Thursday, June 16, 2022

இடிப்பதை எங்கிருந்து தொடங்குவது..?

 இடிப்பதை எங்கிருந்து தொடங்குவது..?

 

       முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோவிலை இடித்துவிட்டு மசூதிகளைக் கட்டினார்கள். எனவே மசூதிகளை இடித்துவிட்டு இந்துக் கோவில் கட்டவேண்டும் என்பது தானே தற்போதைய நிலைபாடு. யார்,யார் எதை இடித்தார்கள் என்று ஒரு மீள் பார்வை.

         இடிப்பது என்று துவங்கினால்  கி.பி.5 ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்க வேண்டும். புத்தக் கோவில்கள் இடிக்கப்பட்டு, சமணக் கோவில்கள் கட்டப்பட்டது. சமணக் கோவில்கள் இடிக்கப்பட்டு இந்துக் கோவில்கள் கட்டப்பட்டது. இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டது. இடித்துவிட்டுக் கட்டவேண்டும் என்றால் புத்தக் கோவிலும்சமணக் கோவிலும் மட்டுமே இங்கு இருக்க முடியும். புத்த மதத்தினர் இடிக்கக் கிளம்பினால் நாம் ஏற்போமா?

          கி.பி 1600 வரை அயோத்தி புத்த,ஜைன யாத்திரைத் தலமாகத்தான் இருந்தது. புத்த,ஜைனக் கோவில்கள் இடிக்கப்பட்டு இந்துக் கோவில்கள் கட்டப்பட்டது. புத்த,ஜைனக் கோவில்களின் கற்களும், தூண்களுமே இந்துக் கோவில்கள் கட்ட பயன்படுத்தப்பட்டது.

         கி.பி 1800 ல் ராமநந்தி சாதுக்கள் என்ற பிரிவினர் நவாப்கள் உதவியோடு நூற்றுக்கணக்கான இந்துக் கோவிலைக் கட்டினார்கள். கோவில்கள் கட்ட நிலமும்,நிதியும் கொடுத்தவர் நவாப் ஜப்தர்சங்கின் திவான்தான். இதுபோன்ற உதாரணம் ஏராளம்.

 

         அதிகாரம் வெள்ளையர்கள் கைகளுக்கு மாறியபிறகு இந்து--முஸ்லிம் கலவரத்திற்கான  விதை தூவப்பட்டது. அது இன்று பெரிய மரமாக முளைத்து நிற்கிறது.  இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில், சிதம்பரம் கோவிலில் இருந்த கோவிந்தராஜன்  சிலையைக் கடலில் தூக்கிப்போட்டான். குலோத்துங்கச் சோழனின் வாரிசுகளை கண்டறிந்து கொன்று விடுவோமா?   ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தில்  கொள்ளையடித்த   தங்கத்தைக் கொண்டுவந்து சிதம்பரம் கோவிலின் சிற்றம்பல முகட்டை பொன்னால் வேய்ந்தான் என வீர காவியம் பேசுகிறது. கொங்கு மண்டலத்திற்கு என்ன பதில் சொல்வது?

                 விஜயாலய வம்சத்தின் ஆதிராஜேந்திர சோழன்தான் சைவர்கள் துணையோடு வைணவர்களை கொன்றான். அவனிடமிருந்து  உயிர் தப்பித்து ராமானுஜரும் அவருடைய சீடர்களும் மைசூருக்கு ஓடினார்கள். ஆதி ராஜேந்திர சோழனின் வாரிசுகளை என்ன செய்யலாம்.

                      நாகபட்டினத்தில் சூடாமணிவர்ம தேவரால் கட்டப்பட்ட புத்தவிஹாரில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தசிலையை அழித்து, அந்தப் பணத்தைக் கொண்டுதான் ஸ்ரீரங்கம் கோவில் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது. சூடாமணி வர்ம தேவருக்கு என்ன பதில் சொல்வது? புத்தக் கோவிலாக இருந்த மதுரை அழகர் கோவிலை, பூதத்தாழ்வார் காலத்தில்தான் வைணவக் கோவிலாக மாற்றினார்கள். மீண்டும் அதை புத்தக்கோவிலாக மாற்றிவிடலாமா?  தஞ்சை பிரகதீஷ்வரர் கோவிலும் புத்தக்கோவிலாக இருந்தது தான். கோவிலின் வெளிப் புறச்சுவரில் அதற்கு ஆதாரமே உள்ளது. அதில் புத்தத்துறவி அமர்ந்திருப்பது போலவும், தேவகனங்கள் அவரை வெளியேறச் சொல்லி லிங்கம் அமைப்பது போலவும் உள்ளது. மீண்டும் புத்தக்கோவிலாக மாற்றலாமா?

