ரயில் நிலையங்களில்
அல்லது யார்டுகளில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு இருக்கும் டீசல் ரயில் எஞ்சின்கள் அணைக்கப்படாமல்
தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதை பலர் பார்த்திருக்கக்கூடும். இவ்வாறு ஓட விடுவதால்,
அதிக அளவில் எரிபொருள் இழப்பும், காற்று மாசு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைகிறது.
எனினும், அவை தொடர்ந்து ஐட்லிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பலருக்கும் புரியாத
புதிராகவே இருக்கிறது.
டீசல் ரயில் எஞ்சின்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு
இருந்தபோதிலும் அவை தொடர்ந்து ஓட விடுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. டீசல் ரயில்
எஞ்சினை அணைத்து விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்வதற்கு பல்வேறு நடைமுறைகளை ஓட்டுனர்கள்
பின்பற்ற வேண்டி இருக்கிறது.
பெட்ரோல் எஞ்சின்கள் ஸ்பார்க் ப்ளக் மூலமாக வெளிப்புற
இக்னிஷனை பெற்றிருப்பது போல் டீசல் ரயில் எஞ்சின்களில் வெளிப்புற எரியூட்டு அமைப்பு
இல்லை. மேலும், 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத டீசல் ரயில் எஞ்சின்களை ஸ்டார்ட் செய்யும்போது
தேவைப்படும் அதிகப்படியான வெப்பநிலையை பெறுவதற்கு திணறும். மேலும், குளிர்ச்சியான சமயங்களில் டீசல் ரயில் எஞ்சினை
ஸ்டார்ட் செய்வதில் பிரச்னைகள் எழும் வாய்ப்பும் உண்டு. எனவே, ஸ்டார்ட் செய்யும்போது
ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக, டீசல் ரயில் எஞ்சினை தொடர்ந்து ஓட விட்டு
விடுகின்றனர்.
டீசல் ரயில் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக ஓட்டுனர் அட்டவணை நடைமுறைகளின்படி, ஒவ்வொரு பாகத்தையும் சோதித்து பின்னர் ஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கும். இதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் பிடிக்கும். டீசல் ரயில் எஞ்சின்கள் அணைக்கப்படாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், ரயிலின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான காற்றழுத்தம் தரும் கம்ப்ரஷருக்கான ஆற்றல் எஞ்சினிலிருந்து பெறுவதுதான்.
ஒருவேளை, ரயில் எஞ்சின் அணைக்கப்பட்டு மீண்டும் ஸ்டார்ட்
செய்தால், அனைத்து ரயில் பெட்டிகளின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான காற்றழுத்தத்தை
மீண்டும் ரயில் எஞ்சினிலிருந்து பெறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.
இந்த நிலையில், டீசல் ரயில் எஞ்சின்களால் ஏற்படும்
மாசு உமிழ்வு பிரச்னை மற்றும் எரிபொருள் இழப்பை தவிர்ப்பதற்காக இப்போது டீசல் ரயில்
எஞ்சின்களில் APU என்ற துணை மின் வழங்கும் சாதனம் பொருத்தப்படுகிறது.
டீசல் ரயில் எஞ்சின்களை நீண்ட நேரம் ஐட்லிங்கில் நிற்கும்போது
இந்த ஏபியூ சாதனம் மூலமாக, ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான ஆற்றலையும், பேட்டரி
சார்ஜ் ஆவதற்கான மின்சாரத்தையும் வழங்கும்.
இந்த சாதனம் பொருத்தப்படும்போது ரயில் எஞ்சின் அணைக்கப்பட்டு
ஜெனரேட்டர் போன்ற 25 எச்பி பவர் கொண்ட சிறிய எஞ்சின்கள் மூலமாக பேட்டரி மற்றும் பிரேக்
சிஸ்டத்திற்கு தேவையான ஆற்றல் வழங்கப்படும். இதன்மூலமாக, ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை
மிச்சப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயன்பாட்டில் இருக்கும் சில டீசல் ரயில் எஞ்சின்கள்
தவிர்த்து, புதிதாக தயாரிக்கப்படும் டீசல் ரயில் எஞ்சின்களிலும் இந்த ஏபியூ சாதனம்
பொருத்தப்படுகிறது. எனினும், வரும் காலத்தில் டீசல் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில்
முற்றிலும் மின்சார ரயில் எஞ்சின்களை பயன் படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சிகளில்
ஈடுபட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment