Friday, June 24, 2022

சீமந்தமாம் சீமந்தம்

 சீமந்தமாம் சீமந்தம்

சீமந்தமாம் சீமந்தம்
சீமந்தபுத்திரிக்கு சீமந்தம்
சீர்செனத்தி வருகுதிங்கே
சீரும்சிறப்புடன் வாழ்கவே!

நாள்கூடிய நாட்களை
நாணத்துடன் சொல்லிடவே
நாதனும் அள்ளிக்கொள்ள
நாடுகிறாள் அன்னையை

இரண்டாம் மாதத்திலே
இன்னதென தெரியலையே
இதயத்துடிப்பைக் கேட்டு
இனம்புரியா மகிழ்ச்சியாம்

மூன்றாம் மாதத்திலே
முன்னிரவு உறக்கமில்லாம
முட்டிவரும் குமட்டலாலே
மூச்சுமுட்டிக் கொள்ளுமே

நான்காம் மாதத்திலே
நாதன்முகம் நாடிடுமே
நாவின்ருசி தேடிடுமே
நாவலும் இனித்திடுமே

ஐந்தாம் மாதத்திலே
ஐந்துவகை சாதம்கட்டி
ஐத்தமக வரவாலே
ஐயமெல்லாம் தீர்ந்தனவே

ஆறாம் மாதத்திலே
ஆழ்ந்த உறக்கமில்லாம
ஆசையாய் தொந்திவருடி
ஆராட்டுப்பாடும் மனம்

ஏழாம் மாதத்திலே
ஏந்தெழில் உனைக்காண
ஏழுவகை சாதம்கட்டி
ஏறுபொழுதில் வந்தோமடி

வளர்பிறை வெண்ணிலவே
வயிரத்தை சுமப்பவளே
வலிமை நீயும்பெற்றிடவே
வளைகாப்பு விழாகோலமடி

எட்டாம் மாதத்திலே
எட்டியுதைக்கும் மகவை
எண்ணி மகிழ்ந்திடுவாய்
எழிலாடும் முகத்தினிலே

ஒன்பதாம் மாதத்திலே
ஒறுவினையும் கொள்ளும்
ஒற்கம்காணும் உடலும்
ஒத்திகை பார்க்குமகம்

பத்தாம் மாதத்திலே
பகலவனா பசுங்கதிரா
பரிசாகும் மழலையும்
பந்தமும் சொந்தமாகும்

No comments:

Post a Comment