்துணியில் வாங்கி, மயிலிறகால் வருடிக் கொடுத்து, வலிக்காத பூ முத்தங்களாகக் கொடுத்து மென்மையாகக் காற்றில் பரவ விட்டவராகவும், இளநகை பூத்த முகத்தினராகவும் தனி முத்திரை பதித்த ஏ.எல்.ராகவன்.
ஒரு பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதுபோல், அல்லது சாஃப்டி ஐஸ்க்ரீம் ருசிப்பதுபோல் மட்டுமல்ல, குழந்தைகள் மாதிரி குடை ராட்டினத்தில் சுற்றுவது போல, சடுகுடு ஆடுவது போல, ஏன் சுற்றி வளைப்பானேன், எல்.ஆர்.ஈஸ்வரி, 'குபுகுபு நான் எஞ்சின்' என்று குரல் கொடுத்தால் பதிலுக்கு 'டக டக டக டக நான் வண்டி'
(மோட்டார் சுந்தரம் பிள்ளை) என பதில் கொடுப்பது போல தனித்துவமாக
ஒலித்த குரல் ராகவனுடையது.
நகைச்சுவைச் சக்கரவர்த்திக்கு கச்சிதம் காட்டிய குரல்
வாலிபத் துள்ளல், எள்ளல், போட்டிக்கு இழுத்தல் மட்டுமல்ல கனிவை, உருக்கத்தை, மன நெகிழ்ச்சியை அப்படியே கேட்போரின் உள்ளத்திற்கு பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் குரலாக அமைந்திருந்தது ஏ.எல்.ராகவன் குரல். பெரும்பாலும் குறிப்பிட்ட ஜவுளிக் கடை, ஓட்டல், தியேட்டர் (இப்போது மால்) என்று தேர்வு செய்வது போல, பெரிய பிரபலப் பாடகர்கள் குரல்களையே ஓயாது கேட்டு வந்திருப்போம். ஆனாலும் இந்தத் தொடர்ச்சியான பாடல்களுக்கு இடையே அந்நாட்களில் வானொலி திரைப்பாடல்கள் நிகழ்ச்சியில் இவர் பெயர் சொல்லப்படும்போது எந்த வகை ரசிகரையும் ஈர்ப்பதான குரல் ராகவனுடையது.
நாகேஷுக்கு என்று ஆர்டர் கொடுத்துக் குரல் நாண்கள் அமைந்ததுபோல் இருந்தது அவர் குரல். 'கொத்தவரங்கா
போல ஒடம்பு அலேக்' என்று சொன்னால், 'வாழைத்தண்டு
போல ஒடம்பு அலேக்' என்று பதில் கொடுத்தவர் அவர். டி.எம்.எஸ் பாடலில் வேகத்துடிப்பான
'என்ன வேகம் சொல்லு பாமா' பாடலிலும் (குழந்தையும்
தெய்வமும்) சண்டே பிக்ச்சர், மண்டே பீச், டியூஸ் டே சர்க்கஸ், வென்ஸ் டே ட்ராமா...என்று காதலுக்கான கால அட்டவணையை அனாயசமாக எடுத்துக் கொடுப்பார் ராகவன்...
'அன்னம் போல வாக்கிங் அல்வா போல டாக்கிங், போதும் இந்த காலேஜ் எப்போ உங்க மேரேஜ்' என்று கலாய்க்கும்
குரல் அடாடா...அடாடா! பட்டணத்தில்
பூதம் படத்தில்,
'உலகத்தில் சிறந்தது எது' என்ற பாடலில் 'அதன் ஆயுள் கெட்டி, மெல்லப் பார்க்கும் எட்டி, அது போடும் குட்டி...'
என்று வட்டியைப் பற்றி அவர் பாடும் அழகே அருமையாக இருக்கும்.
மிக தனித்துவக் குரல் உள்ளோர்க்கு அமையும் பாடல்களும் தனித்துவமானதாகவே அமையும். 'ஒன்ஸ் எ பப்பா மெட் எ மம்மா'
, நீர் மேல் நடக்கலாம் (காஞ்சித்தலைவன்)
மாதிரி ராகவன் அந்தக் காலத்திய துள்ளாட்டப்
பாடல்கள் சில பாடியது மூத்த தலைமுறையினர்
நினைவு அடுக்குகளில்
ஒரு மடிப்பில் புதைந்திருக்கவே
செய்யும்.
