Thursday, February 2, 2023

ஒரு நிலம் வாங்கும் போது சரி பார்த்து வாங்குதல் வேண்டும்

 ஒரு நிலம் வாங்கும் போது கீழ்கண்டவற்றை சரி பார்த்து வாங்குதல் வேண்டும்

முதலில் 1975 ஆம் ஆண்டில் இருந்து வில்லங்க சான்றிதழை பார்க்க வேண்டும்.
1975 முதல்பின்னோக்கி 1908 அல்லது 1858 வரையிலான வில்லங்க சான்றிதழையும் கட்டாயம் பார்க்க வேண்டும். அதில் நிலத்தின் மதிப்பு ஸீரோ (Zero) என்றிருந்தால், அது பூமிதான நிலம் அல்லது புறம்போக்கு, வில்லங்க நிலம். அதனால் இந்த நிலம் வேண்டாம்.
டபுள் டாக்குமென்ட் (double document) நிலம்:.
பவர் ஆஃப் அட்டர்னியில் (POA) வருகிற நிலத்தை அதாவது பவரில் (power) வரும் நிலத்தை வாங்க வேண்டாம். இது டபுள் டாக்குமெண்ட்க்கு கொண்டு செல்லும். இதுபோன்ற நிலத்தை வாங்கியே தீர வேண்டும் என்றால் பவர் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். அவரைச் சந்தித்து, பவர் பத்திரம் செல்ல கூடியாதா? என்று விசாரியுங்கள். எழுதி கொடுத்தவர் ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள். முகவரும் (agent) விற்கலாம், பவர் எழுதி கொடுத்தவரும் விற்கலாம். விற்றால் அது double டாக்குமெண்ட்.
உயில் பத்திர நிலம், டபுள் டாக்குமெண்ட்.
உயில் மூலம் உரிமை மாறி இருக்கிறதா? எது கடைசி உயில் என்று பார்க்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட உயில் மூலம் விற்கப்பட்டால், அது நில விற்பனை பத்திரம். அதற்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கிறதா என்று நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும். பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது டபுள் டாக்குமென்ட்.
செட்டில்மென்ட் பத்திரநிலம் -டபுள் டாக்குமென்ட்
செட்டில்மென்ட் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். செட்டில்மென்ட் பத்திரத்தை சிவில் கோர்ட் மூலமாகத்தான் ரத்து செய்ய முடியும்.
பத்திரப் பதிவு அலுவலகங்களில் நடக்கும் ரத்து பத்திரம் செல்லாது. சப் ரிஜிஸ்டர் அலுவலகம் மூலம் ரத்தாகியிருந்தால், அதை வாங்க வேண்டாம்.உயில் பத்திரம் தாய் பத்திரமாக இருந்தால், அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரையம் நடைபெற்று இருந்தால் அந்த பத்திரத்துக்கு லிங்க் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அப்டேட் ஆகாத பட்டா மூலம் கிரயம்- டபுள் டாக்குமென்ட்
1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டத்தின் மூலம் வாங்கியவர், அதை ரெவனியூ ரெக்கார்டு எனப்படும் பட்டாவில், தற்போதைய உரிமையாளர் நான்தான் என்பதை அப்டேட் செய்யாமல் இருந்தால் 1987 ஆம் ஆண்டுக்கு முந்தைய உரிமையாளர், அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தாலோ, அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் அப்டேட் செய்யாமல் விட்டுவிட்ட அசல் உரிமையாளர் என்றோ, இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தாலோ அதுவும் டபுள் டாக்குமென்ட்.
லேவுட் பிரேம் (Layout frame), வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?
நத்தம் நிலமா,லே அவுட் பிளாட்டா என்று பாருங்கள்?. டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி பெற்ற (DTCP approved or CMDA approved) நிலம் என்றால் அவர்களின் இணையதளத்தில் ஒரிஜினல்தானா என்று உறுதிப்படுத்தி கொள்ளலாம். இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority ) DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.அது பழைய லேவுட்டை திருட்டுத்தனமாக, மறுபடியும் வரைந்து விற்பனைக்கு வந்திருக்கும்
லேஅவுட்டா என்றும் விசாரியுங்கள். ப்ளூ பிரின்ட் இருந்தால் கொண்டு சென்று பார்க், பள்ளிக்கு இடம் விட்டு லே அவுட் போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள்.
பஞ்சாயத்து அனுமதி இடங்களை வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நிலத்தை வரையறை செய்ய, நீங்கள்தான்அலைய வேண்டி இருக்கும். நத்தம் நிலம் என்றால் விஏஓவை பார்க்க வேண்டும். உங்கள் சர்வே நம்பரின் யுடிஆர் (UDR) 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, நேரில் சென்று கேளுங்கள்.
