Monday, February 20, 2023

தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை - "டவர் சினிமா".

 தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை - "டவர் சினிமா".

 

தஞ்சை நகரத்தில் இருந்த பழம்பெரும் திரைப்படக் கொட்டகை, பெயர் டவர் டாக்கீஸ் (இப்போதைய ஆனந்தம் சில்க்ஸ், ஞானம் ஓட்டல் இருக்குமிடத்தில் இருந்தது).

தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை அப்போதய உரிமையாளர் கிருஷ்ண ராவ் என்ற மராத்தியர் ஆவார். இவர் தான் முதன் முதலில் பேசாத சினிமா (MOVIE) காட்சிகளை முதன் முதலாக தஞ்சாவூருக்கு அறிமுகப்படுத்தியவர்.

அந்த காலகட்டத்தில் (1952/53) ஒரு பெரும் புயல் தஞ்சையைத் தாக்கியது. இந்த டவர் டாக்கீஸ் பலத்த சேதத்துக்குள்ளாயிற்று. புயல் சேதங்களைச் சரிசெய்து, 1954ல் புதுப்பித்துக் கட்டிய அந்த திரையரங்கத்துக்கு ஞானம் டாக்கீஸ் என்று பெயரிடப்பட்டது. தஞ்சையில் அது தான் பெரிய சினிமா அரங்கம் .. 1150 பேர் ஒரே நேரத்தில் சினிமா பார்க்கலாம்.

அந்த காலத்தில் .. 1940 களில் .. பேசும் திரை படம் கிடையாது .. மாறாக பேசாத ஓடும் திரை படம் தான். அதனை சினிமா (MOVIE /CINEMA) என்று குறிப்பிடுவார்கள் .. ஸ்டேஜில் தகர ஒலி பெருக்கியுடன் (Cone Megaphone - தகரத்தால் கோபுர வடிவில் செய்யப்பட்ட பேச்சு ஒலி பெருக்கி) ஒருவர் திரை அம்சத்தை, இசை பக்கவாத்தியங்களுடன், வர்ணிப்பார் (COMMENTATOR). பிறகு தான் பேசும் திரை படங்கள் அறிமுகமாயின. அதனை டாக்கி (TALKIE) என்று குறிப்பிடுவார்கள். பேசும் திரை படங்கள் (TALKIE) அறிமுகமானபின் "டவர் சினிமா", "டவர் டாக்கீஸ்" ஆனது .. பிறகு ஞானம் டாக்கீஸ் என்று 1954ஆம் வருடம் பெயர் மாற்றப்பட்டது.

ஒவ்வொரு திரை படம் ரிலீஸ் ஆகும் போது .. சினிமா போஸ்டர் தட்டியுடன், பாண்டு வாத்தியங்குளுடன், வீதி வீதியாக, பெட்ரோமாக்ஸ் லைட்களுடன் ஊர்வலம் சென்று சினிமா நோட்டீஸ் கொடுத்து, விளம்பரம் செய்வார்கள்.

அந்த கால கட்டத்தில் கலர் சினிமா கிடையாது. கருப்பு வெள்ளை திரைப்படங்கள் தான் திரை இடப்படும்.

அந்த கால கட்டத்தில் நாடகங்கள் கொட்டைகளில் நடத்தப்பட்டன. பிறகு நாடக கொட்டைகைகள், சினிமா அரங்குகளாக மாற்ற பட்டன. ஆதலால் அந்த காலத்தில் சினிமா அரங்குகளை கொட்டகை என்றும் குறிப்பிடுவார்கள்.

இந்த நாடக கொட்டைகைகளில் தான் இசை கச்சேரி , பாட்டு கச்சேரிகள் நடைபெறும். தஞ்சை நகரம் கர்னாடக சங்கீதத்தில் பெரும் பெயர் பெற்றிருந்தது. இந்த கால கட்டத்தில் நான்கு சபாக்கள் இங்கு இயங்கிக்கொண்டிருந்தன - சுதர்சனசபா, குமாரகான சபா, க்ரிஷ்ணகான சபா மற்றும் தஞ்சாவூர் தியாகப்ரம்ம சபா. காலப்போக்கில் இந்த சபாக்கள், சினிமாவின் வருகையால் செயல்படாமல் போனது .. இப்போது மிஞ்சி இருப்பது தஞ்சாவூர் தியாகப்ரம்ம சபா மட்டும் தான்.

பொதுவாக 1950களில் இரண்டு காட்சிகள் நடைபெறும். பிறகு அது மூன்று காட்சிகளாக ஆக்கப்பட்டது - அவைகளை 2மணி ஆட்டம், 6 மணி ஆட்டம் மற்றும் 10 மணி ஆட்டம் என்று குறிப்பிடுவார்கள். கடைசி கட்டின பகுதியை "தரை டிக்கெட்" என்று குறிப்பிடுவார்கள் ஏனென்றால் அதில் பெஞ்ச் இருக்காது ... தரையில் அமர்ந்து பார்ப்பார்கள் .. பிற்காலத்தில் பெஞ்ச் போட்ட பிறகும் அதை "தரை டிக்கெட்" என்று தான் குறிப்பிட்டார்கள்.

"ஹரிதாஸ்" என்ற படம் ஞானம் டாக்கீஸில் 365 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சில படங்கள் நீண்ட நேரம் வரை ஓடும், அப்போது இரண்டு இண்டெர்வெல்கள் விடுவார்கள். கிராமத்திலிருந்து சினிமா பார்க்க மாட்டு வண்டியில் புளியோதரை சாதம் கட்டிக்கொண்டு வரும் காலம் .. இடைவேளையில் மாட்டு வண்டி பக்கத்தில் அமர்ந்து புளியோதரை சாதம் சாப்பிட்டு மீண்டும் சினிமாவை பார்த்த காலம்.

அப்போது ஒவ்வொரு சினிமா ரிலீஸ் ஆகும் கொட்டகைகளில் சினிமாவில் வரும் பாடல்களை பாட்டு புத்தகமாக விற்பார்கள். இது தவிர முறுக்கு, கடலைமிட்டாய், கலர், சோடா, சிகரெட்டுகள், (பாசிங் சோ , சார்மினார் , சிசர்ஸ்), பீடி (தாஜ்மஹால், ஹார்டீன்), பார்வதி மார்க் சுருட்டு, மூக்குப்பொடி (NVS & TAS), வெத்தலைப்பாக்கு விற்பார்கள் ... ஐயர் டீ கடையில் மசால் வடை ரொம்ப பேமஸ்

1950களில் தான் சிவாஜி மற்றும் MGR ரசிகர் சங்கங்கள் (மன்றம் என்று குறிப்பிடமாட்டார்கள்) உருவாக்கப்பட்டன. பொதுவாக MGR படம் என்றல் ஞானம் டாக்கீஸில் தான் திரையிடுவார்கள்.

 

No comments:

Post a Comment