'அங்க முத்து தங்க முத்து தண்ணிக்குப்
போனாளாம், தண்ணிக் குடத்தக் கீழ வச்சிட்டு எங்கிட்ட வந்தாளாம்' என்னும் (தங்கைக்காக) பாய்லா சாங், ராகவன் கலக்கி இருப்பார்.
'சபதம்' படத்தின் முக்கியமான பாடல், 'ஆட்டத்தை ஆடு, புலியுடன் ஆடு' என்பது. அதில் ரவிச்சந்திரன்
ஒரு பக்கம் பாட, நாகேஷ் இன்னொரு பக்கம் சேர்ந்து கொண்டு,
'தகப்பன் புலியோ தள்ளாடுது அந்தப் புலிக்குப் பிறந்த வெள்ளாடிது' என்று எடுக்கும் இடத்தில் ஏ.எல்.ராகவன் குரல் அத்தனை பாந்தமாகப் பொருந்தி இருக்கும்; காட்சியே களைகட்டும்.
'நவாப் நாற்காலி'யில் இடம் பெற்ற சப்பாத்தி சப்பாத்தி தான், ரொட்டி ரொட்டி தான், 'வியட்நாம் வீடு' படத்தின் மை லேடி கட் பாடி நீயே எந்தன் ஜோடி, ஆண்டவன் தொடங்கி (காசே தானே கடவுளடா),
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
(திருவருட்செல்வர்
), கொஞ்சும் கிளி குருவி மைனாவே (கந்தன் கருணை),
போடச் சொன்னால் போட்டுக்கிறேன்
(பூவா தலையா),
நவகிரகம் நீங்க (நவகிரகம்),
நாலு காலு சார் நடுவுல ஒரு வாலு சார் (சொர்க்கம்),
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
(அதே கண்கள்)....
உள்பட குறும்புப் பாடல்கள், நையாண்டிப் பாடல்கள் அவருக்கு வாய்த்தன. ஏப்ரல் முதல் தேதி முன்பெல்லாம்
தவறாமல் ஒலிபரப்பும்
ஏ.....எஃப்...ஏப்ரல் ஃபூல் (பனித்திரை) பாடலிலும் அவரது குரல் சேர்ந்து ஒலிக்கும்.
மூன்றாம் பிறையில், முன்னே ஒரு காலத்துல என்று பாட்டில் கதை சொல்லக் கேட்டிருப்போம். பல பத்தாண்டுகளுக்குமுன் வந்த 'அன்னை எங்கே' படத்தில் ஒலித்த, 'பாப்பா பாப்பா கதை கேளு காக்கா நரியின் கதை கேளு, தாத்தா பாட்டி சொன்ன கதை, அம்மா அப்பா கேட்ட கதை' என்று ஏ.எல். ராகவன் சொன்ன கதை மிகவும் பிரசித்தம். கதையின் போக்குக்கேற்ப
குரலில் ஏற்ற இறக்கங்கள், பாவங்கள் எல்லாம் மிகவும் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பார்
ராகவன்.
அருமையான காதல் பாடல்களும் உள்ளத்தைத் தொடும் குரலில் பாடி இருக்கிறார்
ராகவன். கதை கதையாம் காரணமாம், காரணத்தால் தோரணமாம் (தலை கொடுத்தான் தம்பி),
கண்ணாலே பேசும் நம் காதலே (அழகர் மலை கள்வன்),
பக்கத்திலே கன்னிப்பெண்
இருக்கு (படிக்காத மேதை) என்று பழைய பாடல்கள் சில உண்டு.
காதலின் கொஞ்சலுக்கு அன்று ஊமைப் பெண்ணல்லோ ...(பார்த்தால் பசி தீரும்).
சாவித்திரி, ஜெமினி நடிப்பில் ரசிகர்களைக்
கொண்டாட வைத்த பாடல். ராகவன் காதலின் மெல்லுணர்வை,
மேகப் பொதிகளைக் காற்றில் லேசாக ஊதி விடுவதைப்போல்
பறக்க வைப்பார். இதற்கெல்லாம்
பல ஆண்டுகளுக்குப்
பிறகு இளையராஜா இசையில் மழை மேகம் படத்தில் எஸ்.ஜானகியோடு பாடிய 'ஒரு கோடி சுகம் வந்தது' பாடலிலும் அவரது குழைவின் சுகம் ஒலிக்கும்.