இனாம் கிராமமாக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் பட்டா வழங்கப்பட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா யுடிஆர் காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டரில் பதிவாகி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
மின் இணைப்பு, சொத்து வரி போன்றவை விற்பவர் பெயரில் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லை என்றால் மாற்றி அதற்கு பிறகு விற்கச் சொல்லுங்கள். விற்பவர் பெயரில் பட்டா இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
கூட்டு பட்டா நிலம் என்றால், நிலம் பங்குதாரர்களில், யாருக்கு எவ்வளவு இடம், எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும்.
இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். பட்டா வாங்குவது பெரிய வேலை. நிலத்தின் வகைப்பாட்டை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்கா? நெல் போராடிக்கும் இடமா, பார்க், விளையாட்டு திடல், கோயில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலமா, பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதையா (அரசு நிலம்) என்பது உட்பட பலவற்றை பார்க்க வேண்டும்.
பட்டாவின் பயனாளி யார்?. முன்பு அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா என்று பார்க்க வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும். இதற்கு விஏஓ, தாலுகா, கலெக்டர் அலுவலகத்தின் ரெக்கார்ட் செக்ஷனில், பி ரெக்கார்ட், ஓஎஸ்ஆர், ஆர்எஸ்ஆர், எஸ்எல்ஆர் நகல் வேண்டும். நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு மனு கொடுத்து, வாங்கி கொள்ளலாம்.
மைனர் இனாம் நிலம், சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் தாழ்த்தப்பட்டோருக்காகக் கொடுத்த (Depressed Class) பஞ்சமி நிலமா என்று பார்க்க வேண்டும். தொழில் முறை இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரர் காலத்தில் மணியமாக அங்கீகரிக்கப்பட்ட ஊழிய மானியங்களான நிலமா? ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.அசைன்மெண்ட் நிலம் என்ற ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா ,D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா, F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா,Assignment land என்னும் ஒப்படை நிலம் ) பட்டாக்களைப் பார்க்க வேண்டும். ஆதி திராவிடருக்கான பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும். F-பட்டா என்பது நிலசீர்திருத்த துறையால் வழங்கப்பட்டது. நிலசீர்திருத்த துறை வேறு, வருவாய்த்துறை வேறு. ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதிபடுத்தும் ஆவணம் F-பட்டா.
1970-B-Memo land = பீமா பட்டா:
இந்த பட்டா கொண்ட நிலம் விற்பனைக்கு வந்தால் வாங்க வேண்டாம். ஏனென்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்த நிலம் என்பதற்கான நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.
1956-பூமிதான நிலம்:
1950-1965 வரை வில்லங்க சான்றிதழ் கட்டாயம் வேண்டும். மேனுவலான வில்லங்கம் போட்டுப் பார்க்க வேண்டும். அதில்தான் பூமி தான போர்டுக்கு, நிலங்களை பெரும் நிலச்சுவந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த விவரம் காட்டப்பட்டு இருக்கும். பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறி இருந்தால் விஏஓ அலுவலகத்தின் ஏரெக்கார்டில் தெரியும்.
ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.
பூமி தான நிலம் என்றால் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள பூமிதான போர்டில், நிலத்தின் சர்வே நம்பர், பூமிதான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க, வேண்டும். பூமி தான நிலம் வாங்காதீர். இந்த நிலத்தை விற்கும் அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.Zero value நிலம் : வில்லங்க சான்றில் நிலத்தின் மதிப்பு ஸீரோ (Zero) என்று இருந்தால் அது பூதிதானம், புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
கோயில் நிலம் -HR&CE நிலமா?
வாங்க விரும்பும் நிலம், கோயில் நிலமா என்று பார்க்க வேண்டும்.அது 100 சதவிகிதம் கோயிலுக்குத்தான் சொந்தம். கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு. இதையும் வாங்கக் கூடாது.

No comments:

Post a Comment