முந்தைய ஞாயிற்றுக்கிழமை சந்தோசமும், கொண்டாட்டமும்
முந்தைய ஞாயிற்றுக்கிழமை தந்த சந்தோசமும், கொண்டாட்டமும் இப்போ எவ்வளவு பணம் கொடுத்தாலும் மீண்டும் கிடைக்காது.
அப்போல்லாம் சனிக்கிழமை சாயங்காலம் வந்துட்டாலே, மறுநாள் ஞாயிற்றுக்கிழமைனு ஒரு பரபரப்பான சந்தோசம் நமக்கு வந்துரும்.
மத்த நாள்ல எல்லாம், காலையில தூங்கி எந்திரிக்கவே மனசு இருக்காது. ஆனா ஞாயிற்றுக்கிழமை காலையில மட்டும் அலாரம் வைக்காமலே ஆறு மணிக்கு முன்னாடி முழிப்பு வந்திரும்.
மத்த நாளுல காலையில பெரும்பாலும் பழைய சோறுதான் இருக்கும். ஆனா ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா இட்லியோ, தோசையோ இருக்கும்.
அத சாப்பிட்டுட்டு, அப்பா கூட கறிக்கடைக்கு போயி கூட்டத்துல நின்னு கறி வாங்கிட்டு வர்றப்பவே நாக்குல எச்சில் ஊற ஆரம்பிச்சுரும்.
நம்ம அம்மா அந்த கறிய கழுவ ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே, வெளிய பயலுக கூட விளையாட போயிருவோம்.
அப்பல்லாம் ஒவ்வோரு சீசனுக்கும் ஒவ்வோரு விளையாட்டு விளையாடுவோம்.
ஒரு டைம்ல, பம்பரம், ஒரு டைம்ல கோலிக்குண்டு, அப்பறம் டயர் உருட்டுறது, கில்லி கம்புனு அந்தந்த காலத்துக்கு ஏற்ப விளையாடுவோம்.
கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்பறமா கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சுருவோம்.
காலையில அவசர அவசரமா சாப்பிட்டு கிரிக்கெட் விளையாட போனோம்னா, மத்தியான சாப்பாடு கூட சாப்பிடாம விளையாடுவோம்.
நடுவுல, நம்ம பசங்க கையில இருந்து ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு காசு பிரிச்சு, ரஸ்னா, பாக்கெட் ஐஸ், குச்சி ஐஸ் எல்லாம் வாங்கி சாப்பிடுவோம்.
சாயங்காலம் விளையாண்டுட்டு லேட்டா வீட்டுக்கு வந்து, அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டே மத்தியானம் வச்ச கறிக்குழம்ப சாப்பிடும்போது தேனாமிர்தமா இருக்கும்.
சாயங்காலம் ஒரு ஏழு மணி ஆகுறப்ப எல்லாம், மறுநாள் திங்கள்கிழமை ஸ்கூலுக்கு போகணுமேனு மனசு தவிக்க ஆரம்பிச்சுரும்.
அரைகுறை மனசோட டிவியில போடுற படத்த பாத்துட்டு, அப்படியே படுத்து தூங்கிருவோம்.
மறுநாள் திங்கள்கிழமை காலையில தூங்கி எழுந்திரிக்க மனசே வராது. அன்னைக்கு முழுசும் ஸ்கூல்ல, முந்தின நாள் விளையாண்ட விளையாட்டு, பார்த்த படம்னு ஞாயிற்றுக்கிழமை கதையை பத்தித்தான் பேசுவோம்.
அடுத்த ஆறு நாளும் , எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும்னு நாட்கள எண்ணிக்கிட்டே இருப்போம்.
இப்பல்லாம் முன்னாடி விட மக்களுக்கு வசதி பெருகியிருக்கு, டெக்னாலஜி கூடியிருக்கு.
ஆனா, அந்த பால்ய கால ஞாயிற்றுக் கிழமை சந்தோசம் மட்டும் இப்ப வர்றதே இல்ல.
No comments:
Post a Comment