சில படங்களைத் தயாரிக்கவும் செய்த ஏ.எல்.ராகவன் தமது முக்கியத் தயாரிப்பான 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்தில் ஐந்து வெவ்வேறு இசை அமைப்பாளர்களது இசையில் உருவான பாடல்களைப் பயன்படுத்தினார்; எல்லாப் பாடல்களுமே ரசிகர்களது வரவேற்பைப் பெற்றன. ஜி.கே. வெங்கடேஷ் இசையில் உருவான 'நான் பார்த்த ரதிதேவி எங்கே' எனும் பாடலை அவரே பாடினார்.
வேடிக்கையான தாலாட்டு!
ஏ.எல்.ராகவனின் புகழ் பெற்ற இரண்டு பாடல்களில் ஒன்று வேடிக்கை கலந்த தாலாட்டுப் பாட்டு. மற்றொன்று காதல் தோல்வியில் தோய்ந்த சோக கீதம். இரண்டுமே கண்ணதாசன் எழுதியவை. இருவர் உள்ளத்தில் எம்.ஆர்.ராதாவுக்காக, எல்.ஆர்.ஈஸ்வரியோடு (அவர் அதிகமும் இணைந்து பாடிய குரல்) பாடிய 'புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை' பாடல் காதல் இருவர் கருத்தொருமித்து நடத்தும் வெள்ளந்தியான மணவாழ்க்கையின் கொண்டாட்டத்தையும், அதிக மக்கள் பேற்றினால் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் தாலாட்டுப் பாடலாக இசைக்கும். போட்டி போட்டுக் கொண்டு இரு பாடகர்களும் அத்தனை ரசமாகப் பாடி இருப்பார்கள். 'ஆறு பிறந்தது போதும் என்று நான் ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன், காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன், பாழும் ஆசையினால் திரும்பி வந்தேன்' என்ற இடம் அத்தனை எழிலாகப் பாடுவார் ராகவன்.
'போகாது அய்யா போகாது' என்று ஈஸ்வரி அங்கிருந்து
தொடுத்துக் கொண்டு போகும் விதம் இன்னும் சிறப்பாக்கும்.
நெஞ்சில் ஓர் ஆலயத்தின் அந்தப் பாடல் பல்லவியை, திமுகவை விட்டு காங்கிரஸ் இயக்கத்திற்கு இடம் பெயர்ந்த கவிஞரைப் பார்த்து அறிஞர் அண்ணா சொன்ன வார்த்தைகள் என்று அறியப்படும் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்பதாகும். இழந்த காதலை மறக்க மாட்டாமல், அதே வேளையில் காதலி வாழ்க்கையாவது துலங்கட்டும் என்ற விருப்பத்தையும் விட்டு விடாமல் பரிதவிக்கும் ஓர் இதயத்தின் குரல் அது. வருவாய் என நான் தனிமையில் நின்றேன், வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய் என்ற இடத்தில் தெறிக்கும் அதிர்ச்சியும், துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய் என்ற இடத்தில் பொறுப்புணர்வும், தூயவளே நீ வாழ்க எனுமிடத்தில் பெருந்தன்மையும் பொங்கும் குரல் அது. அம்மாதிரியான சூழலில் தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொள்ளப் போராடும் மனிதனின் முயற்சிகளில் ஒன்றாகத் துடிக்கும் அந்த உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தினார் ஏ.எல்.ராகவன். எண்ணற்ற இளைஞர்களுக்கு அக்காலத்தில் ஒருவேளை ஒரு சுமைதாங்கிக் கல்லாக இந்தப் பாடல் இருந்திருக்கக்கூடும்.
இன்று அவர் இல்லையென்றாலும் என்ன, உயிரோட்டமான அவரது பாடல்களைக் கேட்பவர் எங்கிருந்தாலும் அங்கே எல்லாம் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஏ. எல்.ராகவன்.
No comments:
Post a Comment