கிருஷ்ணார்ப்பணம் . . ஒரு தளிகையில் ஒரு திவ்ய தேசம்
ஸ்ரீவைஷ்ணவரே!
இன்று உமக்கான தளிகை
எங்கள் திருமாளிகையில்தான்!
மறுக்காமல், மறக்காமல்
ஆத்துக்காரியும் அழைச்சுண்டு
இன்று மதியம் எங்கள்
அகத்திற்கு வாரும்!!
பாகவத பிரசாதம்!
மறுக்கத்தான் முடியுமா?
தன்னவளையும்
தன்னுடன் அழைத்துக் கொண்டு
அழைத்தவர் வீட்டிற்கு
விருந்துண்ணச் சென்றார்
அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!
நல்ல மரியாதை செய்து
இருவரையும் அமர வைத்து
விருந்துண்ணச் செய்தார்
அழைத்த வைஷ்ணவர்!!
வயிறு நிரம்பியதா?
ஸ்ரீவைஷ்ணவரே!
மனதும் நிரம்பியது!
வைஷ்ணவரே!
விழுந்து விழுந்து கவனித்த
உம் பேரன்பிலே
நாங்கள் விழுந்தே போனோம்!!
எங்காத்து
தளிகை எப்படி?
பகவானின் பிரசாதம் அது!
வார்த்தைகளுக்குள் அடங்காதது!
அருமை என்ற
ஒற்றைச் சொல்லில்
அதன் சுவையை நான்
உணர்த்திவிட முடியாது!
கவியாகப் பாடட்டுமா?
அத்தனைச் சிறப்பாய்
இருந்ததா தளிகை?
ஓய்! பொய்யொன்றும்
இல்லையே?
கவிதைக்கு பொய் அழகு!
அதனை நானும் அறிந்துள்ளேன்!
உம் கவியும் பொய்தானோ?
அதில் பொய்யே இருக்காது!
கேட்டுத்தான் பாருமே!
கண்ணமுது கோவில்!
கறியமுது விண்ணகர்!
அன்னமுது
வில்லிப்புத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை!
குழம்புமது குருகூர்!
பருப்பதனில்
திருமலையே பார்!!
அவரது திருவடிகளில்
விழுந்து சேவித்தார்
விருந்து கொடுத்தவர்!
எங்காத்து தளிகையில்
இத்தனைத் திவ்யதேசமா?
கண்களில் நீர் பனிக்க
வந்தவர்களை
வழியனுப்பி வைத்தார்!
அண்ணா!
கோபிச்சுக்காதீங்கோ!
கவி பாடும் அளவிற்கா
அவாத்து தளிகை இருந்தது?
நானும்தான் தினமும்
எத்தனையோ செய்கிறேன்!
ஒரு திவ்யதேசமும்
காணோமே?
அடியே மண்டு!
நமக்கு நாமே
பாராட்டிக் கொள்வதற்கு
பெயரா தாம்பத்யம்?
என் சுவை நீயறிவாய்!
உன் குறை நானறியேன்!
அந்தப் பாட்டுக்கு உனக்கு
அர்த்தம் புரியலையா?
அந்த அளவுக்கு
ஞானம் இருந்தால்
உங்காத்துக்கு நான் ஏன்
வாக்கப்பட போகிறேன்?
நான் மண்டுதான்!
நீங்களே சொல்லுங்கோ!!
கண்ணமுது கோவில்!
கண்ணமுது என்றால் பாயசம்!
கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!
அரங்கன் கோயிலில் பாயசம்
மண் சட்டியில்தான்
வைப்பார்கள்!
அதனால் பாயசம்
சற்று அடிபிடிப்பது
என்பது
அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!
இங்கேயும் பாயசம்
அடிப்பிடித்து இருந்ததால்
கண்ணமுது கோவில்!!
அப்படியா அண்ணா!
அடுத்தது! அடுத்தது!!!!!
கறியமுது விண்ணகர்!
கறியமுது என்றால்
காய்கறி வகைகள்!
விண்ணகர் இருக்கும்
ஒப்பில்லாத பெருமானுக்கு
நைவேத்தியம் எதுவிலும்
உப்பே சேர்க்க மாட்டார்கள்!
இவாத்து கறியமுதிலும்
இன்று உப்பில்லை!
அதனால் கறியமுது விண்ணகர்!!
அருமை அண்ணா!
அப்புறம்... அப்புறம்...
அன்னமது வில்லிபுத்தூர்
ஆனதே!
ரங்கமன்னாரின் கோயிலிலே
அன்னம் குழைந்தே இருக்குமாம்!
இங்கேயும் சாதம்
குழைந்தே இருந்ததனால்
அன்னமது வில்லிபுத்தூர்!!
இப்படியும் உண்டா?
அடுத்தது... அடுத்தது.....
சாற்றமுது மல்லை!
சாற்றமுது என்றால் இரசம்!
மல்லை என்றாலோ கடல்!
கடல் நீரைப் போல
அவாத்து சாற்றமுதிலும்
உப்பே அதிகம்!!
அண்ணா!
கொஞ்சம் அதிகமாத்தான்
போறீங்க!
அடுத்தது என்ன?
குழம்பது குருகூர்!
குருகூரிலே எது பிரசித்தம்?
நம் ஆழ்வான் இருந்த
புளியமரம்தானே!
குருகூர் என்றாலே புளிதான்!
அவாத்து குழம்பிலும்
வெறும் புளிதான்!!
கடைசியையும்
சொல்லிவிடுங்கள்!!
பருப்பதில் திருமலை!
திருமலை முழுவதும் கல்தான்!
அவாத்து பருப்பு
முழுதும் கல்லும் இருந்ததே?
அண்ணா!
இப்படியா பாடிவிட்டு வருவீர்?
அர்த்தம் புரிந்தால்
அவர்கள் தவறாக உம்மை
எண்ண மாட்டாரோ?
அடியே!
கட்டாயம் எண்ண மாட்டார்!
பாகவத சேஷம் என்று
அந்த உணவினை
அவர்கள் குடும்பம் முழுதும்
இந்நேரம் உண்டிருப்பர்!
அந்த உணவினில் அவர்கள்
சுவைகளைக் கட்டாயம்
கண்டிருக்க மாட்டார்கள்!
நான் சொல்லி வந்த
திவ்ய தேசங்கள் மட்டுமே
அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!
வெறும் சாதமல்ல அது!
இந்நேரம் அது
பிரசாதமாய் மாறியிருக்கும்!!
அண்ணா!
என்னை மன்னித்து விடுங்கள்!
ஒன்று கேட்கிறேன்!
கட்டாயம் செய்வீர்களா?
கட்டாயம் செய்கிறேன்!
என்ன வேண்டும் உனக்கு?
நல்ல தமிழ்
சொல்லித் தருகின்ற
ஒரு ஆசான் வேண்டும்!
நான் தமிழ் கற்க வேண்டும்!
நாளை என் சமையலில்
எந்தத் திவ்யதேசம்
மறைந்து வருகிறது என
நானும் அறிய வேணடும்!!
No comments:
Post a Comment