ஆதாரம்

           பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய சோழர்கள் என்ற நூலைப் படியுங்கள்.  11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹர்ஷதேவா என்ற காஷ்மீர் மன்னன் இந்துக் கோவில்களில் கொள்ளையடித்தான். இவன் கோவில் விக்கிரகங்களையும், செல்வத்தையும் கொள்ளையடிக்க  தனி அதிகாரியையே நியமித்திருந்தான். இவன் இந்து மன்னன் தான். 12 ம் நூற்றாண்டில் சுபதவர்மன் என்ற மன்னன் குஜராத்திலுள்ள ஏராளமான சமணக் கோவில்களை கொள்ளையடித்தான். இடித்தான். இந்து மன்னர்கள் என்று கூறப்படும் இவர்கள் சமணக் கோவிலை இடித்தார்கள். பழிவாங்கலாமா? சுங்கவம்ச ஆட்சியின் பிராமண மன்னன் புஷ்யமித்திரன். இவன் புத்தமதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கையை எடுத்தான். புத்தக் கோவிலை இடித்து, புத்த பிட்சுகளின் தலையை வெட்டிக் கொண்டு வருவோருக்கு சன்மானம் கொடுத்தான். உலகின் பெரிய மதமான புத்தமதம் பழிவாங்க முடிவு செய்தால் நாம் ஏற்போமா?  இந்துக் கோவிலை இந்து மன்னர்களே இடித்தார்கள். முஸ்லிம் மன்னர்கள் இடிக்கவில்லை என்று சொல்ல வில்லைமுஸ்லிம்கள் தான் இடித்தார்கள் என்று சொல்வது உள்நோக்கமுடையது

        கோவில்களை மன்னர்கள் ஏன் இடித்தார்கள்? ஒரு மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்த, அழிக்க எடுத்த நடவடிக்கையாக  மட்டுமே இதை பார்க்கக்கூடாது. ஒரு நாட்டைப் பிடித்து ஆளுகிறபோது, தங்கள் ஆட்சியின் மேலாண்மையை நிலைநிறுத்த கலாச்சார சின்னங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சொத்துக்கள் அன்று கோவில்களில் சேர்த்து  வைக்கப் பட்டதால் அங்கு கொள்ளையடித்துள்ளனர். இது அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. மன்னர்கள் என்றாலே கொள்ளையடிப்பதும், கூத்தடிப்பதும் தான். இதில் எந்த மதத்தின் மன்னனும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவேதான் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை மனித சமூகம் ஏற்றது.

       கடந்தகால தவறுகளை சரி செய்கிறோம் என்ற பெயரில் நிகழ்கால சந்ததிகளை மதவெறியர்கள் கொல்வது என்ன நியாயம்? பகவத்கீதையின், குரானின், பைபிளின் எந்தப்பக்கத்தில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. மதவெறியர்கள் இதைத் தூண்டினால்தான் அவர்கள் வாழ முடியும். அவர்கள் வாழ்வதற்காக அனைவரையும் சாகடிக்கிறார்கள். இதற்கு தீர்வுதான் என்ன?

               1947 ஆகஸ்ட் 15 அன்று எந்தக் கோவில் எப்படி இருந்ததோ, எந்த மசூதி எப்படி இருந்ததோ அப்படியே இருக்கவேண்டும் என்ற பொதுச் சிந்தனையை மக்களிடம் உருவாக்குவது. பிரச்சனைக்குரிய இடமாக  இல்லையேல் தேசியச் சின்னமாக அறிவித்து பிரச்சனைக்கு உள்ளானோரை அதிலிருந்து விலக்கிவைப்பது.  இதையெல்லாம்  மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள அரசுகளே செய்ய முடியும். மதச்சார்பின்மை என்றால் அரசின் செயல்பாடுகளிலிருந்து மதங்களை முற்றிலுமாக விலக்கி வைப்பதே. உலகில் பல்வேறு மதங்கள்  உருவானது. உலகின் பெரும்பான்மையான மக்களால் கடைபிடிக்கப்படுவது  பௌத்தம் கிறிஸ்தவம் இஸ்லாம் இந்து ஆகிய மதங்கள் தான். இதில் பௌத்தமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது.  ஆனால் இந்து மதம் மற்ற மதங்களைப் போல் பரவவில்லை.

         அதற்கு அடிப்படையான பிரதான காரணம் யாதெனில், ஏதேனும் ஒரு வர்ணத்தில் பிறப்பவர்கள் மட்டுமே இந்து மதத்தில் இருக்க முடியும் என்பதால் தான்.  இந்தியாவில் உருவான பௌத்தத்தை பின்பற்றும் மற்ற நாடுகளில் வாழும் மக்களை, அங்குள்ள வேற்று மதத்தவர் தங்கள் நாடுகளில் இருந்து பௌத்த மதத்தினர் வெளியேற வேண்டும் என்று சொன்னால் என்னாகும். இந்தியாவிற்கென்று சொந்த வரலாறென்று எதுவும் கிடையாது. அதன் வரலாறெல்லாம் அடுத்தடுத்து  படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின்  வரலாறே என்றார்  *மாமேதை மார்க்ஸ்.* உண்மைதானே.

No comments:

Post a Comment