Thursday, October 15, 2020

மாம்பழம்

 

                           மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம், காரணம் சேலத்து மாம்பழத்தின் தனிச்சுவையும், தரமும்தான். “மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும்என்ற பழமொழி உண்டு. கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள்இதோ வெயில் தலை காட்டத் துவங்கிவிட்டது. மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மாம்பழங்கள் கிடைக்கின்றன என்றால் காரணம் இல்லாமல் இல்லை. மாம்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது. மனிதர்களின் உடலுக்கு மிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

            மாம்பழத்தில் பல வகை இருந்தாலும் சில குறிப்பிட்ட ரகங்கள் அலாதியான சுவை கொண்டவை. அல்ஃபோன்சா, மல்கோவா, சேலம் பெங்களூராஇமாம்பசந்த் நடுசாலை(பீதர்), சேலம் குதாதாத்.


அல்ஃபோன்சா (Alphonso Mango): இந்தியாவில் போர்ச்சுகீசியர்களால் ஒட்டு ரகங்களின் (Graftage) மூலம் உருவாக்கப்பட்டது . இந்த பழங்களின் சுவை அலாதியானது. இதன் பொன்மஞ்சள் நிறம் கூடுதல் சிறப்பு. நாவை வருடும் நறுமணத்துடன் உள்ள இந்த பழம் மிகவும் இனிப்பாகவும் மிருதுவாகவும் அதிக சதைப்பற்றுடன் நார் இல்லாமல் சாறு நிறைந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே, மாம்பழங்களின் ராஜா என்று செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது அல்ஃபோன்சா. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிக்க சிறந்த ரகம்.


மல்கோவா (Malgova or Malgoa): மாம்பழம் என்ற உடன் மல்கோவா என்ற பெயர்தான் நம் அனைவர்க்கும் சட்டென்று நினைவுக்கு வரும். தென்னிந்தியா முழுவதும் பரவலாக இந்த மாம்பழங்கள் கிடைத்தாலும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிடைக்கும் மல்கோவா மாம்பழங்கள் தனி சிறப்பு வாய்ந்தது. உயர்தரமுடைய இந்த மாம்பழ வகை தித்திப்பு சுவை கொண்டது, மேலும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படும் மல்கோவா மாம்பழங்கள் பழுக்க பழுக்க வாசனை ஊரெல்லாம் பரவும்.


இமாம்பசந்த் (Imampasanth, Himayat or Humayun Pasand): ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் இந்த மாம்பழம் பச்சை நிறத்தில் இருந்தாலும் அதிக தித்திப்பு கொண்டது. இதன் சுவை அல்ஃபோன்சாவுக்கு சவால்விடும் விதமாக இருப்பதனாலேயே அனைவராலும் விரும்பப்படுகிறது. இந்த மாம்பழம் பழமாக உண்ணவும், ஜூஸ் போடவும் ஏற்றது.


சேலம் பெங்களூரா (Salem Bangalora)  அலாதியான சுவை கொண்டது. இதற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா, என்ற வேறு பெயர்களும் உண்டு. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிடைக்கும் இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டதால் இதன் காயை கர்ப்பிணிகள் விரும்பி உண்பார்கள். சிறு குழந்தைகளுக்கு மாங்காய் ருசி பிடிக்கும். சேலம் பெங்களூரா பழங்கள் பெரியதாகவும், இளம் மஞ்சள் நிறத்துடன் சதைப்பற்றுக் கொண்டது. படிக்கும் போதே சுவைக்கத் தூண்டுகிறதா?


பீதர் (Peethar): நடுசாலை அல்லது பீதர் மாம்பழங்கள் நல்ல நறுமணத்துடனும், இனிப்பாகவும் இருக்கும். இதன் இளம் சிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும். இந்த மாம்பழம் சிறியதாக இருப்பதுடன் நார் அற்றதாகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் என்பது தனி சிறப்பு.


சேலம் குதாதத் (Khudhadhadh Mango): மாம்பழ சீசன் இறுதியில் கிடைக்கும் இந்த மாம்பழம் மிகவும் சுவையானது. ஜூன் மாதம் வரை இந்த மாம்பழம் கிடைக்கும். சேலம் குதாதாத் மாம்பழம் அளவில் பெரியதாக இருப்பதனால் இந்த மாம்பழம் ஜூஸ் போடுவதற்கு மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment